- தமிழ்நாட்டில், காந்தி ஜெயந்தியை முன்னிட்டு பேரணி நடத்த அனுமதி கோரியிருந்த ஆர்.எஸ்.எஸ் கோரிக்கைக்கு, `சட்டம்-ஒழுங்குப் பிரச்னை ஏற்பட வாய்ப்பிருக்கிறது’ என காவல்துறை தரப்பில் அனுமதி மறுக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, இந்த விவகாரம் தொடர்பாக ஆர்.எஸ்.எஸ், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. பின்னர் பல்வேறு நிபந்தனைகளுடன் ஆர்.எஸ்.எஸ்-ஸின் பேரணிக்கு அனுமதி வழங்கியது தமிழ்நாடு அரசு.
- பின்னர் இது தொடர்பாக நவம்பர் 2-ம் தேதி நடந்த விசாரணையில், பேரணி நடத்த ஆர்.எஸ்.எஸ் கோரிக்கை வைத்த 50 இடங்களில், 3 இடங்களில் மட்டுமே பேரணி நடத்தலாம் என அரசு அறிக்கை தாக்கல் செய்தது. ஆனால், ஆர்.எஸ்.எஸ் தரப்பு, வி.சி.க பேரணி எண்ணிக்கையைக் காரணம் காட்டி இதை ஏற்க மறுத்துவிட்டது. அதைத் தொடர்ந்து வழக்கு நவம்பர் 4-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
- இந்த நிலையில், இன்று நடைபெற்ற விசாரணையில், தமிழ்நாட்டில் மொத்தம் 44 இடங்களில் ஆர்.எஸ்.எஸ் பேரணி நடத்தலாம் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.
- அதாவது, கோவை, மேட்டுப்பாளையம், பொள்ளாச்சி, பல்லடம், திருப்பூர், கன்னியாகுமரி ஆகிய ஆறு இடங்களைத் தவிர்த்து, மற்ற இடங்களில் ஆர்.எஸ்.எஸ் பேரணிக்கு அனுமதி வழங்கலாம் என்று உயர் நீதிமன்றம் தனது உத்தரவில் கூறியிருக்கிறது. மேலும், நீதிபதிகள் குறிப்பிட்ட ஆறு இடங்களில் இயல்புநிலை திரும்பும் வரை ஆர்.எஸ்.எஸ் காத்திருக்க வேண்டும் என்றும் கூறப்பட்டிருக்கிறது.
- சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில், ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் அணிவகுப்பு ஊர்வலத்துக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. சுற்றுசுவருடன் கூடிய மைதானங்களில்தான் ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு, ஊர்வலம் நடத்தப்பட வேண்டும்; இந்த அணிவகுப்பில் லத்தி (கம்பு) மற்றும் ஆயுதங்கள் எடுத்துச் செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
- அதேநேரத்தில் நாட்டின் ஒற்றுமைக்கும் ஒருமைப்பாட்டுக்கும் எதிராகவும் பேசக் கூடாது; மத ரீதியான உணர்வுகளைத் தூண்டும் வகையில் பேசக் கூடாது என்பது உள்ளிட்ட நிபந்தனைகளும் விதிக்கப்பட்டுள்ளன.
- இத்தகைய நிபந்தனைகளை மீறி ஆர்.எஸ்.எஸ். ஊர்வலம் நடத்தப்பட்டால் போலீசார் சட்டப்படியான உரிய நடவடிக்கை எடுக்கலாம் எனவும் சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.