ஓசூர் போராட்டத்தைத் தடுக்கக் காவல்துறையினர் சட்ட விரோதக் கெடுபிடிகள்!
கிருட்டிணகிரி மாவட்டம் கெலமங்கலம் ஒன்றியம் வன்னியபுரம் பகுதியில் உள்ள டாட்டா மின்னணுத் தொழிற்சாலையில் (TATA Electronics) தமிழர்களுக்கு வேலை தர மறுத்து இந்திக்காரர்களை ஆயிரக்கணக்கில் அழைத்து வந்து வேலையில் சேர்த்து வருகிறார்கள்.
இப்போது அங்கு சற்றொப்ப மூவாயிரம் பேர் இந்திக்காரர்களும் மற்ற வெளி மாநிலத்தவரும் வேலையில் உள்ளார்கள். கடந்த 29.10.2022 அன்று தனி சிறப்புத் தொடர்வண்டியில் ஜார்கண்டிலிருந்து 860 பெண்களை அழைத்து வந்து மேற்படி டாட்டா நிறுவனம் வேலையில் சேர்த்தது. இது எல்லா ஊடகங்களிலும் செய்தியானது.
இவ்வாறு இந்திக்காரர்களைப் பல்லாயிரக் கணக்கில் வேலையில் சேர்த்துக் கொண்டு, தமிழ்நாட்டில் தகுதியுள்ள பெண்களையும் ஆண்களையும் வேலையில் சேர்க்க டாட்டா நிறுவனம் மறுப்பது தமிழ் இன ஒதுக்கல் கொள்கையாகும்; சட்ட விரோதச் செயலாகும் என்று தமிழ்த்தேசியப் பேரியக்கம் அறிக்கை வெளியிட்டு, தமிழ்நாடு அரசு தலையிட்டு நீதிவழங்கக் கோரியது.
தமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் கோ. மாரிமுத்துவும் மற்ற தோழர்களும் மேற்படி ஆலை நிர்வாகிகளைச் சந்தித்து வெளிமாநிலத்தவர் திணிப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்து தமிழர்களை வேலையில் சேர்க்கக்கோரி கிருட்டிணகிரி மாவட்ட ஆட்சியரிடம் விண்ணப்பம் அளித்தனர். மற்றும் பல்வேறு கட்சிகளும் இயக்கங்களும் அதே கோரிக்கையை ஆலை நிர்வாகத்திடமும், தமிழ்நாடு அரசிடமும் வலியுறுத்தின. ஆனால் ஆலை நிர்வாகம் இந்திக்காரர்களை மேலும்மேலும் பல்லாயிரக் கணக்கில் வேலையில் சேர்ப்பதில் தீவிரமாக உள்ளது.
அண்மையில் இந்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் ஊடகத்தினர்க்குக் கொடுத்த அறிக்கையில், ஓசூர் டாட்டா மின்னணுத் தொழிற்சாலையில் வேலையில் சேர்ப்பதற்காக ஜார்கண்டில் ராஞ்சியிலும், ஹசாரிபாக்கிலும் ஆறாயிரம் (6000) பெண்களுக்குப் பயிற்சி கொடுத்து வருவதாகத் தெரிவித்தார். இச்செய்தி 17.11.2022 அன்று நாளேடுகளில் வந்துள்ளது.
தமிழ்நாட்டில் பழங்குடி வகுப்பு, பட்டியல் மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பில் தகுதியான பெண்கள் பல இலட்சம் பேர் வேலை இல்லாமல் வறுமையில் வாடுகின்றனர். தமிழ் மண்ணில் தமிழர்களின் குடியிருப்புகளைக் காலிசெய்து, வேளாண்மை வளத்தையும் காட்டு வளத்தையும் அழித்து 1000 ஏக்கர் நிலத்தை வளைத்துப் போட்டிருக்கும் வடநாட்டு டாட்டா நிறுவனம், தமிழர்களுக்கு வேலை தர மறுக்கும் அநீதியைக் கண்டித்தும், தமிழ்நாடு அரசு தலையிடக் கோரியும் 9.12.2022 அன்று காலை 10 மணிக்கு, மேற்படி வன்னியபுரம் டாட்டா ஆலை முன் அறவழியில் வெகுமக்கள் முற்றுகைப் போராட்டம் நடத்த அறிவித்துள்ளோம்.
கிருட்டிணகிரி மாவட்டக் காவல்துறை இந்த அறப் போராட்டத்தைத் தடுக்கும் வகையில் இப்பொழுதே அச்சுறுத்தல், மிரட்டல் வேலைகளில் இறங்கியுள்ளது. வெளி ஊர்களில் இருந்து வரும் தோழர்கள் காலையில் குளிப்பதற்காக இராயக்கோட்டையில் ஒரு விடுதியைத் தோழர் கோ. மாரிமுத்து ஏற்பாடு செய்திருந்தார். அவ்விடுதி நிர்வாகிகளைக் காவல் துறையினர் மிரட்டி எங்களுக்கு வாடகைக்கு விடக் கூடாது என்று தடுத்துள்ளார்கள். அந்த அறப்போராட்டத்திற்குத் தலைமை தாங்க உள்ள தோழர் மாரிமுத்துவுக்கு அடிக்கடி தொலைபேசியில் காவல்துறையினர் 9.12.2022 போராட்டம் நடத்தக் கூடாது என்று அச்சுறுத்தி வருகின்றனர்.
தமிழ்நாட்டில் உள்ள ஒரு பெரிய தொழிற்சாலையில் மண்ணின் மக்களுக்கு வேலை கேட்பது குற்றமா? தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தலையிட்டு காவல்துறையின் சட்ட விரோதச் செயல்களைத் தடுக்குமதாறும், அறவழியில் நடைபெற உள்ள மக்கள் போராட்டத்திற்கு வாய்ப்பளிக்குமாறும் தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் சார்பில் கனிவுடன் கேட்டுக் கொள்கிறேன் என தமிழ்த்தேசியப் பேரியக்க தலைவர் பெ. மணியரசன் அறிக்கை வெளியிட்டுள்ளார்…!!