- விசிக சார்பில் தமிழ்நாடு முழுவதும் இன்று மக்கள் கூடும் பகுதிகளில் பொது மக்களுக்கு ஒரு லட்சம் பேருக்கு விலை இல்லாமல் மனுஸ்மிருதி மக்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றன. காலை 10 மணி முதல் 1 மணி வரை பிரதிகள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் பேருந்துக்காக காத்திருந்த பயணிகளிடம் விசிக தலைவர் திருமாவளவன் மனு ஸ்மிருதி பிரதிகளை வழங்கினார்.
- பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மனு ஸ்மிருதி என்பது இந்துக்களின் வேத நூலாகவும் வழிகாட்டு நூலாகவும் உள்ளது. அதன் அடிப்படையில் தான் இந்து சமூகம் இயங்கிக் கொண்டிருக்கிறது.
- மனுஸ்மிருதி அடிப்படையில் தான் குடும்ப நிகழ்வுகள் சடங்குகள், சம்பிரதாயங்கள், திருமணங்கள், ஈம சடங்குகள் என அனைத்தும் நடைபெற்று வருகின்றன. ஆனால், அந்த மனுஸ்மிருதியில் பெண்கள், சூத்திரர்களாக எவ்வாறு இழிவுபடுத்துகின்றது என்பது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மனு ஸ்மிருதி பிரதிகள் வழங்கப்படுவதாக கூறினார்.
- 1927- ல் மனு ஸ்மிருதியை எதிர்த்து அம்பேத்கர் அதனை எரித்தார். மக்களிடம் அது எப்படிப்பட்ட நூல் என்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூறினார். மேலும், ஆர் எஸ் எஸ்-ன் கொள்கை தான் மனு ஸ்மிருதி என்பதை விளக்கி தாம் முன்னுரை எழுதியிருக்கிறதாகவும். இந்த முயற்சிக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருப்பதாகவும் மக்களே தேடி வந்து வாங்கி செல்லும் நிலை இருப்பதாக கூறினார்.
- ஆர்எஸ்எஸ் சட்ட ரீதியான வழிமுறையை கையாள்வதில் எந்த சிக்கலும் இல்லை. ஆனால், பாஜக இருக்கும் போது ஆர்எஸ்எஸ் ஏன் தனியாக பேரணி நடத்த வேண்டும் என திருமாவளவன் கேள்வி எழுப்பினார். பாஜக நடத்திய பேரணிகளை இதுவரை தாங்கள் எதிர்த்தது இல்லை. ஆனால் ஆர்எஸ்எஸ் நடத்தக்கூடிய பேரணி மக்களிடையே மதவெறி களமாக மாற்றிவிடும் என்ற அச்சத்தில் அதை எதிர்ப்பதாக கூறினார்.
- மக்களிடையே விழிப்புணர்வு ஏற்பட்டால் இந்தியாவிலேயே ஆர்எஸ்எஸ்’க்கு இடம் இருக்காது எனவும் ஆர்எஸ்எஸ் இன் கோட்பாட்டின் அடிப்படையில் தான் பாஜக இயங்கி வருகிறது. ஆர்எஸ்எஸ் வெளிப்படையாக மதவெறி சாதிவெறி அரசியலை கட்டவிழ்த்து விடுவதாக விமர்சித்தார்.
- வளர்ச்சி வல்லரசு என்கிற பெயரால் நாம் இயற்கைக்கு எதிராக செயல்படுவதால் மனித குலம் பாதிக்கப்படும் அவலம் உள்ளது. எனவே இந்தியா சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வை பெற்று கால நிலை மாற்றத்தை தடுக்கின்ற வகையில் இயற்கையை பாதுகாக்க இந்தியா முன்வர வேண்டும் என அவர் தெரிவித்தார். மேலும் பரந்தூர் விமான நிலையத்தால் பாதிக்கப்படுகின்ற மக்களின் கோரிக்கைகளை அரசு மறுபரிசீலனை செய்ய வலியுறுத்துவோம் என்றும் திருமாவளவன் தெரிவித்தார்.