பாஜகவின் வாக்குச்சாவடி முகவராக செயல்படுபவரை இந்திய தேர்தல் ஆணையராக நியமிப்பதா?? தி.வேல்முருகன் கண்டனம்.
Editor Zhagaram
பாஜகவின் வாக்குச்சாவடி முகவராக செயல்படுபவரை இந்திய தேர்தல் ஆணையராக நியமிப்பதா??
மோடி பிரதமராக பதவியேற்ற பிறகு, குடியரசுத்தலைவர், ஆளுநர்கள், ராணுவ அதிகாரிகள், பேராசிரியர்கள் என நகராட்சி அலுவலக அதிகாரி வரை, பாஜக, ஆர்.எஸ்.எஸ் கும்பலை சேர்ந்தவர்களை நிரப்பி வருகிறது.
அதன் தொடர்ச்சியாக, இந்திய தேர்தல் ஆணையராக அருண் கோயலை நியமித்துள்ளது. ஒன்றிய அரசின் செயலாளராக பதவி வகித்த அருண் கோயல் கடந்த 18-ம் தேதி விருப்ப ஓய்வு பெற்றார். அடுத்த நாளே அவர் தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டு உள்ளார்.
இது தொடர்பாக, ஒன்றிய அரசுக்கு அப்படியான அவசரம் என்னவிருந்தது. மே.15-ஆம் தேதி தான் தேர்தல் ஆணையர் பணியிடம் காலியானதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், மின்னல் வேகத்தில் அடுத்த ஆணையருக்கான கோப்புக்கு ஒப்புதல் வழங்கப்பட்டிருக்கிறது. அப்படி மின்னல் வேகத்தில் ஒப்புதல் அளிக்க அவசியம் என்ன என உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
மேலும், தேர்தல் ஆணையர் நியமனத்தில் எந்த முறைகேடும் இல்லையென்றால் ஒன்றிய அரசு அனைத்து ஆவணங்களையும் தாக்கல் செய்யட்டும் என்றும் உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.
ஜனநாயக விழுமியங்களையும், சுதந்திரம், கருத்துச் சுதந்திரம் மற்றும் சட்டத்தின் ஆட்சி பற்றிய அரசியலமைப்பு வழிகாட்டுதல்களையும் மிதித்து, பாஜக, ஆர்.எஸ்.எஸ் கும்பல், தனக்காக ஆட்களை, உயர் பதவிகளில் நியமித்து வருகிறது.
ஆர்.எஸ்.எஸ்-சின் அழுத்தத் தந்திரங்கள், அரசாங்கத்திலும் கட்சியில் அதிகாரம் மிக்க பதவிகளிலும் தங்களால் பரிந்துரைக்கப்பட்டவர்களைச் சேர்த்துக்கொள்ளும்.
தற்போது அந்த அழுத்தத்தின் காரணமாகவே, தேர்தல் ஆணையராக அருண் கோயல் நியமிக்கப்பட்டுள்ளார். ஒன்றிய அரசின் இத்தகைய போக்கு வன்மையாக கண்டிக்கதக்கது.
அருண்கோயல், தேர்தல் ஆணையராக செயல்பட மாட்டார். அதற்கு மாற்றாக, பாஜகவின் வாக்குச்சாவடி முகவராக மட்டுமே செயல்படுவார் என தமிழக வாழ்வுரிமைக் கட்சி தெரிவித்துக்கொள்கிறது.