செய்திகள்தமிழ்நாடு

தமிழகத்தில் சாலை விபத்துக்களை தடுப்பதே அரசின் முதன்மை இலக்கு: முதல்வர் ஸ்டாலின்

 “தமிழகத்தில் சாலை விபத்துக்களை தடுப்பதே அரசின் முதன்மையான இலக்கு இன்னுயிர் காப்போம் -நம்மை காக்கும் 48″ என்ற திட்டத்தின் மூலம், கடந்த 18.11.2021 முதல் 18.3.2022 வரை, அரசு மருத்துவமனைகளில் 29,142 பேரும், தனியார் மருத்துவமனைகளில் 4,105 பேரும் என மொத்தம் 33, 247 பேர் இந்த 48 மணி நேர இலவச சிகிச்சையைப் பெற்றிருக்கிறார்கள்” என்று சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

2022-23 நிதியாண்டுக்கான தமிழக பட்ஜெட் கடந்த 18-ம் தேதியும், வேளாண் பட்ஜெட் 19-ம் தேதியும் தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. பட்ஜெட் மீதான விவாதம் இன்று தொடங்கியது. முன்னதாக கேள்வி நேரம் எடுத்துக் கொள்ளப்பட்டது. அப்போது சேலம் மேற்கு தொகுதி எம்எல்ஏ அருள், தமிழகத்தில் சாலை விபத்துகளைக் குறைக்க உரிய வழிகாட்டுதல்களை வகுக்க அரசு முன்வருமா? என்று கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்து முதல்வர் ஸ்டாலின் ,”சாலை விபத்துகள் எண்ணிக்கை அதிகரித்துக்க கொண்டிருப்பதைப் பற்றி, கவலையுற்று நான் உரையாற்றி இருக்கிறேன். எனவே அதனை மனதில் வைத்து நாங்கள் ஆட்சிப் பொறுப்பை ஏற்றவுடன், சாலைகளில் மக்களுக்கு பாதுகாப்பான பயணத்திற்கு வழிவகை செய்திட வேண்டுமென்பதை இந்த அரசினுடைய முதன்மையான இலக்காக நாங்கள் அமைத்துக் கொண்டிருக்கிறோம்.

அதற்காக என்னுடைய தலைமையிலே உயர் மட்டக்குழு கூட்டம் ஒன்றினை, கடந்த 18.11.2021 அன்று கூட்டி, ஆலோசித்து “இன்னுயிர் காப்போம் -நம்மை காக்கும் 48” என்ற உயிர்காக்கும் திட்டம் ஒன்று உருவாக்கப்பட்டது. சீரான சாலைகள் திட்டம், விபத்தில் சிக்கக் கூடிய அனைவருக்கும், முதல் 48 மணி நேர உயிர் காக்கக்கூடிய அவசர இலவச சிகிச்சை, சாலை பாதுகாப்பு ஆணையம், அவசர மருத்துவ சேவைகளுக்கான சட்டம், இன்னுயிர் காப்போம் உதவி செய் என்ற 5 அம்ச திட்டமாக அது இப்போது செயல்படுத்தப்பட்டு வருகிறது.

நானே மேல்மருவத்தூர் சென்று கடந்த 18.11.2021 அன்று, இன்னுயிர் காப்போம் நம்மை காப்போம் என்ற திட்டத்தை தொடங்கி வைத்தேன். அன்று முதல் இத்திட்டம் மிகத்தீவிரமாக செயல்படுத்தப்பட்டு, மக்களுக்கு சாலைகளில் பாதுகாப்பான பயணங்கள் மேற்கொள்வதற்கான அனைத்து சூழல்களும் உருவாக்கப்பட்டன.

இதன்மூலம் விபத்துகளில் சிக்கக்கூடியோரின் உயிர் காப்பாற்றப்படுகிறது. 18.11.2021 முதல் 18.3.2022 வரை, அரசு மருத்துவமனைகளில் 29,142 பேரும், தனியார் மருத்துவமனைகளில் 4,105 பேரும் என மொத்தம் 33, 247 பேர் இந்த 48 மணி நேர இலவச சிகிச்சையைப் பெற்றிருக்கிறார்கள். அவ்வாறு சிகிச்சைப் பெற்றார்கள் என்பதை விட, 33 ஆயிரம் குடும்பங்கள் இத்திட்டம் மூலம் காப்பாற்றப்பட்டிருக்கிறது என்பதை இந்த அவைக்கு நான் தெரியப்படுத்திக் கொள்ள கடமைப்பட்டிருக்கிறேன்.

நாட்டிற்கு முன்னோடியான இந்த திட்டத்திற்காக, இதுவரை 29.56 கோடி ரூபாய் செலவிடப்பட்டிருக்கிறது. இத்திட்டம் இன்னும் முழு வீச்சில் செயல்படுத்தப்பட்டு, தமிழகத்தின் சாலை பாதுகாப்பையும், சாலை விபத்தில் ஒருவர்கூட உயிரிழக்கக்கூடாது என்பதையும், உறுதி செய்யக்கூடிய உயரிய நோக்கத்தோடு அரசு இனிவரும் காலங்களில் தீவிரமாக செயல்படும் என்பதை பேரவைத் தலைவர் வாயிலாக இந்த விளக்கத்தை அறிவிக்க விரும்புகிறேன்” என்று அவர் கூறினார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button