அரசியல்கட்டுரைகள்செய்திகள்

கி.ஆ.பெ விசுவநாதம் இந்தி எதிர்ப்புப் போராட்டம்! 2 ஆம், மூன்றாம் கட்ட வரலாறு. Trichy KAP Viswanadham Anti-Hindi Agitations of  TamilNadu.

முதல் கட்ட வரலாறு படிக்க…

https://zhagaramvoice.com/articles/trichy-kap-viswanadham-anti-hindi-agitations-of-tamilnadu/

இரண்டாவது கட்டம்‌:

  •   அண்ணாவும்‌, பெரியாரும்‌ சிறையிலிருந்த போது இந்தி எதிர்ப்பு இயக்கத்தை வெற்றிகரமாக நடத்தி வைத்த பெருமை தோழர்‌ பாண்டியனுக்கும்‌, அண்ணல்‌ கி.ஆ.பெ.விக்குமே உண்டு.
  • நினைவில்‌ உள்ள சொற்பொழிவுகள்‌: கட்டாய இந்தி எதிர்ப்புப்‌ போராட்டக்‌ காலத்தில்‌ இரண்டு விதமான பொழிவுகள்‌ நடை பெற்றன. பெரியார்‌ சிறைபுகுந்த அன்று சென்னைக்‌ கடற்கரைப்‌ பொதுக்‌ கூட்டத்தில்‌ அண்ணல்‌ கி.ஆ.பெ பேசிய பேச்சு கேட்டோர்‌ அனைவரையும்‌ கண்கலங்க வைத்தது.

(1) அறிஞர்‌ அண்ணாவின்‌ பேச்சு கங்கையாற்று வெள்ளம்‌ போல்‌ பேராவேசத்துடன்‌ மக்களை அடைந்தது.

(2) முத்தமிழ்க்‌ காவலரின்‌ பேச்சு யமுனையாற்றின்‌ பெருக்கு போல்‌ நிதானமாக நடைபெற்று வந்தது.

