‘தலைமை குறித்த கேள்வியே இல்லை’ – சோனியா காந்தியை சந்தித்த குலாம் நபி ஆசாத்
காங்கிரஸ் கட்சியின் தலைவராக சோனியா காந்தி மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் அதிருப்தி தலைவர்களில் ஒருவரான குலாம் நபி ஆசாத் அவரை சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளார்.
உத்தர பிரதேசம், உத்தராகண்ட், மணிப்பூர், பஞ்சாப், கோவா ஆகிய மாநிலங்களில் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வியை சந்தித்தது. இதையடுத்து தோல்வி குறித்து ஆராய வேண்டும் என கட்சியின் மூத்த தலைவர்கள் கோரிக்கை விடுத்தனர். இதனிடையே, கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி தலைமையில் டெல்லியில் சில தினங்கள் முன் காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம் நடந்தது. சுமார் நான்கரை மணி நேரத்துக்கும் மேலாக நடைபெற்ற கூட்டத்தின் இறுதியில் காங்கிரஸ் கட்சியின் தலைவராக சோனியா காந்தி தொடருவார் என்று அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், சோனியா காந்தியை இன்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான குலாம் நபி ஆசாத் சந்தித்து பேசினார். சந்திப்புக்கு பின் பேசிய ஆசாத், “சோனியா காந்தியுடனான சந்திப்பு நன்றாக இருந்தது. காங்கிரஸ் கட்சியின் அனைத்து உறுப்பினர்களும் அவர் தலைவராகத் தொடர வேண்டும் என்று ஒருமனதாக முடிவு செய்துள்ளனர். இந்த சந்திப்பில் நாங்கள் சில ஆலோசனைகளை பகிர்ந்து கொண்டோம். வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் ஒற்றுமையாகப் போராடுவது குறித்த விவாதம் நடத்தப்பட்டது. இது தொடர்பாக நானும் சில ஆலோசனைகளை வழங்கியிருந்தேன். மேலும் தலைமை குறித்த கேள்வியே இல்லை” என்று தெரிவித்துள்ளார்.
முன்னதாக, 2020ல் சட்டமன்ற தேர்தல்களில் காங்கிரஸ் தோல்வி அடைந்த பிறகு தலைவரை மாற்ற வேண்டும் என 23 தலைவர்கள் அடங்கிய ‘ஜி -23’ அதிருப்தியாளர்கள் குழு போர்க்கொடி தூக்கியது. அவர்களில் குலாம் நபி ஆசாத்தும் ஒருவர். இதனால் சோனியா காந்தி உடனான அவரின் இன்றைய சந்திப்பு முக்கியமாக பார்க்கப்படுகிறது.