Site icon ழகரம்

சர்ச்சைக்குரிய விதமாகப் பேசியதாகக் கூறி கைது செய்யப்பட்ட ஆன்மீகப் பேச்சாளர் மஹாவிஷ்ணு சிறையில் இருந்து வெளிவந்த பிறகு பலருக்கும் உதவி!

 

 

சென்னை அசோக் நகர் அரசுப் பள்ளியில் சர்ச்சைக்குரிய விதமாகப் பேசியதாகக் கூறி கைது செய்யப்பட்ட ஆன்மீகப் பேச்சாளர் மஹாவிஷ்ணு சிறையில் இருந்து வெளிவந்த பிறகு எந்த வித சோர்வும் இன்றி தனது பணிகளை மேற்கொண்டு பலருக்கும் உதவிகளை செய்து வருகிறார்.

சமீபத்தில் உதவி கேட்ட நபருக்கு மஹாவிஷ்ணு ஆட்டோ ஒன்றை வழங்கியிருக்கும் செய்தி பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது.

அலங்காநல்லூரில் பிறந்து தொலைக்காட்சி நகைச்சுவை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு ஸ்டாண்ட் அப் காமெடியனாக சிறு வயதிலேயே புகழ்பெற்ற மஹாவிஷ்ணு பின்னர் ஆன்மீகத்தின் பக்கம் ஈர்க்கப்பட்டுள்ளார்.

ரெய்கி கற்றுக்கொண்டு,ரெய்கி ஹீலராகவும் ஆலோசகராகவும் இருந்த மஹாவிஷ்ணு தனது குருவான தத் சத் பிரம்ம ஞானி ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ காஞ்சி விஸ்வநாத சுவாமிகளின் ஆசியோடு பரம்பொருள் அறக்கட்டளையைத் தொடங்கி பலருக்கு பல உதவிகள் செய்து வந்ததோடு,ஆன்மீக சொற்பொழிவுகளும் நிகழ்த்தியுள்ளார்.

இவரது அறக்கட்டளை மூலமாக தினமும் அன்னதானம் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.ஒவ்வொரு தனிமனிதனும் தனக்குள் அமைதியை உணர்வதன் மூலம் சமூக நல்லிணக்கத்தை உருவாக்க முடியும் என்பதை இவரது தியான வகுப்புகள் மற்றும் சொற்பொழிவுகள் வாயிலாக உணர்த்தி வருகிறார்.

இவரது கருத்துக்களால் ஈர்க்கப்பட்ட மக்கள் இவரை குருஜி என்று அழைத்து தங்கள் பிரச்சனைகளுக்கு தீர்வு தேடி வருகின்றனர்.பரம்பொருள் அறக்கட்டளையின் கிளைகள் சிங்கப்பூர்,மலேசியா,இலங்கை,ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

வெளிநாடுகளிலும் தனது தியானப் பயிற்சி வகுப்புகளை மஹாவிஷ்ணு எடுத்துவந்த நிலையில் தான் கடந்த செப்டம்பர் மாதம் கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவின்படி பின்னர் விடுவிக்கப்பட்டார்.

இவர் சிறையிலிருந்து வெளிவந்த அக்டோபர் 5 ம் தேதி,இராமலிங்க அடிகளாரின் பிறந்தநாள் விழா என்பதால் அவர் அன்று விடுதலையாவது இறைவனின் அருள் என்று கூறிய அவரது ஆதரவாளர்கள் அவரை வரவேற்கப் பெருமளவில் குழுமியிருந்தனர்.

சிறையிலிருந்து வெளிவந்து தனது ஆதரவாளர்களிடம் பேசிய மஹாவிஷ்ணு,கடவுள் எதைச் செய்தாலும் அதற்கு ஒரு காரணம் இருக்கும் என்பதால் அதை அப்படியே ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று கூறியதோடு,அன்பு ஒன்றே அகிலம் ஆளும் சக்தி என்ற கருத்தைக் கூறி அவர்களுக்கு ஆசி வழங்கினார்.

இந்த சூழலில் முன்னர் கலக்கப்போவது யார் தொடரில் நடித்திருந்த நாகேஷ் செல்லக்கண்ணு என்பவர் தற்போது தான் வறுமையில் வாடுவதாகவும் தனக்கு ஏதாவது உதவ முடியுமா எனவும் கேட்டு மஹாவிஷ்ணுவைத் தொடர்பு கொண்டுள்ளார்.

என்ன உதவி செய்ய வேண்டும் எனக் கேட்டு, வாடகை ஆட்டோ ஓட்டும் தனக்கு சொந்தமாக ஒரு ஆட்டோ கிடைத்தால் வாழ்க்கை வளம் பெறும் என செல்லக்கண்ணு கூறியதுமே அவருக்கு ஆட்டோ ஒன்றை வழங்க மஹாவிஷ்ணு ஏற்பாடு செய்துள்ளார்.

ஆட்டோ செல்லக்கண்ணுவிடம் வந்து சேர்ந்துவிடும் என்று கூறிய போது, குருவே நேரடியாக வந்து அதைத் தந்தால் தங்களுக்கு பெரும் மகிழ்ச்சியாக இருக்கும் என செல்லக்கண்ணு கேட்டுக்கொண்டதைத் தொடர்ந்து,மஹா விஷ்ணுவே நேரில் சென்று ஆட்டோவை வழங்கி பரம்பொருள் அறக்கட்டளை பக்தர்கள் சார்பாக அதில் பயணம் சென்றுள்ளார்.

செல்லக்கண்ணு வீட்டிற்கு சென்ற மஹாவிஷ்ணு பிறருக்கு உதவுவதும் அதில் அவர்கள் மகிழ்ச்சியைக் காண்பதும் தான் உண்மையான போதை என்றும், எந்த பிரதிபலனும் எதிர்பாராமல் உதவி செய்பவர்களுக்குத் தேவையான சமயத்தில் மறு உதவி செய்ய பிரபஞ்சம் தனது வல்லமைகளைத் தரும் எனவும் கூறினார்.

இவரது உதவியால் தங்கள் குடும்பம் தலைநிமிரும் என்றும் அவரே தங்கள் குலசாமி என்றும் செல்லக்கண்ணு குடும்பத்தார் கண்ணீர் மல்க நன்றி தெரிவித்துள்ளனர்.

பல தடைகளைத் தாண்டியும் தனது ஆன்மீகப் பணிகளைத் தொடரும் மஹாவிஷ்ணுவுக்கு வாழ்த்துக்களும் ஆதரவும் குவிந்தவண்ணம் உள்ளது.

Exit mobile version