  • இந்த இருவேறு சொற்பொழிவுகளும்‌ மக்களுக்கு மாறி மாறிக்‌ கிடைத்து வந்தன; தமிழுணர்ச்சியும்‌ தமிழ்ப்பற்றும்‌ அவர்களிடையே கிளர்ந்தெழுந்தன. இந்தித்‌ திணிப்புக்கு ஏற்பட்ட பலத்த எதிர்ப்பின்‌ நாடியறிந்த வெள்ளையர்‌ ஆட்சி 21-02-1940இல்‌ கட்டாய இந்தித்‌ திட்டத்தைக்‌ கை நழுவி விட்டுவிட்டது.
  • நாட்டு விடுதலைக்குப்பின்‌: காங்கிரசு அமைச்சரவை சென்னை மாநிலத்தில்‌ ஏற்பட்டதும்‌ கல்வி முறை பற்றிய ஆராய நிறுவப்பெற்ற நிபுணர்குழு ”இந்திப்‌ படிப்பைக்‌ கட்டாயமாக்கக்‌ கூடாது! என்ற பரிந்துரையையும்‌ புறக்கணித்து செயற்படத்‌ தொடங்கியது. ‘புல்டோசர்‌” போல்‌, ஓமந்தூர்‌ இராமாரெட்டியாரின்‌ அமைச்சரவை 20-6-1948 இல்‌ இந்தித்‌ திணிப்பு பற்றிய அரசாணையைப்‌ பிறப்பித்தது. பதுங்கியிருந்த புலி பத்தாண்டுக்குப்‌ பிறகு மறுபடியும்‌ பாயத்‌ தொடங்கியது. இதன்‌ விளைவுகள்‌ 
  • 17-04-7928 அன்று சென்னை புனித மேரி மண்டபத்தில்‌ இந்தி எதிர்ப்பாளர்‌ மாநாடு நடைபெற்றது. மறைமலையடிகள்‌ மாநாட்டுத்‌ தலைவர்‌. இவர்தான்‌ முதல்‌ இந்தி எதிர்ப்புப்‌ போராட்டத்தில்‌ அதனைத்‌ தொடங்கி வைத்துத்‌ தலைமை பூண்டனர்‌. அதில்‌ ஒதுங்கி நின்ற திரு.வி.க, ம.பொ.சி. நாரணதுரைக்‌ கண்ணன்‌, டி. செங்கல்வராயன்‌ போன்றோர்‌ இதில்‌ பங்கு கொண்டனர்‌; அரசை வன்மையாகக்‌ கண்டித்தனர்‌. தந்த பெரியார்‌ அறிஞர்‌ அண்ணா அருணகிரி அடிகள்‌ ஆகியோர்‌ மீண்டும்‌ அறப்‌ போராட்டம்‌ தொடங்க வேண்டும்‌ என்று அறைகூவல்‌ விட்டனர்‌.
  • இதன்‌ விளைவாக 15-9-1928 முதல்‌ நாடு முழுவதும்‌ 300க்கும் மேற்பட்ட ஊர்களிலுள்ள பள்ளிகள்‌ முன்பு தொண்டர்கள்‌ மறியல்‌ போரை 100 நாட்கள்‌ வரை தொடர்ந்து நடத்தினர்‌. 144 தடையுத்தரவுகள்‌ மீறினர்‌. நான்‌ தலைமையாசிரியனாக இருந்த பள்ளி முன்பும்‌ இம்மறியல்‌ போராட்டம்‌ நடைபெற்றது. நான்‌ தடுத்து நிறுத்தவில்லை. ஏன்‌ தெரியுமா?
  • பள்ளியில்‌ இந்தி கற்‌பிக்கவில்லை. தவிர, ஆசிரியராக இருக்கும்வரை அரசியலில்‌ பங்குகொள்ளலாகாது என்ற கொள்கையுடையவன்‌.” இதனால்‌ பல்வேறு மொட்டைக்‌ கடிதங்கள்‌ மாவட்டக்‌ கல்வி அதிகாரிக்கு அனுப்பப்‌ பெற்றன.
  • மறுமொழி கேட்டு அவை எனக்கு வந்தன. நான்‌ ‘“மறியலை நான்‌ நடத்தவில்லை; தூண்டவும்‌ இல்லை. பள்ளியிலும்‌ இந்திக்‌ கற்பிக்கவும்‌ இல்லை. இதனைத்‌ தடுத்து நிறுத்துவது காவலர்‌ பணி” என்று மறுமொழி தந்து வாளா இருந்துவிட்டேன்‌. சட்டத்தின்படி நடப்பவனாதலால்‌ எந்த அதிகாரத்துக்கும்‌ பணிய வேண்டியதில்லை. 
  • இரண்டாவது இந்தி எதிர்ப்புப்‌ போராட்டமும்‌ அதனால்‌ ஏற்பட்ட கிளர்ச்சியும்‌ 1949 இல்‌ வெற்றியைத்‌ தந்தன. கல்வி அமைச்சராக இருந்த திரு தி.சு. அவினாசிலிங்கம்‌ தம்‌ பதவியைத்‌ துறந்தார்‌. கட்டாய இந்தி திட்டமும்‌ கைவிடப்‌ பெற்றது. தமிழ்‌ மக்கள்‌ திரும்பவும்‌ அமைதி பெற்றனர்‌.

மூன்றாவது கட்டம்‌:

இந்தக்‌ கட்டத்தில்‌ இந்தித்‌ இணிப்புத்‌ திட்டம்‌ பல்வேறு மாற்றங்களை அடைந்தது.

