5ஜி இணைய சேவை சோதனை வெற்றி: ஏர்டெல்
5ஜி இணைய சேவையை இந்தியாவில் கொண்டு வருவதில் பார்தி ஏர்டெல் முன்னணியில் இருக்கும் என அந்நிறுவனத்தின் தலைவர் சுனில் மிட்டல் தெரிவித்துள்ளார்.
நாடுமுழுவதும் ஆவலுடன் எதிர்பார்க்கப்படும் 5ஜி அலைக்கறைக்கான ஏலத்துக்கு அண்மையில் மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது. ஜூலை மாதம் இறுதியில் 5ஜி அலைக்கற்றை ஏலம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.
அதன்படி வரும் 26-ம் தேதி ஏலம் நடைபெறுகிறது. இதில் 20 ஆண்டுகளுக்கு 73 ஜிகாஹெட்ஸ் அலைக்கறை ஏலம் விடப்படுகிறது. ஜியோ, ஏர்டெல், வோடஃபோன் ஐடியா ஆகிய தொலைத்தொடர்பு நிறுவனங்கள் இந்த ஏலத்தில் பங்கேற்க உள்ளன. இதில் ஜியோ முகேஷ் அம்பானியின் நிறுவனம். ஏர்டெல் மிட்டலின் நிறுவனமாகும்.
நான்காவது விண்ணப்பதாரர் அதானி குழுமம் இந்த ஏலத்தில் பங்கேற்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதானி குழுமம் அண்மையில் தேசிய நீண்ட தூரம் (NLD) மற்றும் சர்வதேச நீண்ட தூர (ILD) உரிமங்களைப் பெற்றுள்ளது. ஆனால் இதனை அதானி குழுமம் அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை.
இந்தநிலையில் 5ஜி தொடர்பாக பார்தி ஏர்டெல் தலைவர் சுனில் மிட்டல் கூறியதாவது:
நாட்டின் டிஜிட்டல் பொருளாதாரம் வளர்வதற்கு சக்திவாய்ந்த இணைய சேவையான 5ஜி இணைப்பை இந்தியாவிற்கு கொண்டு வருவதில் எங்கள் நிறுவனம் முன்னணியில் இருக்கும். இதனை நாங்கள் பெருமையுடன் கூறலாம். போட்டிக்கு முன்னதாக நெட்வொர்க்கை சோதிப்பதன் மூலம் ஏர்டெல் 5ஜி இல் எங்கள் நிறுவனம் முன்னணியில் உள்ளது. 5ஜி கிளவுட் கேமிங் அனுபவத்தை வெளிப்படுத்தி, கிராமப்புற இணைப்புக்காக 700 Mhz பேண்ட் சோதனையை வெற்றிகரமாக நடத்திய இந்தியாவின் முதல் ஆபரேட்டர் நாங்கள் தான்.
இவ்வாறு அவர் கூறினார்.