விடுதலையான ஈழத்தமிழர்கள் 4 பேரை சிறப்பு முகாம்களுக்கு அனுப்பக்கூடாது!! பழ.நெடுமாறன்!
Editor Zhagaram
விடுதலையானவர்களில் ஈழத்தமிழர்கள் 4 பேரை சிறப்பு முகாம்களுக்கு அனுப்பக்கூடாது – பழ.நெடுமாறன் கோரிக்கை!
இராஜீவ் காந்தி கொலை வழக்கில் தொடர்புடைய பேரறிவாளன் கடந்த சில மாதங்களுக்கு முன்பு உச்சநீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டார். அதே போல் தங்களையும் விடுதலை செய்யக் கோரி இந்த வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் நளினி, ரவிச்சந்திரன் ஆகியோர், உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த மனு உச்சநீதிமன்ற நீதிபதி பி.ஆர்.கவாய் தலைமையிலான அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.
இராஜீவ் காந்தி கொலை வழக்கில் 30 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் உள்ள நளினி, ரவிச்சந்திரன் உள்ளிட்ட 6 பேரை உச்சநீதிமன்றம் விடுதலை செய்து உத்தரவிட்டுள்ளது. பேரறிவாளன் போலவே நிவாரணம் பெற 6 பேரும் தகுதி உள்ளவர்கள் என்று கூறிய உச்சநீதிமன்ற நீதிபதி பி.ஆர்.கவாய் தலைமையிலான அமர்வு, நளினி, ரவிச்சந்திரன், முருகன், சாந்தன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் ஆகிய 6 பேரையும் விடுதலை செய்தவாக அறிவித்துள்ளது.
நளினி தரப்பு வழக்கறிஞர் புகழேந்தி பேசியபோது, இந்த தீர்ப்பு மூலம் நீதி நிலைநாட்டப்பட்டுள்ளது என்றார். தொடர்ச்சியாக அரசியல் காரணத்திற்காக இவர்கள் விடுதலை மறுக்கப்பட்டு வந்தது. ஆனால் தற்போது, அரசியல் அமைப்பு சட்டத்தை உச்சநீதிமன்றம் நிலைநிறுத்தியுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது என கூறினார். ஒரு நபரை விடுவிக்கும்போது, மற்றவர்களுக்கு மாறுபட்ட தீர்ப்பை வழங்க முடியாது என்ற அந்த அடிப்படையில்தான் இவர்களுக்கான தீர்ப்பு கிடைத்துள்ளது என தெரிவித்தார்.
உலகத் தமிழர் பேரமைப்பு நிறுவனர் பழ.நெடுமாறன் பேசியபோது, இந்த தீர்ப்பு மக்கற்ற மகிழ்ச்சியளிக்கிறது என கூறினார். பல கட்டங்களாக இவர்களது விடுதலைக்காக போராடி வந்தோம். மேலும் பலதரப்பினரும் இந்த விடுதலைக்காக போராடினார்கள், அதன் பலனாக இவர்கள் விடுதலையை பார்க்கிறேன். இதற்காக முந்தைய அதிமுக ஆட்சிக்கும், தற்போதைய திமுக ஆட்சிக்கும் நன்றி தெரிவித்துகொள்கிறேன்.
மேலும் விடுதலையான 6 பேரில், 4 பேர் ஈழதமிழர்கள். அவர்கள் 4 பேரையும் அவர்களது உறவினர்கள் எந்தெந்த நாடுகளில் வாழ்கிறார்களோ அங்கு அனுப்ப வேண்டும் என்றும், அவர்களை சிறப்பு முகாம்களுக்கு அனுப்பிவிடவேண்டாம் என்றும் கோரிக்கை வைப்பதாக பழ.நெடுமாறன் தெரிவித்தார்.