(1) இந்தியில்‌ மாற்றங்கள்‌: பாமர மக்களும்‌ புரிந்து கொள்ளும்‌ வகையில்‌ “இந்துஸ்தானி என்ற கலப்பு மொழி பயன்படும்‌ என்று காந்தியடிகள்‌ கருதினார்‌. ஆனால்‌ அவர்‌ காலத்திற்குள்‌ இந்தியாவிலுள்ள உருது பாரசீகச்‌ சொற்கள்‌ அகற்றப்பெற்றும்‌, தூய வடமொழிச்‌ (சமஸ்‌கிருதம்‌) சொற்கள்‌ கொண்ட ‘இந்தி ‘யாகவும்‌ உருமாற்றம்‌ செய்யப்‌ பெற்றும்‌ இந்தி வெறியர்கள்‌ ‘நயா இந்துஸ்தானி” என்ற புதிய பெயர்‌ இட்டனர்‌.

கி.ஆ.பெ.வி. மொழியில்‌ கூறினால்‌ “சமஸ்கிருதத்தின்‌ வாலறுக்கப்‌ பெற்ற நரிதான்‌’. 

விளைவுகள்‌:

(அ) ஒற்றுமைக்குப்‌ பதிலாக வேற்றுமையைப்‌ பெருக்கியது. மொழிப்‌ பிணக்குகளை ஏற்படுத்தியது. இந்தப்‌ புதிய மொழியின்‌ தனித்‌ தகுதியாவன:

(1) இந்திய மக்களின்‌ தொகை என்றால்‌ இந்தி பேசுவோரின்‌ தொகை 13.3 கோடி.

(2) இவர்கள்‌ ஒரே வகையான இந்தியைப்‌ பேசுபவர்கள்‌ அல்லர். இந்தியில்‌ 96 வகைகளுக்கு மேல்‌ உள்ளன.

(3) இவை ஒவ்வொன்றும்‌ ஒன்றுக்கொன்று மாற்றமும்‌ முரண்பாடுகளும்‌ கொண்டவை, ஒரு பகுதியினர்‌ பேசும்‌ இந்தி பிறிதொரு பகுதியினருக்குப்‌ புரிவதில்லை.

(4) பிகாரி, மைதிலி, அவதி, மானக சந்திஷ்‌, கர்‌கி, போஜ்புரி, மேல்‌ இந்தி,கீழ்‌ இந்தி, கரிபோகி எனப்‌ பல பிரிவுகள்‌ இந்தியில்‌ உண்டு.

(5) கரிபோலி பிரிவு டில்லி வட்டாரத்தில்‌ பேசப்‌ பெறுகின்றது. இதனையே இந்திய நாடடின்‌ ஆட்சி மொழியாக்கப்‌ பெரு முயற்சி செய்யப்‌ பெற்றது.

(ஆ) ‘இந்துஸ்தானி’ – ‘நயா இந்துஸ்தானி! ஆகியவற்றால்‌ ஒற்றுமையை உண்டாக்க முடியவில்லை.

(இ) இந்து-முஸ்லீம்‌ ஒற்றுமையைப்‌ பலப்படுத்த முடியவில்லை.

(ஈ) எண்ணிக்கை குறைந்த இதனை எண்ணிக்கைமிக்கவர்‌ மீது திணிக்கவே துணிந்தனர்‌.

(2) கொள்கை மாற்றங்கள்‌: ஆட்சி மாறமாற ஆட்சி மொழிக்‌ கொள்கையும்‌ மாறி மாறி வந்தது.

(அ) இத்தியை விரும்பிக்‌ கற்றுக்கொள்ளலாம்‌ என்று கூறியவர்கள்‌ பின்னர்‌ இந்தியைக்‌ கட்டாய பாடமாக்கினர்‌.

(ஆ) பின்னர்‌ ஆங்கிலத்திற்கு இணையாக்கினர்‌.

(இ) அடுத்து ஆங்கிலத்தைக்‌ கீழே இறக்கி விட்டு அவ்விடத்தில்‌ இந்தியை அரியணையில்‌ ஏற்றத்‌ இட்டமிட்டனர்‌.

