
இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. தமிழ்நாட்டிலும் கொரோனா பாதிப்பு உச்சத்தை எட்டியுள்ளது. தமிழ்நாட்டில் நாள் ஒன்றுக்கு சுமார் 25,000 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்படுகிறது.
கொரோனா பாதிப்பு அதிகரிப்பதைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளது. கடந்த 2 ஞாயிற்றுக் கிழமையும் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்ட நிலையில் இந்த ஞாயிற்று கிழமையும் முழு ஊரடங்கிற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
அதைபோல் வார இறுதி நாட்களான வெள்ளி, சனி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் வழிபாட்டு தலங்களில் பக்தர்கள் தரிசனத்திற்கு அரசு தடை விதித்துள்ளது.
அதன்படி தமிழகத்தில் உள்ள அனைத்து கோயில்கள் மற்றும் வழிபாட்டு தலங்கள் இன்று மூடப்பட்டன. ஏற்கனவே பொங்கல் பண்டிகை மற்றும் தைப்பூசத்தை முன்னிட்டு கடந்த வாரம் வெள்ளிக்கிழமை முதல் தொடர்ந்து ஐந்து நாட்கள் கோயில்களில் சாமி தரிசனத்திற்கு தடை விதிக்கப்பட்டது.