ஓசூர் டாட்டா ஆலைத் தொழிற்சாலை முற்றுகைக்கு வரும் தமிழ்த்தேசியப் பேரியக்கத் தோழர்களை புறப்படும் ஊர்களிலேயே கைது பெ. மணியரசன் கண்டனம்!
- ஓசூர் டாட்டா மின்னணுத் தொழிற்சாலை தமிழ்நாட்டின் மண்ணின் மக்களை – இன ஒதுக்கல் அடிப்படையில் புறக்கணித்து, வடநாட்டுக்காரர்களை மிகை எண்ணிக்கையில் பணியில் சேர்த்து வருகிறது. கடந்த அக்டோபர் 29 அன்று ஜார்கண்டிலிருந்து 860 பெண் தொழிலாளிகளைத் தனித் தொடர்வண்டியில் ஓசூர் கொண்டு வந்து டாட்டா நிறுவனம் இறக்கியது. அதன் பிறகே கடந்த ஆறு – ஏழு மாதங்களாக இந்திக்காரர்களை இறக்குமதி செய்து ஓசூர் டாட்டா தொழிற் சாலையில் வேலைக்கு அமர்த்தும் சூழ்ச்சி அம்பலமானது.
- இச்சூழ்ச்சியை மேலும் மெய்ப்பிக்கும் வகையில் இந்திய அரசின் தொலைத் தொடர்புத் தறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ், தில்லியில் அரசு விழாவில் பேசியபோது, “ஜார்கண்ட் மாநிலத்தில் ராஞ்சியிலும், அசாரிபாக்கிலும் ஓசூர் டாட்டா நிறுவன வேலைகளுக்காக ஆறாயிரம் பழங்குடிப் பெண்கள் பயிற்சி பெற்று வருகிறார்கள்; அவர்கள் விரைவில் தமிழ் நாட்டில் வேலையில் சேர்வார்கள்” என்று கூறினார். இச்செய்தி ”பைனான்சியல் எக்ஸ்பிரஸ்” இதழில் 16.12.2022 அன்று வெளிவந்தது.
- தமிழ்நாட்டில் படித்துவிட்டு வேலை இல்லாத ஆண்களும், பெண்களும் சற்றொப்ப ஒரு கோடிப் பேர் மனச்சுமையோடு வேதனையில் உழன்று வருகிறார்கள். அவர்களைப் புறக்கணித்துவிட்டு, இந்திக்காரர்களைக் கூட்டம் கூட்டமாக அழைத்து வரும் டாட்டா நிறுவனத்தைக் கண்டித்தும், மண்ணின் மக்களுக்கு வேலை கோரியும், 09.12.2022 அன்று மேற்படி ஆலை முன் முற்றுகைப் போராட்டம் நடத்திட தமிழ்த்தேசியப் பேரியக்கம் முடிவு செய்து அறிவித்தது.
- நாம் தமிழர் கட்சித் தோழர்களும், திராவிடர் விடுதலைக் கழகத் தோழர்களும் டாட்டா நிறுவனத்தின் இந்த அநீதியைக் கண்டித்துப் போராட்டங்கள் அறிவித்தன. தமிழ்நாடு காவல்துறை அடக்குமுறையைக் கட்டவிழ்த்துவிட்டது.
- இப்போது, தமிழ்த்தேசியப் பேரியக்கம் நடத்தவுள்ள அறப்போராட்டத்திற்கு எதிராகத் தமிழ்நாடு காவல்துறை அடக்குமுறையைக் கட்டவிழ்த்துவிட்டுள்ளது. தமிழ்நாட்டின் பல பகுதிகளில் இருந்து பல்வேறு வகை ஊர்திகளில் இப்போராட்டத்தில் பங்கு பெற வர உள்ள தோழர்களை – ஆண்களையும், பெண்களையும் அங்கங்கே தடுத்துக் கைது செய்யப் போவதாக அந்தந்த ஊர் தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொறுப்பாளர்களிடம் காவல்துறையினர் கூறி வருகின்றனர்.
- தமிழ்நாடு காவல்துறையின் இச்செயல் மண்ணின் மக்களுக்கு வேலை கோரும் உரிமை மீது அரசே வன்முறையை ஏவும் செயலாகும். தமிழ்த்தேசியப் பேரியக்கம், இதுவரை இதுபோல் நடத்தியுள்ள மக்கள் திரள் அறப்போராட்டங்களில் எந்த வகை வன்முறைக்கும் இடம் கொடுத்ததில்லை.
- தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச் செயலாளர் தோழர் கி. வெங்கட்ராமன், பொருளாளர் தோழர் அ. ஆனந்தன், அறப்போராட்டத் தலைவர் கோ. மாரிமுத்து ஆகியோர் 07.12.2022 பகல் 12.30 மணியளவில், கிருட்டிணகிரி மாவட்டக் காவல்துறைக் கண்காணிப்பாளர் திரு. சரோஜ் குமார் தாக்கூர் அவர்களை அவரது அலுவலகத்தில் நேரில் சந்தித்து, எங்கள் நிலைபாட்டை விளக்கினோம். ஆனால், அவர் கிருட்டிணகிரியில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் வேண்டுமானால் ஆர்ப்பாட்டம் நடத்திக் கொள்ளுங்கள், ஆலை வாயில் அருகிலோ ஆலைக்கு அப்பால் உள்ள வேறு ஊர்களிலோ ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதிக்க முடியாது என்று மறுத்துவிட்டார். நாங்கள் முதலில் அறிவித்த முற்றுகை இடம், ஆலைக்கு வெளியே ஒன்றரை கிலோ மீட்டருக்கு அப்பால் உள்ளது.
- அரசமைப்புச் சட்டம் வழங்கியுள்ள அறப்போராட்ட உரிமையைக் காவல்துறை வழியாகத் தமிழ்நாடு அரசு பறிப்பது அநீதியாகும். வடநாட்டு டாட்டா ஆலையின் தமிழர் விரோதச் செயல்களுக்குப் பாதுகாப்பு – தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் மண்ணின் மக்கள் உரிமைக்கான அறப்போராட்டத்திற்கு எதிராக அடக்குமுறை என்பது சனநாயக விரோத இனத்துரோகச் செயலாகும்! தமிழ்நாடு அரசு தனது நிலைபாட்டை மாற்றி அறப்போராட்டத்தை அனுமதிக்கக் கனிவுடன் கோருகிறேன் என தமிழ்த்தேசியப் பேரியக்க தலைவர் பெ.மணியரசன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
User Rating:
Be the first one !
Back to top button