இதனைக்‌ கோணல்‌ முறையில்‌ செயற்படுத்தினர்‌. பள்ளியில்‌ இந்தி, மைல்‌ கற்களில்‌ இந்தி, இருப்பூர்தி அஞ்சல்‌ நிலையங்களில்‌ இந்தி, தந்தியில்‌ இந்தி, ஆட்சி மொழியில்‌ இந்தி எனப்‌ படிப்‌.படியாக “எங்கும்‌ இந்தி, எதிலும்‌ இந்தி’ என்ற நிலைக்கு அரசு கொண்டு வந்துவிட்டது.

3.எதிர்ப்புகள்‌, கிளர்ச்சிகள்‌: தமிழர்கட்கு இதனைப்‌ பார்த்துக்‌ கொண்டு வாளா இருக்க முடியவில்லை. 

(அ] 1952 ஆகஸ்டு முதல்‌ இருப்பூர்தி அஞ்சல்‌ நிலையப்‌ பெயர்ப்‌ பலகைகளில்‌ உள்ள இந்தி எழுத்துகளைத்‌ தார்‌ கொண்டு அழிக்கும்‌ இயக்கம்‌ தொடங்கப்பெற்றது.

(ஆ) 1953, 1954 ஆம்‌ ஆண்டுகளில்‌ (ஆகஸ்டு மாதம்‌) இத்திட்டம்‌ தீவிரப்‌படுத்தப்‌ பெற்றது.

இந்திமொழி பேசுவோர்‌ தொகை பலத்தைக் காட்டியும்‌, நாடாளுமன்றத்தில்‌ ‘பெரும்பான்மை’ என்னும்‌ அசுர பலத்தைக்‌ காட்டியும்‌ அரசின்‌ பிடிவாதம்‌ தொடர்ந்தது.

உலக முழுவதும்‌ ஆங்கில மொழிமூலம்‌ தொடர்பு கொள்ள வாய்ப்பிருந்தும்‌ இந்தி பொதுமொழி என்னும்‌ குறுகிய கண்ணோட்டத்தில்‌ உலாவர முன்‌ வந்துள்ள இந்தி ஆதிக்கவாதிகளைப்‌ பற்றி கி.ஆ.பெ.வி, அவர்கள்‌ வேடிக்கையாகவும்‌ கருத்தோடும்‌ கூறியது: ”பெரிய பூனைக்கு ஒரு துளை செய்த பிறகு குட்டிப்‌ பூனைக்காக வேறு ஒரு சிறுதுளை செய்வது முட்டாள்தனம்‌; பெரிய சந்து வழியாகவே குட்டிப்‌ பூனையும்‌ வெளியேற முடியும்‌. எனவே இரண்டு துளைகள்‌ செய்தது வீண்‌ வேலை” என்பதாக.

4.புதியதிட்டம்‌: ”தமிழ்நாட்டுக்கு ஆட்சி மொழியாக இருக்க தமிழ்‌ ஒன்றே போதும்‌; வெளித்தொடர்புகட்கு ஆங்கிலம்‌ போதும்‌’” என்று தீர்மானித்துக்‌ கையெழுத்து இட்டவர்களில்‌ அறிஞர்‌ அண்ணாவும்‌ அருமை இராஜாஜியும்‌ அடங்குவர்‌. கி.ஆ.பெ.வி இதில்‌ கருத்து வேறுபாடு கொண்டார்‌. அவர்‌ மறையும்‌ வரை இக்கருத்து வேறுபாடு மாறவில்லை.

(அ) தமிழ்‌ அன்பர்களும்‌, இந்தி எதிர்ப்பு இயக்கத்‌தினரும்‌ அவ்வியக்கத்தின்‌ முன்னோடிகளான திராவிடக்‌ கழகம்‌ தி.மு.க. ஆகியோரும்‌ அவ்வப்‌ போது நடத்தி வந்த மறியல்‌ போராட்டம்‌ இந்திச்‌ சொற்களை அழித்தல்‌ போன்ற முறைகள்‌ இந்தி ஏகாதிபத்தியவாதிகட்குச்‌ செவிடன்‌ காதில்‌ ஊதிய சங்கொலி போலாயிற்று.

