மது அருந்தி தள்ளாடி வந்தாரா முதல்வர் ஷிண்டே? – வீடியோ வைரலானதால் பரபரப்பு
மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே மது அருந்திவிட்டு தள்ளாடுவது போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்த வீடியோ குறித்து உண்மை கண்டறியும் ஊடகங்கள் விசாரணை நடத்தி விளக்கம் அளித்துள்ளன.
மகாராஷ்டிராவில் சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கூட்டணி அரசு அண்மையில் கவிழ்ந்தது. சிவசேனாவில் இருந்து தனி அணியாக பிரிந்து சென்ற ஏக்நாத் ஷிண்டே தலைமையில் கடந்த 30-ம் தேதி பாஜக கூட்டணி அரசு பதவியேற்றது.
சிவசேனாவில் இருந்து பிரிந்து சென்றபோது ஏக்நாத் ஷிண்டேவும் அவரது ஆதரவாளர்களும் முதலில் குஜராத்தின் சூரத் நகரில் தங்கியிருந்தனர். அங்கிருந்து அவர்கள் விமானம் மூலம் அசாமின் குவாஹாட்டிக்கு சென்றனர். சூரத் விமான நிலையத்துக்கு ஏக்நாத் ஷிண்டே சென்றபோது போதையில் தள்ளாடியது போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
இந்த வீடியோவின் உண்மைதன்மை குறித்து ‘இண்டியா டுடே’ உள்ளிட்ட முன்னணி ஊடகங்கள் விசாரணை நடத்தி விரிவான செய்திகளை வெளியிட்டுள்ளன.
‘‘முதல்வர் ஏக்நாத் ஷிண்டே சூரத் விமானத்துக்கு வந்தபோது நிருபர்களும் பொதுமக்களும் முண்டியடித்தனர். இதில் ஷிண்டே நிலைதடுமாறினார். அவரது பேச்சில் தடுமாற்றம் ஏற்பட்டது. இந்த ஒரு பகுதியை மட்டும் எடிட் செய்து உள்நோக்கத்துடன் சமூக வலைதளங்களில் வீடியோ வெளியிடப்பட்டிருக்கிறது.
வீடியோவில் ஒரு ஊடகத்தின் பெயரும் அந்த ஊடகத்தின் ஆசிரியர் பெயரும் செல்போன் எண்ணும் குறிப்பிடப்பட்டிருக்கிறது. வீடியோவின் உண்மைதன்மையை அறிந்துகொள்ள அந்த ஊடகத்தின் ஆசிரியரை தொடர்பு கொண்டபோது அவர் பதில் அளிக்க மறுத்துவிட்டார்.
சூரத் விமான நிலையத்தில் முதல்வர் ஏக்நாத் ஷிண்டே நிருபர்களுக்கு பேட்டியளித்த வீடியோ 2 நிமிடங்கள் ஓடக்கூடியது. அந்த வீடியோவை முழுமையாக பார்த்தால் உண்மை தெரியும். அவர் இயல்பாகவே நிருபர்களுக்கு பேட்டியளிக்கிறார்’’ என்று இண்டியா டுடே உள்ளிட்ட ஊடகங்கள் விளக்கம் தெரிவித்துள்ளன.