
ஆளுங்கட்சிக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம், நள்ளிரவு வாக்கெடுப்பு, பிரதமர் பதவி விலகல், புதிய பிரதமராகவிருக்கு ஷெபாஸ் ஷெரீப், லண்டனிலிருந்து தாயகம் திரும்பும் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் என பாகிஸ்தானின் பரபரப்புக்கான பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது.
ஞாயிறு இரவை பிரகாசமாக்கிய இம்ரான் ஆதரவாளர்கள்: பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை இழந்ததைத் தொடர்ந்து பிரதமர் பதவியிலிருந்து இம்ரான் கான் நீக்கப்பட்டார். இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை இரவு பாகிஸ்தானின் பெரு நகரங்கள் பலவற்றிலும் இம்ரான் கானுக்கு ஆதரவாக பேரணிகள் நடந்தன. ரம்ஜான் நோன்பை முடித்துவிட்டு பெரும்பாலானோரும் பேரணியைத் தொடங்கினர். இம்ரான் கானுக்கு பாகிஸ்தான் இளைஞர்களின் ஆதரவு இருக்கிறது. ஆதலால், இளைஞர்கள் அதிகளவில் பேரணியில் கலந்து கொண்டனர். கராச்சி நகரில் மட்டும் 20,000 பேர் இம்ரான் கானுக்கு ஆதரவாகத் திரண்டிருந்தனர்.
இந்தப் போராட்டங்கள் குறித்து இம்ரான் கான், “பாகிஸ்தான் வரலாற்றில் இப்படியொரு கூட்டம் தானாகக் கூடியதில்லை. இது வெகு இயல்பாகத் திரண்ட கூட்டம். இறக்குமதி செய்யப்பட்ட ஆட்சியை எதிர்த்து திரண்ட கூட்டம் இது” என்று பதிவிட்டுள்ளார். முன்னதாக நேற்று தனது பிரதமர் பதவி பறிபோன பின்னர் ட்விட்டரில் இம்ரான் கான் இன்னொரு சுதந்திரப் போராட்டம் தொடங்கிவிட்டதாகப் பதிவிட்டிருந்தார். அதில் அவர், “பாகிஸ்தான் 1947ல் சுதந்திர நாடானது. ஆனால் இப்போது இன்று இன்னொரு சுதந்திரப் போராட்டம் தொடங்கியுள்ளது. இந்தப் போராட்டம் பாகிஸ்தானில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்திய வெளிநாட்டு சதிக்கு எதிரானது. பாகிஸ்தானின் மக்கள் தான் எப்போதும் நாட்டின் இறையாண்மைக்கும், ஜனநாயகத்திற்கும் காவலர்கள்” என்று பதிவிட்டிருந்தார். இந்நிலையில், நேற்று மாலை பெருந்திரளாக மக்கள் கூடி இம்ரான் கானுக்கு ஆதரவு தெரிவித்தனர்.
இது குறித்து அந்நாட்டு மூத்த பத்திரிகையாளரான பஹத் உசேன், “இம்ரான் கானின் அரசியல் எழுச்சி என்பது அந்நாட்டு நகப்புற நடுத்தர வர்க்க மக்கள் தொடர்ச்சியாக சந்தித்துவந்த ஏமாற்றங்களின் வெளிப்பாடு. ஊழல், மோசமான நிர்வாகம் ஆகியன களங்கமற்ற இம்ரான் கான் பக்கம் அவர்களை ஈர்த்தது” என்று கூறுகிறார்.
இன்று பிரதமர் தேர்வு… – பாகிஸ்தான் நாட்டின் புதிய பிரதமர் இன்று தேர்வு செய்யப்படுகிறார். பாகிஸ்தானில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டதால் இம்ரான் கான் தலைமையிலான அரசுக்கு அளித்து வந்த ஆதரவை கூட்டணி கட்சிகள் வாபஸ் பெற்றன. பெரும்பான்மையை இழந்த அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் சார்பில் நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரப்பட்டது. இந்த தீர்மானத்தை நாடாளுமன்ற துணை சபாநாயகர் குவாசிம்கான் கடந்த 3-ம் தேதி நிராகரித்தார். இதைத் தொடர்ந்து இம்ரான்கானின் பரிந்துரையின் பேரில் அதிபர் ஆரிப் ஆல்வி, நாடாளுமன்றத்தை கலைத்தார்.
இதனிடையே துணை சபாநாயகரின் முடிவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதனை கடந்த 7-ம் தேதி விசாரித்த உச்ச நீதிமன்றம், நாடாளுமன்றத்தை கலைத்தது செல்லாது என்றும் நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டது. இதன்படி, பல்வேறு அரசியல் நாடகங்களுக்கு மத்தியில் நள்ளிரவில் வாக்கெடுப்பு நடந்தது. இம்ரான் கான் பெரும்பான்மையை இழந்தார். அவரது பிரதமர் பதவி பறிபோனது.
இந்நிலையில், பாகிஸ்தானின் புதிய பிரதமரை தேர்வு செய்ய அந்த நாட்டு நாடாளுமன்றம் இன்று கூடுகிறது. இதில் வாக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது. ஆட்சியமைக்க தேவையான எம்.பி.க்கள் ஆதரவு இருப்பதால் புதிய பிரதமராக ஷெபாஸ் ஷெரீப் தேர்ந்தெடுக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நாடு திரும்பும் நவாஸ்… நேற்று மாலை பாகிஸ்தான் நகரங்களில் இம்ரான் கானுக்கு ஆதரவாகப் போராட்டங்கள் நடந்த அதே நேரத்தில் லண்டனில் நவாஸ் ஷெரீபுக்கு ஆதரவாகப் போராட்டம் நடந்தது. இந்நிலையில், அடுத்த மாதம் நவாஸ் ஷெரீப் லண்டனில் இருந்து பாகிஸ்தான் திரும்புவதாக தகவல் வந்துள்ளது. இதனை பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சியின் (N) நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
மே முதல் வாரம் ரம்ஜான் பண்டிகையை ஒட்டி நவாஸ் நாடு திரும்புவார் எனக் கூறப்படுகிறது. ஏற்கெனவே லண்டனில் இருந்து கொண்டு ஆட்சிக் கவிழ்ப்புக்கு நவாஸ் ஷெரீப் தான் சதி திட்டம் தீட்டினார் என்றும் இதில் அமெரிக்காவின் சதியும் உண்டும் என்றும் இம்ரான் கூறிவருகிறது. புதிதாக அமையவுள்ள அரசை அவர் இறக்குமதி அரசு என்றே குறிப்பிடுகிறார். இந்நிலையில் நவாஸின் வருகை பாகிஸ்தான் அரசியலில் முக்கியத்துவம் பெறுகிறது.