(ஆ) ”மக்கள்‌ விரும்பும்‌ வரை ஆங்கிலம்‌ மாற்று மொழியாக விளங்கும்‌. இதுபற்றிய முடிவு இந்தி பேசும்‌ மக்களுக்கு விடமாட்டேன்‌; இந்தி பேசாத மக்களுக்கே விடுவேன்‌” என்று இந்திய முதல்வர்‌ சவகர்லால்‌ நேரு அளித்த உறுதி மொழியை அவரைச்‌ சார்ந்தோரே மதித்ததாகத்‌ தெரியவில்லை. ஒரு பக்கம்‌ திணியோம்‌ என்று கூறிக்‌ கொண்டே மறுபக்கம்‌ அதனை வலிந்து திணிக்கும்‌ செயலில்‌ இறங்கி விட்டனர்‌.

(இ) இவற்றின்‌ எதிரொலி நேரு தென்னகத்திற்கு வரும்‌ பொழுது மீனம்பாக்கம்‌ விமான நிலையத்தின்‌ முன்பும்‌ இராஜாஜி மண்டபத்தின்‌ முன்பும்‌ கறுப்புக்‌ கொடிகாட்டி கண்டனக்குரல்‌ எழுப்‌பினர்‌ இதனால்‌ அடிதடிக்குள்ளாக அவதியுற்றதே பலன்‌.

(ஈ) இதன்‌ பின்‌ 27-4-7980 முதல்‌ இந்திய குடியரசுத்‌ தலைவராக இருந்த திரு.பாபு இராஜேந்திர பிரசாத்‌ 26-01-65 முதல்‌ இந்தி மட்டுமே ஆட்சி மொழியாக விளங்கும்‌ என்று அறிவிப்பு செய்தார்‌. இது வெந்த புண்ணில்‌ வேல்‌ பாய்ச்சினது போலாயிற்று தலைமைப்‌ பொறுப்பிலிருந்தவர்களின்‌ வாக்குறுதிகள்‌ காற்றில்‌ பரந்தன.

(உ) ஆகவே 6-8-60இல்‌ தமிழகம்‌ எங்கும்‌ குடியரசுத்‌ தலைவருக்குக் கறுப்புக்‌ கொடி காட்டப்‌ பெறும்‌ என்று கோடம்‌பாக்கத்தில்‌ தி.மு.க கூட்டிய இந்தி எதிர்ப்பு மாநாட்டில்‌ தீர்மானிக்கப்‌ பெற்றது” இதனை அறிந்த குடியரசுத்‌ தலைவர்‌ ஐதராபாத்துக்கு வருகை புரிந்து பேசும்போது “*இந்‌தி பேசா மக்களின்‌ இடர்கள்‌ உணர்ச்சிகள்‌ புறக்கணிக்கப்‌ படமாட்டா என்று உறுதியாக நம்புகிறேன்‌” என்ற வாக்கு தந்தார்‌.

5.ஆங்கிலத்தின்‌ தடுமாற்ற நிலை: இந்தி பேசாத மக்களுக்கு ஓரளவு உதவியாக இருந்த ஆங்கிலம்‌ 1959-இல்‌ ஆட்சி மொழியிலிருந்து மாற்று மொழியாகவும்‌ (Alternate Language) பிறகு துணை மொழியாகவும்‌ (Associate Language) படிப்படியாகவும்‌ கீழிறக்கப்பட்டது. வேண்டுமானால்‌ இணைமொழியாக வைத்துக்‌ கொள்ளப்படும்‌ என்றும்‌ வேண்டா வெறுப்பான நிலைக்கு வந்தது.

