பட்டியலினத்தவரை முதல்வராக்கியிருக்கலாம்? பட்டியலினத்தவர் ஒருவருக்காவது உள்துறை, நிதி போன்ற முக்கிய துறைகளை கொடுத்திருக்கலாம்! பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன்!
Editor Zhagaram
தி.மு.க. தங்கள் மீதான வாரிசு அரசியல் விமர்சனத்தை திசைதிருப்பும் நோக்கத்தில் அனைத்து கட்சிகளிலும், பா.ஜ.க.விலும் வாரிசு அரசியல் இருப்பதாக அவதூறு பரப்புவதை நிறுத்திக் கொள்ள வேண்டும்.
உதயநிதி ஸ்டாலின் தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சராக சமீபத்தில் பொறுப்பேற்றார். திமுக வாரிசு அரசியல் செய்வதாக விமர்சனங்கள் எழுந்துவருகின்றன.
இதன் ஒரு பகுதியாக பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் நீண்ட அறிக்கையினை வெளியிட்டிருக்கிறார். அவரது அறிக்கையில், ”பா.ஜ.க.வில் தலைமை பொறுப்புக்கு, ஒரு குடும்பத்தை சேர்ந்தவர்கள் வருவது கிடையாது, தேசிய தலைமை மட்டுமல்ல, எந்தவொரு மாநில தலைமையிலும் வாரிசுகள் இல்லை, இதனை எப்படி வாரிசு அரசியல் என்று சொல்ல முடியும். எனவே, தங்கள் மீதான வாரிசு அரசியல் விமர்சனத்தை திசைதிருப்பும் நோக்கத்தில் அனைத்து கட்சிகளிலும், பா.ஜ.க.விலும் வாரிசு அரசியல் இருப்பதாக அவதூறு பரப்புவதை தி.மு.க. நிறுத்திக் கொள்ள வேண்டும்.
மகனை அமைச்சராக்கி, 35 பேர் கொண்ட அமைச்சரவையில் 10-வது இடத்தை அளித்துள்ள முதலமைச்சர் ஸ்டாலின், பட்டியலினத்தை சேர்ந்த ஒருவரை முதல்வராக்கியிருக்கலாம். அல்லது பட்டியலினத்தை சேர்ந்த ஒருவருக்காவது உள்துறை, நிதி, துணை பொதுப்பணி, தொழில், வருவாய் போன்ற முக்கிய துறைகளை கொடுத்திருக்கலாம். அப்படி செய்திருந்தால் தி.மு.க. அரசை சமூக நீதி அரசு என பாராட்டலாம்.
இனியாவது பட்டியலினத்தை சேர்ந்த ஒருவரை துணை முதல்வராக்க வேண்டும். முக்கிய துறைகளை ஒடுக்கப்பட்ட சமூகத்தினருக்கு ஒதுக்க வேண்டும். சமூக நீதி, சமத்துவம் என்பதை பேச்சில் மட்டுமல்லாது, செயலிலும் காட்ட முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.