புதுச்சேரி அரசுப் பணியிடங்களுக்கு 10 ஆண்டுகள் வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவைக் கட்டாயமாக்குக! தமிழ்த்தேசியப் பேரியக்கம்!
Editor Zhagaram
தமிழ்த்தேசியப் பேரியக்கப் புதுச்சேரி செயலாளர் தோழர் இரா. வேல்சாமி அறிக்கை!
இந்தியத் துணைக் கண்ட அளவில் வேலையில்லா திண்டாட்டம் அதிகமாக உள்ள மாநிலங்களில் ஒன்றாக புதுச்சேரி பட்டியலிடப்பட்டுள்ளது. இச்சூழலில், புதுச்சேரி அரசுப் பணியிடங்களுக்கு பல்வேறு தேர்வுகள் நடைபெறவுள்ளது ஆறுதல் அளிக்கிறது. ஆனால், இப்பணியிடங்கள் புதுச்சேரி மக்களுக்கே உறுதி செய்ய புதுச்சேரி அரசு எவ்வித முயற்சியும் எடுக்காதது அதிர்ச்சி அளிக்கிறது.
பல ஆண்டுகளாக வேலை வாய்ப்பு இல்லாமலும், வாழ்வாதாரம் இல்லாமலும் படித்துவிட்டு எதிர்காலத்தை கேள்விகளோடு நிச்சயமற்ற தன்மையோடு இருந்து வருகிற புதுச்சேரி மண்ணின் மைந்தர்களான தமிழர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்க வேண்டும். அது அவர்களது அடிப்படை உரிமையாகும்!
வேலை வாய்ப்பு இல்லாத இளைஞர்கள் தவறான வழிகளுக்கு சென்று தங்கள் எதிர்காலத்தையும் குடும்பம் மற்றும் சமூகத்தின் எதிர்காலத்தையும் சீர்குலைக்கும் அமைதியின்மையை உருவாக்கும் செயல்களில் ஈடுபடும் வாய்ப்பு மிக அதிகம்.
இதனை உணர்ந்துதான், இந்தியாவின் அனைத்து மாநிலங்களும் தங்கள் மக்கள் வாழ்வாதாரத்தை, வேலைவாய்ப்பு உரிமையைப் பாதுகாக்கும் வகையில் அரசு மற்றும் தனியார் துறை வேலை வாய்ப்புகளில் மண்ணின் மக்களுக்கே முன்னுரிமை என சட்டம் – அரசாணைகளை இயற்றி வருகின்றனர். அண்மையில், பா.ச.க. ஆட்சியிலுள்ள மத்தியப் பிரதேசத்தில் தனியார் துறையில் 75% மண்ணின் மைந்தர்களுக்கே என சட்டமியற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இவற்றைக் கருத்தில் கொண்டு புதுச்சேரி அரசு அரசு மற்றும் தனியார் துறை வேலைகளை மண்ணின் மைந்தர்களான தமிழர்களுக்கே உறுதி செய்திட தனிச்சட்டம் இயற்ற வேண்டுமென தமிழ்த்தேசியப் பேரியக்கம் தொடர்ந்து பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்தது. புதுச்சேரி அரசு இன்னும் அதற்குரிய சட்டத்தை இயற்றவில்லை.
இந்நிலையில், புதுச்சேரி அரசுப் பணியிடங்களுக்குத் தேர்வு நடைபெறவுள்ள நிலையில், அதற்கு பத்தாண்டுகள் வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவுக் கட்டாயமாக்கி, பதிவு மூப்பு அடிப்படையில் புதுச்சேரி மக்களுக்கு வேலை வாய்ப்பில் முன்னுரிமை அளிக்க வேண்டும்.
எனவே, புதுச்சேரி – காரைக்கால் பகுதிகளில் காலியாக உள்ள பணியிடங்களில் 90 விழுக்காடு இடங்களை தமிழர்களுக்கே வழங்க வேண்டும். அதைப்போலவே மாகே, ஏனாம் பகுதிகளில் அந்தந்த பகுதி மண்ணின் மைந்தர்களுக்கே முன்னுரிமை அளிக்க வேண்டும். மேலும், அரசு அமைச்சக உதவியாளர் மற்றும் காவல் உதவி ஆய்வாளர் பணியிடங்கள் பல பத்தாண்டுகளுக்குப் பிறகு நிரப்புவதால் வயது வரம்பையும் தளர்த்த வேண்டுமென தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறேன்.