6.இந்தி ஆட்சி மொழியாகும்‌ நாள்‌: இந்தித்‌ திணிப்பால்‌ ஏற்படும்‌ தீமைகளை அவ்வப்போது மக்களுக்கு எடுத்துக்‌ கூறி எழுச்சி கொள்ளச்‌ செய்துவரும்‌ அமைப்புகளும்‌ இயக்கங்‌களும்‌ கட்சிகளும்‌ சட்டப்படி 26-1-65க்குப்‌ பிறகு இந்தி ஆட்சி மொழியாகும்‌ எனும்‌ அவலநிலை ஏற்படுவதைக்‌ கண்டு பதை பதைத்தன.

(அ) தி.மு.க. சென்னையில்‌ கூட்டிய (ஜூன்‌ 5, 9, 20-1962-இல்‌) இந்தி எதிர்ப்பு மாநாட்டில்‌ ”இந்திய அரசியல்‌ சட்டத்தில்‌ உள்ள மொழிப்பிரிவின்‌ 77வது பகுதியை வெளிப்‌படையாக அறிவித்துவிட்டு பொதுக்கூட்டத்தில்‌ கொளுத்துவேன்‌” என்று அறிஞர்‌ அண்ணா அறிவித்தார்‌.

(ஆ) இதனை 77-4-63 இல்‌ சென்னை மெரீனா கடற்கரையில்‌ தாமே நடத்த இருப்பதாகவும்‌ குறிப்பிட்டார்‌. அதனை நடத்த விடாமல்‌ மாநில அரசு (முதல்வர்‌ மீ. பக்தவத்சலம்‌) தடுத்தது. அவர்வரும்‌ வழியில்‌ கைது செய்ய ஏற்பாடு செய்தார்‌. குதிரைப்‌ படையை ஏவி கூட்டத்தைக்‌ கலைத்தார்‌.

(இ) தமிழுக்காகப்‌ பலர்‌ தீக்குளித்தனர்‌; மூட்டைப்‌ பூச்சி விஷம் உண்டு உயிர்துறந்தனர்‌. இந்தக்‌ கிளர்ச்சியில்‌ மாணவர்‌ படையும்‌ பங்கு கொண்டது.

(ஈ) இந்தி அரியணையில்‌ ஏறும்‌ நாளான (26-1-65)ஐ துக்க நாளாகக்‌ அனுசரிக்கும்படி தி.மு.க மக்களைக்‌ கேட்டுக்‌ கொண்டது. இதில்‌ 923 பேர்‌ கைதானதில்‌ மாணவர்‌ 124 பேர்‌.

(உ) ‘தமிழக மாணவர்‌ இந்தி எதிர்ப்புக்குழு” கூடி (8-2-65) 9-10-65இல்‌ அஞ்சல்‌ நிலையங்கள்‌ முன்பு மாணவர்களை நேரடியாக மறியல்‌ செய்யும்படி பணித்தது. 

(ஊ) 11-10-65 அன்று தமிழ்நாடு முழுவதும்‌ இருப்பூர்திகள்‌ நிறுத்தப்பெற்றன.

(எ) ஆங்காங்கே கறுப்புக்கொடி ஏற்றுதல்‌, வாகனங்‌களை நிறுத்திச்‌ சுவரொட்டிகளை ஒட்டுதல்‌, இந்தி எழுத்துகளை அழித்தல்‌, இந்தி நூல்களை எரித்தல்‌, 144 தடையுத்தரவை மீறுதல்‌-இவை நாடெங்கும்‌ இயல்பான நிகழ்ச்சிகளாகி விட்டன.

(ஏ) இந்தித்‌ திரைப்படங்களைத்‌ தமிழகமெங்கும்‌ காட்ட முடியாத நிலையை மாணவர்கள்‌ உண்டாக்கி விட்டனர்‌. அவர்கள்‌ ஆங்காங்கே கைது செய்யப்‌ பெற்றுக்‌ கொடுமைகளுக்‌குள்ளாயினர்‌. இதனால்‌ கிளர்ச்சி மேலும்‌ வலுத்தது.

