நீங்கள் யார் என்னை தமிழகத்தில் கருத்து கூற முடியாது என்று சொல்வது?
- தெலுங்கை பூர்வீகமாகக் கொண்டு வீட்டில் தெலுங்கு பேசி தமிழ் வேஷமிடும் தெலுங்கர்களுக்கு, தமிழ் ரத்தம் ஓடும் தமிழச்சி நான் என்பதை ஜீரணித்து கொள்ள முடியவில்லை என தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜன் தெரிவித்துள்ளார்.
- நேற்று தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜனின் செயல்பாடுகள் குறித்து முரசொலி சிலந்தி கட்டுரையில் விமர்சனம் செய்யப்பட்டிருந்தது. சிலருக்கு மைக் மேனியா இருக்கிறது, தெலங்கானாவில் ஜம்பம் பலிக்காததால் தமிழ்நாட்டை பற்றி தமிழிசை கருத்து கூறி வருகிறார் என்றெல்லாம் விமர்சிக்கப்பட்டிருந்தது.
- இந்நிலையில் இதற்கு தமிழிசை பதிலளித்துள்ளார். திமுக தங்களை எரிமலைகள் என சொல்லிக்கொள்கிறது. எரிமலைகளால் இமயங்களை ஒன்றும் செய்துவிட முடியாது.
- மேலும், “சிலந்தி வேடமிட்டு வரும் மூட்டை பூச்சிகளே.. உங்கள் சாயம் வெளுக்கிறது என்ற பயமா? எனவேதான் எதைக் கண்டாலும் தினம் தினமும் அஞ்சும் தெனாலி திரைப்படக் கதாநாயகன் போல் நிழலுக்கும் அஞ்சி அஞ்சி அடிக்கடி ஆளுநரை பற்றி பக்கம் பக்கமாக கட்டுரை எழுதுகிறீர்கள்.
- சீரியலிலும், சினிமாவிலும் நடித்துவிட்டு பதவியில் அமர்ந்திருப்பவர்களுக்குதான் கேமரா மேனியா மைக் மேனியாஉள்ளது. உண்மையை உரக்கச் சொல்லும் எங்களுக்கு மைக் மேனியாவும் இல்லை கேமரா மேனியாவும் இல்லை.
- எங்களுக்கு மைக் மேனியா என்பதைவிட உங்களுக்குத்தான் மோடி போபியா (மோடி பயம் ) எனவே இந்த பயத்தில் குளிர் ஜுரம் வந்து அடிக்கடி என்னைப்பற்றி கட்டுரை வருகிறது. தெலுங்கானாவில் என்ன நடக்கிறது என்பதை ஒழுங்காக முழுமையாக தெரிந்து கொண்டு பேசுங்கள்.
- தெலுங்கை பூர்வீகமாகக் கொண்டு வீட்டில் தெலுங்கு பேசி தமிழ் வேஷமிடும் தெலுங்கர்களுக்கு, தெலுங்கானாவின் ஆளுநராக இருந்தாலும் தெலுங்கானா சட்டமன்றத்தில் திருக்குறளை தமிழில் ஒலிக்கச் செய்த முழுமையான தமிழ் ரத்தம் ஓடும் தமிழச்சி நான் என்பதை உங்களால் ஜீரணித்து கொள்ள முடியவில்லை.
- நீங்கள் யார் என்னை தமிழகத்தில் கருத்து கூற முடியாது என்று சொல்வது. யார் அந்நியர் நீங்களா? நானா?
- கடந்த மூன்று ஆண்டுகள் தெலுங்கானா உள்ளூர் பத்திரிகைச் செய்திகளை ஆராய்ச்சி செய்து பார்த்தால் யார் நடுங்கிப் போயிருக்கிறார்கள் என்பது தெரியும். அங்கே தெலுங்கானா அரசை அலறவிடுவது யார் என்பதும் தெரியும்.
- இதன் மூலம் உலகத் தமிழர்களுக்கு காப்புரிமை வாங்கிக் கொண்டதாக தம்பட்டம் கட்டிய, வீர வசனம் பேசிய உங்கள் சாயம் வெளுக்கிறது.
- அங்கே பண்ணை வீட்டில் நடக்கும் வாரிசு அரசியல் ஆட்சியை மக்கள் முன் தோலுரித்துக் காட்டியதால் ஆளுநர் மாளிகை மீது கோபம்.
- தெலுங்கானாவில் மூன்று நாள் பாண்டிச்சேரியில் மூன்று நாள் என்று நேரம் ஒதுக்கி வழியில் தமிழ்நாட்டிலும் சில நிகழ்வுகளில் கலந்துகொண்டு பணியாற்றும் என்னை குறை காண வேண்டாம்.
- நான் பொதுவெளியில் வைக்கும் வாதங்களுக்கு பதில் விளக்கம் சொல்ல தெம்பும் திராணியும் அற்றவர்கள்தான் என்னைப் பற்றி கட்டுரை எழுதுகிறார்கள்.
- குருவி தலையில் பனம் பழமா என்று கேட்டிருக்கிறீர்கள்? இலவச பனங்காய்களை தலையில் சூட்டிக் கொள்ளும் வாரிசு குருவிகள் அல்ல நாங்கள். பனை விதைகளாய் மண்ணில் புதைந்து தானே வளர்ந்து உருக்கேறிய பனை மரங்கள் நாங்கள்.
- முரசொலியின் சலசலப்புக்கு அஞ்ச மாட்டோம். இடி ஒலியே எங்களை ஒண்ணும் செய்ய முடியாத போது. முரசொலி எங்களை என்ன செய்துவிட முடியும்.
- வதந்திகளை பரப்பும் சிலந்திகள் நசுக்கப்படலாம். உண்மையாக உழைக்கும் சிங்கங்களை ஒன்றும் செய்து விட முடியாது. சிலந்திகள் சிங்கங்களை என்ன செய்து விட முடியும்” என தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜன் தெரிவித்துள்ளார்.