
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பாஜக தனித்துப் போட்டியிடும் என்று அக்கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
“நடைபெறவுள்ள நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பாஜக தனித்து போட்டியிடும். தனித்து போட்டியிடுவது என்பது கடினமான முடிவல்ல, தொண்டர்களின் கோரிக்கைக்கு செவி சாய்த்துள்ளோம். அதிமுகவுடனான இந்தக் கூட்டணி முறிவுக்கு நயினார் நகேந்திரன் பேச்சு காரணம் இல்லை. விரைவில் பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும்” எனத் தெரிவித்தார்.
கடந்த இரண்டு நாட்களாக அதிமுக – பாஜக இடையே இடப்பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை நீடித்து வந்தது. முதலில் 35 சதவீத இடங்களை பாஜக கேட்டதாகவும், பிறகு 20 சதவீத இடங்களை கோரியதாகவும் கூறப்படுகிறது. அதேசமயம், அதிமுக அதிகபட்சமாக 8 சதவீத இடங்களை மட்டுமே தர முடிவு எடுத்துள்ளதாக தகவல் வெளியானது. அதிமுகவுடனான இடப்பங்கீடு மற்றும் கூட்டணி நிலைப்பாடு குறித்து பாஜக தேசிய தலைமைக்கு முழுமையான தகவலை, தமிழக பாஜக அனுப்பியது.
இந்நிலையில் மாநில தலைவர் அண்ணாமலை உள்ளாட்சி தேர்தலில் பாஜக தனித்து போட்டியிட உள்ளதாக தெரிவித்துள்ளார்.