(ஐ) திரு. லால்‌ பகதூர்‌ சாஸ்திரி: (பிரதமர்) வானொலியில்‌ பேசிய சில மணித்துவிகளுக்குள்‌ தமிழகத்தில்‌ நடைபெற்ற அடக்கு முறைகளையும்‌, துப்பாக்கிச்‌ சூட்டினால்‌ ஏற்பட்ட உயிரிழப்புகளையும்‌ அறிந்த மைய ஆட்சியிலிருந்த திரு.சி. சுப்பிரமணியமும்‌ திரு. ஓ.வி. அழகேசனும்‌ தம்‌ பதவிகளைத்‌ துறந்தனர்‌.

(ஒ) கி.ஆ.பெ அண்ணலின்‌ செயல்‌: இந்த நிலையைக்‌ கண்டு கி.ஆ.பெ.வி. 26-01-65 அன்று திருச்சி தேவர்‌ மண்டபத்தில்‌ (மேற்கு அரண்சாலையில்‌ உள்ளது) இந்தி எதிர்ப்பு மாநாட்டைக்‌ கூட்டினார்‌. இந்தியை நுழைக்க விட்ட இராஜாஜியும்‌ தம்‌ கருத்தை மாற்றிக்‌ கொண்டு எதிர்ப்பாளர்‌களுடன்‌ சேர்ந்து முன்னணியில்‌ நின்றார்‌. இந்தி எதிர்ப்பை முன்‌ வைத்து காங்கிரசு ஆட்சியை ஒழிக்க, ஒன்பது அரசியல்‌ கட்சித்‌ தலைவர்களை ஒன்று கூடச்‌ செய்து தட்டம்‌ வகுக்கச்‌ செய்தார்‌ நம்‌ அண்ணல்‌.

(ஓ) 1965 சனவரி 26 இல்‌ கட்டாய இந்தியை எதிர்த்துத்‌ தடியடி பட்டும்‌, குண்டடி பட்டும்‌, தீக்குளித்தும்‌ உயிர்நீத்த தமிழர்களின்‌ தொகை 100க்கு மேற்பட்டிருக்கும்‌. அக்கொடுமையைக்‌ கண்டு நம்‌ கி.ஆ.பெ.வி எதுவும்‌ உண்ணவும்‌ இல்லை; எவருடனும்‌ பேசவும்‌ இல்லை. அந்த நாள்‌ நினைவாக ஒவ்வொரு ஆங்கில மாதம்‌ சனவரி 26 இல்‌ உண்ணா நோன்பும்‌, பேசா நோன்பும்‌ பல ஆண்டுகள்‌ கடைப்பிடித்தார்‌.

(ஒள) இவரை தேசத்துரோகச்‌ சட்டத்தின்‌ கீழ்‌ கைது செய்து வழக்கும்‌ தொடர்ந்தது. இருச்சி மாவட்ட நீதிபதி இவருக்கு 6 திங்கள்‌ சிறைத்தண்டனையும்‌ ரூ. 1000/- அபராதமும்‌ விதித்தார்‌. அபராதமும்‌ கட்டி சிறையிலும்‌ தண்டனையை அனுபவித்து 2 திங்களுக்குப்‌ பிறகு சென்னை உயர்நீதி மன்றம்‌ இவரை விடுதலை செய்தது.

(ஃ) அப்போது கி.ஆ.பெ.வி ஓர்‌ அறிக்கை வெளியிட்டார்‌. இந்த அறிக்கையை அச்சிட்ட அச்சகத்தினர் மீதும்‌, தம்‌ பத்திரிக்கையில்‌ இத்துண்டு அறிக்கை பற்றி செய்தி வெளியிட்ட நாளேடுகளின்‌ மீதும்‌ அரசு பாயத்‌ தவறவில்லை.

