காப்புக்காடுகளுக்கு அருகில் குவாரிகள் அமைக்க அனுமதிப்பதா? இயற்கையை அழிக்கும் ஆணையை ரத்து செய்க! டாக்டர் அன்புமணி ராமதாஸ் கண்டனம்! | Mining.
Editor Zhagaram
தமிழ்நாட்டில் காப்புக்காடுகளைச் சுற்றியுள்ள ஒரு கி.மீ சுற்றளவில் கல் குவாரிகள் மற்றும் சுரங்கங்களை அமைக்க விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கி தமிழக அரசின் தொழில்துறை ஆணையிட்டிருக்கிறது. குவாரி உரிமையாளர்களின் நலன்களை பாதுகாப்பதற்காக சுற்றுச்சூழல் மற்றும் வனவிலங்குகளின் பாதுகாப்பை பலி கொடுக்க தமிழக அரசு தீர்மானித்திருப்பதை ஏற்க முடியாது; இது கண்டிக்கத்தக்கது.
தமிழ்நாடு அரசின் தொழில்துறை இது தொடர்பாக பிறப்பித்திருக்கும் திசம்பர் 14-ஆம் தேதியிட்ட அரசாணையில்,‘‘கடந்த 2021-ம் ஆண்டு நவம்பர் 3-ஆம் தேதியன்று தமிழக அரசின் தொழில் துறையால் கொண்டு வரப்பட்ட சட்டத் திருத்தத்தின்படி, பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியின் எல்லையில் இருந்து ஒரு கிலோமீட்டர் சுற்றளவுக்குள் சுரங்கம் தோண்டுதல், பாறை உடைத்தல் மற்றும் அரைத்தல் ஆகிய பணிகளுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. இதன் மூலம், ஒரு கிலோமீட்டர் தொலைவுக்குள் இருந்த பல குவாரிகள் செயல்பட முடியாமல் இருந்தது அரசின் கவனத்துக்கு வந்தது. அதைத் தொடர்ந்து கடந்த ஜூன் 16-ஆம் தேதி நடைபெற்ற சுரங்கத்துறை மாவட்ட அதிகாரிகளுடனான ஆய்வுக்கூட்டத்தில், குவாரி, சுரங்கம் தோண்டுவதற்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்க முடிவு செய்யப்பட்டது” என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அரசின் இந்த முடிவு மிகவும் ஆபத்தானது; இயற்கையை அழிக்கக் கூடியது.
காப்புக்காடுகளை ஒட்டிய பகுதிகளில் ஒரு கிலோ மீட்டர் சுற்றளவில் எந்த வகையான குவாரிகளையும், சுரங்கப் பணிகளையும் அமைக்கக் கூடாது என்று கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் இதே அரசு தான் ஆணை பிறப்பித்தது. காப்புக்காடுகளையொட்டிய பகுதிகளில் குவாரிகள் செயல்பட்டு வருவது அப்போது அரசுக்கு தெரியாமல் இருந்திருக்க வாய்ப்பில்லை. ஆனாலும், தடை விதிக்கப்பட்டதன் நோக்கம் காப்புக்காடுகளையும், இயற்கை வளங்களையும் பாதுகாக்க வேண்டும் என்ற நல்ல எண்ணம் தான். ஆனால், இப்போது அதற்கு முற்றிலும் எதிரான நிலைப்பாட்டை தமிழக அரசு எடுத்திருப்பதைப் பார்க்கும் போது, இயற்கை வளம், சுற்றுச்சூழல் மீது அரசுக்கு ஆர்வம் இல்லையோ? எனத் தோன்றுகிறது.
அதுவும் சுரங்கங்கள் அமைப்பதற்கான தடை நீக்கப்பட்டதற்காக அரசுத் தரப்பில் கூறப்பட்டிருக்கும் காரணம் மிகவும் வினோதமானது. தடை விதிக்கப்பட்ட ஒரு கி.மீ பகுதியில் செயல்படாமல் முடங்கி விட்ட குவாரி உரிமையாளர்களின் விருப்பத்தையும், அரசுக்கு கிடைக்கக்கூடிய வருமானத்தையும் கருத்தில் கொண்டு தான் இந்த முடிவு எடுக்கப்பட்டிருப்பதாக அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இயற்கை வளம், சுற்றுச்சூழல், வனவிலங்குகளின் பாதுகாப்பு ஆகியவற்றை விட அரசுக்கு கிடைக்கும் வருமானமும், கல்குவாரி உரிமையாளர்களின் நலனும் தான் முக்கியமா? என்பதை அரசு விளக்க வேண்டும்.
