
சூப்பர் டெய்லி சேவையை டெல்லி என்சிஆர், மும்பை, புனே, ஹைதராபாத், சென்னை ஆகிய 5 நகரங்களில் ஸ்விக்கி நிறுத்துகிறது.
முன்னணி உணவுப்பொருட்கள் சப்ளை சங்கிலி நிறுவனமான ஸ்விக்கி, வெறும் சாப்பாடு மட்டுமல்லாமல் மளிகைப் பொருட்களை டெலிவரி செய்யும் சேவையையும் செய்து வருகிறது. இன்ஸ்டா மார்ட் என்ற பெயரில் மளிகைப் பொருட்கள் அதிவிரைவாக டெலிவரி செய்யப்படுகின்றன. சூப்பர் டெய்லி என்ற பெயரில் 2018ம் ஆண்டு முதல் ஸ்விக்கி நிறுவனம் இந்த சேவையை செய்து வருகிறது.
சூப்பர் டெய்லி என்பது சந்தா அடிப்படையில் பால், அத்தியாவசியப் பொருட்கள், மளிகைப் பொருட்கள் ஆகியவற்றை வழங்கும் நிறுவனமாகும். இந்த நிறுவனத்தை 2015ம்ஆண்டு புனித் குமார், ஸ்ரேயாஸ் நாகதாவானே இருவரும் சேர்ந்து தொங்கினர். இருவரும் மும்பை ஐஐடியில் பயின்றவர்கள். இந்த நிறுவனத்தை ஸ்விக்கி வாங்கியது.
2018-ம் ஆண்டு சூப்பர் டெய்லியை ஸ்விக்கி விலைக்கு வாங்கியபோது, தினசரி 6ஆயிரம் ஆர்டர்கள் மும்பையின் புறநகர் பகுதிகளுக்கு வந்தன. கடந்த 4 ஆண்டுகளில் சூப்பர் டெய்லி சேவையின் எண்ணிக்கை 2 லட்சமாக 6 நகரங்களில் அதிகரித்தது. ஆனால் லாபம் எதிர்பார்த்த அளவு இல்லை. அதேசமயம் செலவு அதிகரித்து வந்தது. இந்த நிறுவனத்தின் செயல்பாட்டின் மூலம் இதுவரை லாபம் ஏதும் ஈட்டவில்லை.
இதனையடுத்து சூப்பர் டெய்லி சேவையை டெல்லி என்சிஆர், மும்பை, புனே, ஹைதராபாத், சென்னை ஆகிய 5 நகரங்களில் நிறுத்துகிறது.
இதுகுறித்து சூப்பர் டெய்லி நிறுவனத்தின் சிஇஓ பானி கிஷன், வெளியிட்ட அறிக்கையில் “சூப்பர் டெய்லியை மறுகட்டமைப்பு செய்யும் விதமாக டெல்லி என்சிஆர், மும்பை, புனே, ஹைதராபாத், சென்னை ஆகிய 5 நகரங்களில் சேவை மே 12ம் தேதியிலிருந்து நிறுத்தப்படுகிறது. ஆனால் பெங்களூரு நகரில் தொடர்ந்து எங்கள் சேவை தொடரும். வாடிக்கையாளர்களுக்கு சந்தா தொகை மீதமிருந்தால், அல்லது செலுத்தியிருந்தால் அவர்களின் வங்கிக்கணக்கில் சேர்க்கப்படும்.
கணிசமான நேரத்தையும், பணத்தையும் நாம் செலவழிக்கிறோம். துரதிர்ஷ்டமாக இதுவரை நாம் லாபத்தை அடையவில்லை. வணிகத்தைப் பொறுத்தவரை நமது இலக்குகளில் இருந்து திசை திரும்புகிறோம். சந்தைக்கு ஏற்றார்போல் மாறவில்லை. நம்முடைய இலக்குகளை அடையவே இந்த மாற்றம்’’ எனத் தெரிவித்துள்ளார்.