7.பிற பகுதிகளில்‌: தமிழகத்தில்‌ நடைபெற்ற கிளர்ச்சி ஆந்திரம்‌, கர்நாடகம்‌, கேரளம்‌ ஆகிய பகுதிகளிலும்‌ பரவியது. வங்காளமும்‌ தமிழகத்திற்குத்‌ தோள்‌ கொடுத்தது. 

இவற்றை அறிந்த திருமதி இந்திராகாந்தியும்‌, திரு டி.சஞ்சீவய்யாவும்‌ சென்னைக்குப்‌ பறந்தோடி வந்து மாணவர்‌களையும்‌ தலைவர்கள்‌ சிலரையும்‌ சந்தித்துப்‌ பேசினர்‌. அதிகம்‌ பேசாத காமராசர்‌ இந்த நெருக்கடியிலும்‌ தம்‌ கருத்தைத்‌ தெரிவிக்காமல்‌ வாய்‌ மூடிக்‌ கிடந்தார்‌. மத்திய அமைச்சர்கள்‌ வாரி வழங்கும்‌ வாக்குறுதிகட்குப்‌ பொருள்‌ இல்லை என்பதை மக்கள்‌ அறிந்து கொண்டனர்‌.

8, கிளர்ச்சியால்‌ நன்மைகள்‌: மேற்குறிப்பிட்ட நிலை அடுத்த தேர்தலில்‌ பிரதிபலித்தது. தேர்தலில்‌ மாணவர்கள்‌ முன்னணியில்‌ நின்றனர்‌. இதனால்‌ பக்தவத்சலம்‌, காமராசர்‌ சுப்பிரமணியம்‌, அழகேசன்‌ உள்ளிட்ட காங்கிரசுகாரர்கள்‌ படுதோல்வி அடைந்தனர்‌. காமராசரை ஒரு கல்லூரி மாணவர்‌ தோற்கடித்தார்‌. இந்தியை எதிர்த்த தி.மு.க. ஆட்சியினரை வெற்றி வாகைசூட வைத்து அறிஞர்‌ அண்ணாவை முதலமைச்சராகக்‌ கொண்ட தமிழக அரசை அமையச்‌ செய்து விட்டனர்‌, தமிழக மக்கள்‌!

9, புதிய திருப்பம்‌: தமிழகத்தில்‌ இந்தி ஆதிபத்தியத்தைத்‌ தடுத்து நிறுத்தும்‌ வல்லமை படைத்த தமிழக அரசு ஏற்பட்டுள்ளது. இது தமிழ்‌ மொழியை ஆட்சி மொழியாகக்‌ கொண்டுவந்து அதற்கு உற்ற துணையாக ஆங்கிலம்‌ மட்டும்‌ இருந்தால்‌ போதும்‌ என்று திட்டவட்டமாகத்‌ தீர்மானித்‌துள்ளது. இனி இந்தி ‘வாலாட்டம்‌” நடைபெறாது என்ற தெளிவான நிலை ஏற்பட்டுவிட்டது. இதனால்‌ மொழியறிஞர்‌ ஞா.தேவநேயப்‌ பாவாணர்‌ திருவாயினின்றும்‌, 

இந்தி எதிர்ப்பெங்கே? இந்நாட்‌ டுணர்வெங்கே? 

முந்தி மொழிமுத்‌ தமிழெங்கே-உந்தி 

வதிவாழ்‌ திருச்சி வதியும்‌ கி.ஆ.பெ. 

விசுவநாதம்‌ இல்லாக்‌ கால்‌ 

என்ற வெண்பாவும்‌ பிறந்து கி.ஆ.பெ. அண்ணலின்‌ புகழை இந்தி எதிர்ப்புப்‌ போராட்டம்‌ நிலை நிறுத்திவிட்டது.

User Rating: Be the first one !

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button