எள் தீபம்: சனி பகவானுக்கு என ஏற்றப்படும் எள் தீபம் என்பது கோவிலில் மட்டுமே செய்யப்பட வேண்டிய ஒரு பரிகாரம். இதனை வீட்டில் செய்வதால் நிறைய கெடுதல்கள் ஏற்படும். கருப்பு எள் ஒரு போதும் வீட்டின் பூஜை அறையில் வைக்கக் கூடாது. சனி தோஷம் இருப்பவர்கள் கருப்பு எள்ளை தானம் செய்வது வழக்கம். அது போல் எள் கலந்த சாதத்தை காக்கைக்கு வைப்பதால் நிறைய நன்மைகள் உண்டாகும். ஆனால் எள் கலந்து தீபம் ஏற்றுவது வீட்டில் செய்வதால் தோஷ நிவர்த்தி தடைபடும். இதனால் மேலும் மேலும் பிரச்சனைகள் தான் அதிகரிக்கும்.
எலுமிச்சை தீபம்: செவ்வாய்க்கிழமை ராகு காலத்தில் துர்க்கைக்கு செய்யப்படும் பரிகாரம் இது. எலுமிச்சையில் இருக்கும் அதீத சக்தி விளக்காக ஏற்றும் பொழுது பல்வேறு அதிர்வலைகளை உண்டாக்குகிறது. ஆனால் இதனை வீட்டில் ஏற்ற கூடாது. துர்க்கை அம்மனுக்கு ராகு காலத்தில் கோவிலில் இது போல் விளக்கு ஏற்றலாம். சுபகாரியத் தடைகள் நீங்கி விடும். பிள்ளை இல்லாதவர்களுக்கு பிள்ளை வரம் கிடைக்கும். வீட்டில் இருக்கும் எவ்வளவு பெரிய பிரச்சனையாக இருந்தாலும் அந்த அம்மன் அதனை தீர்த்து வைப்பாள் என்பது ஐதீகம்.
தேங்காய் தீபம்: தேங்காய் தீபம் என்பது பெண் தெய்வங்களுக்கு செய்யப்படும் ஒரு பரிகாரம். பண ரீதியான தகராறுகள், பிரச்சனைகள் நீங்க இது போல் வழிபடுவது வழக்கம். மேலும் வேலை இல்லாதவர்களுக்கு மற்றும் குழந்தை இல்லாதவர்களுக்கு நன்மைகள் நடக்க தேங்காய் தீபம் ஏற்றி வழிபடுவது நல்ல பரிகாரம். ஆனால் இதை வீட்டில் செய்ய கூடாது. அம்பாளின் சந்நிதானத்தில் தேங்காயில் தீபம் ஏற்றி வழிபாடுகள் செய்ய வெற்றி உண்டாகும். அதே போல் தேங்காய் தீபம் ஏற்றும் பொழுது நெய்யை தவிர வேறு எந்த எண்ணையையும் பயன்படுத்தக் கூடாது என்பது நியதி.