
முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து தமிழகம் முழுவதும் அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சேலம் மாவட்டம் கோட்டை மைதானத்தில் ஆர்ப்பாட்டத்தில் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் “நரேஷ்குமார் என்ற ரவுடியை முதல்வர் ஸ்டாலின் பாதுகாத்துக் கொண்டிருக்கிறார். ஒரு ரவுடிக்கு வக்காலத்து வாங்கிக் கொண்டிருக்கிற, இந்தியாவிலேயே ஒரே முதல்வர் தமிழக முதல்வர் ஸ்டாலின் மட்டும்தான்.
நரேஷ்குமார் மீது 12 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகளின் விசாரணை நீதிமன்றத்தில் நடந்துகொண்டுள்ளது, சில வழக்குகளில் நீதிமன்றம் மூலம் அவருக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது. இத்தனை குற்றச் செயல்களை புரிந்தவர், ஏன் வெளியில் சுதந்திரமாக நடமாடிக் கொண்டிருக்கின்றார். நரேஷ்குமார் கைது செய்யப்பட்டிருந்தால், இந்தச் சம்பவவே நடந்திருக்காது.
திமுகவைச் சேர்ந்த ரவுடிகளும், குண்டர்களும் சென்னையிலே சுதந்திரமாக நடமாடவிட்டது அரசு.
தேர்தல் ஆணையம் திமுக அரசின் கைப்பாவையாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. காவல்துறையும், தேர்தல் ஆணையமும் கைகோத்து திமுக வெற்றி பெற துணை நின்றிருக்கிறது. இது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
மாலையில் 3 மணிக்குப் பிறகு, குண்டர்களும், ரவுடிகளும் ஆங்காங்கே இருக்கின்ற பூத்களில் நுழைந்து கள்ள ஓட்டு போட்டு வெற்றி பெற்றிருக்கின்றனர்.
வாக்கு இயந்திரத்தில் முறைகேடு செய்து, எந்த பட்டனும் அழுத்தினாலும், குறிப்பிட்ட வாக்குகளுக்கு மேல் திமுகவுக்குத்தான் விழும். அவ்வாறாக வாக்கு இயந்திரத்தை தயாரித்து திமுகவினர் வெற்றி பெற்றுள்ளனர்” என்று அவர் பேசினார்.