காப்புக்காடுகளாக இருந்தாலும், பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாக இருந்தாலும் அதைச் சுற்றியுள்ள ஒரு குறிப்பிட்ட தொலைவு, வெளிப்புற சக்திகளின் எதிர்மறையான அழுத்தங்களில் இருந்து வனத்தை காப்பதற்கான இடை மண்டலமாக (Buffer Zones) அறிவிக்கப்பட வேண்டும் என்று ஐ.நா. அமைப்பு வலியுறுத்துகிறது. இதே நோக்கத்தை உச்சநீதிமன்றமும் பல தீர்ப்புகளில் உறுதி செய்திருக்கிறது. ஐ.நா. அமைப்பும், உச்சநீதிமன்றமும் எந்த நோக்கத்திற்காக இதை வலியுறுத்துகின்றனவோ, அதே நோக்கத்திற்காகத் தான் தமிழ்நாடு அரசும் காப்புக்காடுகளை சுற்றி குவாரிகளையும், சுரங்கங்களையும் அமைக்க தடை விதித்தது. அது உன்னதமாக நடவடிக்கை. ஆனால், அந்த உன்னத நடவடிக்கையை எடுத்த தமிழக அரசே அதை சிதைக்கத் துடிப்பது மிகவும் பிற்போக்கான செயல் ஆகும். இது சரியல்ல.
தேசிய பூங்காக்கள், வனவிலங்கு சரணாலயங்கள், புலிகள் காப்பகங்கள், யானை வழித்தடங்களின் எல்லையில் இருந்து ஒரு கிமீ தொலைவுக்குள் குவாரிகள் செயல்பட விதிக்கப்பட்டுள்ள தடை நீடிக்கும் என்றும் அதே அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகளும், காப்புக்காடுகளும் வெவ்வேறு வகையானவை என்றாலும், அவை இரண்டுக்குமான வித்தியாசங்கள் குறைந்து வருகின்றன. காப்புக்காடுகளிலும் யானைகள், புலிகள், சிறுத்தைகள் போன்ற வனவிலங்குகள் அதிகம் வாழ்கின்றன.
அண்மையில் தமிழ்நாட்டின் 17-ஆவது வனச்சரணாலயமாக அறிவிக்கப்பட்ட காவிரி தெற்கு வனவிலங்கு சரணாலயம் ஒரு காப்புக்காடு தான். தருமபுரி மற்றும் கிரிஷ்ணகிரி மாவட்டங்களில் அமைந்துள்ள 686.406 சதுர கி.மீ பரப்பளவுள்ள இந்தக் காப்புக்காடுகளில் யானைகள் அதிக அளவில் வாழ்கின்றன.
புலிகள் உள்ளிட்ட 35 வகையான பாலூட்டிகளுக்கும், 238 வகையான பறவைகளுக்கும் புகலிடமாக திகழும் இந்த காப்புக்காடுகளையொட்டி கல்குவாரிகள் அமைக்கப்பட்டால் அதில் உள்ள விலங்குகளில் நிலை என்னவாகும்? ஏற்கனவே யானைகள், சிறுத்தைகள் போன்ற விலங்குகள் காடுகளில் இருந்து வெளியேறி ஊர்களுக்குள் நுழைவது பெரும் சிக்கலாக உருவெடுத்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக 15 பேர் வனவிலங்குகள் தாக்கி உயிரிழக்கின்றனர். தமிழக அரசின் ஆணை நடைமுறைக்கு வந்தால் மனித – விலங்குகள் மோதலும், உயிரிழப்புகளும் கணிசமாக அதிகரிக்கும் ஆபத்து உள்ளது.
ஒரு மாநில அரசின் முதன்மையான நோக்கம் இயற்கையையும், மக்களையும் காப்பதாகத் தான் இருக்க வேண்டும். வளங்களை பறிகொடுத்து அரசின் வருவாயை பெருக்கவும், கல் குவாரிகளின் நலன்களை காக்கவும் எந்தத் தேவையும் இல்லை. எனவே, காப்புக்காடுகளைச் சுற்றி கல்குவாரிகள், சுரங்கங்களை அமைக்க அனுமதி வழங்கி பிறப்பிக்கப்பட்ட ஆணையை அரசு ரத்து செய்ய வேண்டும்.