தெய்வத் தமிழ்ப் பேரவையின் செயற்குழுக் கூட்டம், இன்று (05.08.2021) காலை – குடந்தை வட்டம் – திருவேரகம் (சாமிமலை) – சமரச சுத்த சன்மார்க்க சங்கத்தில் நடைபெற்றது.
கூட்டத்திற்கு, அருள்திரு, இறைநெறி இமயவன் அவர்கள் தலைமை தாங்கினார். தெய்வத் தமிழ்ப் பேரவை – ஒருங்கிணைப்பாளர் ஐயா பெ. மணியரசன் முன்னிலை வகித்தார். சித்தர் மூங்கிலடியார் எனும் பொன்னுச்சாமி அடிகளார் (பதிணென்சித்தர் கருவூறார் சித்தர் பீடம், சென்னை), அருட்திரு. குச்சனூர் கிழார் (வடகுரு மடாதிபதி, இராசயோக சித்தர் பீடம், குச்சனூர், தேனி மாவட்டம்), அருட்திரு. சிம்மம் சத்தியபாமா அம்மையார் (நிறுவனர் – சத்தியபாமா அறக்கட்டளை, மேச்சேரி, சேலம்), அருட்திரு. சிவவடிவேலன் (செந்தமிழ் ஆகம அந்தணர், சென்னை), அருட்திரு. ஆசீவக சுடரொளி (ஆசீவகம் – சமய நிறுவனம், திருநெல்வேலி), அருட்திரு. வை. மோகனசுந்தரம் சுவாமிகள் (தெய்வத்தமிழ் திருமுறை வழிபாட்டு மன்றம், திருவில்லிப்புத்தூர்), அருட்திரு. க. இராசமாணிக்கம் (வள்ளலார் மன்றம், தஞ்சை), அருட்திரு. மு. சுந்தரராசு (வள்ளலார் மன்றம், புதுக்குடி, தஞ்சை மாவட்டம்), முனைவர் வே. சுப்பிரமணிய சிவா (வள்ளலார் ஆய்வாளர், சிதம்பரம்), வழக்கறிஞர் ஆ. சுபாசு சந்திரபோஸ் (புதுச்சேரி), அருட்திரு. பொன்னுச்சாமி அடிகளார் (வத்தலகுண்டு, தேனி மாவட்டம்), பொறியாளர் க. முத்துக்குமாரசாமி (திருச்சி), திரு. கி. வெங்கட்ராமன் (பொதுச்செயலாளர், தமிழ்த்தேசியப் பேரியக்கம்), திரு. க. விடுதலைச்சுடர் (தலைமைச்செயற்குழு உறுப்பினர், தமிழ்த்தேசியப் பேரியக்கம்) உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தீர்மானங்கள்
கூட்டத்தில் பின்வரும் தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன.
1. தமிழ்நாட்டிலுள்ள இந்து சமய அறநிலையத்துறையின் கோயில்களில் தமிழைக் கட்டாய அர்ச்சனை மொழியாக – பூசை மொழியாக அறிவித்து தமிழ்நாடு அரசு புதிய சட்டமியற்ற வேண்டும். கடந்த காலங்களில் தமிழில் அர்ச்சனை செய்யப்படும் என சுற்றறிக்கையாகவும், அரசாணையாகவும் அறிவித்தார்கள். ஆனால், அது முறையாக செயல்பாட்டுக்கு வரவில்லை. எனவே, அந்தப் படிப்பினையை கற்றுக் கொண்டு, தமிழைக் கட்டாய அர்ச்சனை மொழியாக்கி புதிய சட்டம் இயற்ற வேண்டும்.
தமிழில் சிவ வழிபாடு, திருமால் வழிபாடு, சித்தர் வழிபாடு, நாட்டுப்புற தெய்வங்கள் வழிபாடு ஆகியவற்றை மேற்கொள்ள தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத் துறையே புத்தகங்கள் வெளியிட்டுள்ளது. அவற்றை மேலும் செழுமைப்படுத்தி, அனைத்துக் கோயில்களிலும் தமிழை அர்ச்சனை மொழியாக்க வேண்டும்.
யாராவது விரும்பிக் கேட்டால் மட்டுமே சமற்கிருத மொழியில் அர்ச்சனை செய்யும் நடைமுறையை செயல்படுத்த வேண்டும். இயல்பான அர்ச்சனை மொழியாகத் தமிழ் மொழியே இருக்க வேண்டும்.
2. தமிழ்நாட்டின் திருக்கோயில்களில் அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர்கள் ஆவதற்கு ஆகமங்கள் தடையில்லை என 2015 திசம்பர் 16ஆம் நாளன்று வழங்கிய தீர்ப்பில் உச்ச நீதிமன்றம் கூறிவிட்டது. இந்த மொழியில்தான் அர்ச்சனை நடக்க வேண்டும் என்றோ, இந்த சாதியில் பிறந்தவர் தான் அர்ச்சகர் ஆக முடியும் என்றோ ஆகமங்கள் நிபந்தனை விதிக்கவில்லை என அத்தீர்ப்பு தெளிவுபடுத்திவிட்டது.
எனவே, தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் மாவட்டத்திற்கொரு அர்ச்சகர் பயிற்சிப் பள்ளியை தமிழ்நாடு அரசு தொடங்கி, அப்பள்ளிகளில் தமிழ் வழிபாட்டுப் பயிற்சி அளிக்க வேண்டும். ஏற்கெனவே அர்ச்சகர் பயிற்சி பெற்ற 200 பேரை அர்ச்சகர்களாக பணியமர்த்த வேண்டும்.
3. தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத்துறை தமிழில் அர்ச்சனை நடத்தவும், அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் ஆக்குவதையும் அறிவித்ததை எதிர்த்து ஒரு தனிநபர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்துள்ளார். அவ்வழக்கில் தெய்வத் தமிழ்ப் பேரவை தன்னையும் இணைத்துக் கொண்டு வழக்காடி, அவரின் மனுவை தள்ளுபடி செய்ய உயர் நீதிமன்றத்தை அணுகுவது என்று இச்செயற்குழு தீர்மானிக்கிறது.
4. தமிழரின் சிவநெறிக்குப் புறம்பாக – தமிழ்ச் சமய வழிபாட்டுக்கு எதிராக – ஆன்மிகத்தையே கள்ள வாணிகம் போல் நடத்திக் கொண்டிருக்கும் ஜக்கி வாசுதேவின் ஈஷா யோகா மையத்தின் மீது உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணைக் குழு அமைத்து குற்ற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். ஈஷா யோகா மையத்தை தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் கொண்டுவந்து, சிவநெறிப்படி வழிபாடு நடத்த ஆவனசெய்ய வேண்டும்.
5. இந்து சமய அறநிலையத்துறையில் காணப்படும் குறைபாடுகளைக் கண்டறியவும், அவற்றைக் களையவும் உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில் ஆணையம் அமைத்து பரிந்துரை பெற்று, தமிழ்நாடு அரசு அதனடிப்படையில் விரைவாக செயல்பட வேண்டும்.
தெய்வத் தமிழ்ப் பேரவை