மதுரையில் தினமும் ஆஜராக வேண்டும், நீதித்துறை குறித்து பேசக்கூடாது! சவுக்கு சங்கருக்கு அறிவுறுத்தப்பட்ட நிபந்தனைகள் என்னென்ன??
Editor Zhagaram
நீதித்துறையை சர்ச்சைக்குரிய வகையில் விமர்சனம் செய்ததாக, தானாக முன்வந்து பதிவு செய்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சவுக்கு சங்கருக்கு 6 மாதம் சிறை தண்டனை விதித்து, மதுரை சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர், கடலூரில் உள்ள மத்திய சிறைக்கு மாற்றப்பட்டார்.
இந்நிலையில், உயர்நீதிமன்ற மதுரை கிளை பிறப்பித்த இந்த உத்தரவுக்கு எதிராக சவுக்கு சங்கர் சார்பில் உச்சநீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சவுக்கு சங்கருக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனைக்கு இடைக்காலத் தடை விதித்த நீதிபதிகள், அடுத்த விசாரணை வரை எவ்வித கருத்துகளையும் தெரிவிக்கக் கூடாது என்றும் உத்தரவிட்டனர்.
இதையடுத்து, சவுக்கு சங்கர் விடுதலையாவார் என்று கருதப்பட்டது. ஆனால், சிறை தண்டனைக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்ட அன்றைய நாளே, அவரை சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் பிரிவு காவல் துறையினர், நிலுவையில் உள்ள 4 வழக்கின் கீழ் கைது செய்தனர். இந்த வழக்குகள் கடந்த 2020 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளில் பதிவு செய்யப்பட்டது.
4 வழக்குகளில் இருந்தும் சவுக்கு சங்கருக்கு நிபந்தனை ஜாமின் வழங்கியுள்ளது எழும்பூர் நீதிமன்றம். மேலும், வழக்கு குறித்து அவர் வெளியில் எங்கும் பேசக்கூடாது என்ற நிபந்தனை உள்ளிட்ட 5 நிபந்தனைகளை அவருக்கு வழங்கியுள்ளது.
சவுக்கு சங்கர் தினமும் காலை 10:30 மணிக்கு மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும்.
உச்சநீதிமன்ற வழிகாட்டுதலின் படி, சமூக வலைதளங்களில் எந்தக் கருத்துக்களையும் பதிவிடக் கூடாது.
நீதிமன்றம் உத்தரவிட்டால் உடனடியாக சவுக்கு சங்கர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ஆஜராக வேண்டும்.
சவுக்கு சங்கர் நீதித்துறை குறித்து எந்தவித கருத்துக்களையும் தெரிவிக்கவே கூடாது. 20 ஆயிரம் ரூபாய் கொண்ட பத்திரத்தில், 2 நபர்கள் பிணையம் வழங்க வேண்டும் என சவுக்கு சங்கருக்கு நிபந்தனை ஜாமின் வழங்கியுள்ளது எழும்பூர் நீதிமன்றம்.