செய்திகள்அரசியல்தமிழ்நாடு

முன்னாள் அமைச்சர் தங்கமணி வீட்டில் வருவாய் துறை அதிகாரிகள் திடீர் சோதனை

முன்னாள் அமைச்சர் தங்கமணி வீட்டில் அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். கைப்பற்றப்பட்ட ஆவணங்களில் உள்ள சொத்து மதிப்புகள் குறித்து பொதுப் பணித்துறை, வருவாய்த் துறை அதிகாரிகள் ஆய்வு செய்கின்றனர்.

கடந்த ஆண்டு லஞ்ச ஒழிப்பு சோதனையின்போது கைப்பற்றப்பட்ட ஆவணங்களில் உள்ள சொத்து மதிப்பீடுகள் சரியாக உள்ளனவா என பள்ளிபாளையத்தில் உள்ள அதிமுக முன்னாள் அமைச்சர் பி. தங்கமணி வீடு, அலுவலகத்தில் பொதுப்பணித் துறை மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகே ஆலாம்பாளையம் பேரூராட்சிக்கு உட்பட்ட கோவிந்தம்பாளைத்தில் அதிமுக முன்னாள் அமைச்சரும், குமாரபாளையம் தொகுதி எம்எல்ஏவுமான பி. தங்கமணி வீடு அமைந்துள்ளது. அவர் கடந்த 2016ம் ஆண்டு முதல் 2021ம் ஆண்டு வரை மின்சாரம் மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சராக இருந்தார். அந்த கால கட்டத்தில் அவர் பல்வேறு வகையில் ரூ. 4.85 கோடி அளவிற்கு வருவாய்க்கு அதிகமாக சொத்து சேர்ந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதுதொடர்பாக கடந்த ஆண்டு நாமக்கல் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீஸார் முன்னாள் அமைச்சர் பி. தங்கமணி (60), அவரது மனைவி டி. சாந்தி (56), அவரது மகன் டி. தரணிதரன் (32) ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்தனர். தொடர்ந்து கடந்த 2021ம் ஆண்டு டிசம்பர் 15ம் தேதி லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் கோவிந்தம்பாளையத்தில் உள்ள முன்னாள் அமைச்சர் பி. தங்கமணி வீட்டில் சோதனையில் ஈடுபட்டனர்.

வீடு மட்டுமன்றி அவர் தொடர்புடைய 32 இடங்களில் சோதனை மேற்கொள்ளப்பட்டது. அப்போது தங்கமணி வீடு உள்ளிட்ட இடங்களில் இருந்து முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. அந்த ஆவணங்களில் உள்ள சொத்து மதிப்பீடுகள் சரியாக உள்ளதாக, அதன் மதிப்பு உள்ளிட்டவை தொடர்பாக விசாரணை மேற்கொள்ள கோவிந்தம்பாளையத்தில் உள்ள முன்னாள் அமைச்சர் தங்கமணி வீட்டிற்கு பொதுப்பணித் துறை மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் சென்றனர்.

தொடர்ந்து கோவிந்தம்பாளையத்தில் உள்ள தங்கமணி வீடு, பள்ளிபாளையத்தில் உள்ள அவரது ஜவுளி அலுவலகம், சாயப்பட்டறை உள்ளிட்ட இடங்களிலும் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். காலையில் தொடங்கிய ஆய்வு மாலை 3 மணியைக் கடந்தும் நடைபெற்றது. ஆய்வின் முடிவில் இதுகுறித்த முழு விவரமும் தெரியவரும் என ஆய்வு மேற்கொள்ளும் அதிகாரிகள் வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button