- தமிழர்களின் இன்னொரு தாயகமான புதுச்சேரிக்குத் தனி மாநிலத் தகுதி வழங்காமல், ஒன்றியப் பகுதியாகவே வைத்து வஞ்சித்து வருகிறது இந்திய அரசு! மக்கள் தேர்ந்தெடுத்த முதலமைச்சர், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்களுக்கு அதிகாரம் வழங்கப்படாமல், இந்திய அரசின் துணைநிலை ஆளுநரும் இந்தி அதிகாரிகளும் என அயல் இனத்தாரோ அதிகாரம் பெற்றுள்ளனர். இந்நிலையில், புதுச்சேரிக்கு தனி மாநிலத் தகுதி வழங்கப்பட வேண்டும் என்பது மக்கள் கோரிக்கையாக மாறியுள்ளது.
- இந்நிலையில், “இந்திய அரசே! புதுச்சேரிக்கு மாநிலத் தகுதி வழங்கு!” என்ற முழக்கத்தோடு, இதற்கான மாபெரும் மக்கள் பரப்புரை இயக்கத்தை இன்று (05.11.2022) தொடங்கி தமிழ்த்தேசியப் பேரியக்கம் புதுச்சேரி முழுக்க முன்னெடுக்கிறது. தொடக்க நிகழ்வு, புதுச்சேரியில் எழுச்சியுடன் நடைபெற்றது.
- இன்று காலை புதுச்சேரி இராசா திரையரங்கு அருகில் நடைபெற்ற இதற்கான பரப்புரைத் தொடக்க நிகழ்வில், தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச்செயலாளர் தோழர் கி. வெங்கட்ராமன் பரப்புரையைத் தொடங்கி வைத்துப் பேசினார். நிகழ்வுக்கு, தமிழ்த்தேசியப் பேரியக்க புதுச்சேரி செயலாளர் தோழர் இரா. வேல்சாமி தலைமை தாங்கினார். துணைப் பொதுச்செயலாளர் தோழர் க. அருணபாரதி தொடக்கவுரையாற்றினார்.
- “புதுச்சேரிக்குத் தனி மாநிலத் தகுதி வேண்டும்! ஏன்?” என்ற பரப்புரை விளக்கக் கையேட்டை உலகத் தமிழ்க் கழக புதுச்சேரி தலைவர் ஐயா கோ. தமிழுலகன், தமிழ் மீனவர் விடுதலை வேங்கைகள் நிறுவனர் தோழர் இரா. மங்கையர்செல்வன், மனித உரிமைகள் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு இயக்கச் செயலாளர் திரு. இரா. முருகானந்தம், தமிழர் களம் புதுச்சேரி செயலாளர் திரு. கோ. அழகர், நா.த.க. புதுச்சேரி பொருளாளர் தோழர் ம.செ. இளங்கோவன், புதுச்சேரி தன்னுரிமைக் கழகத் தலைவர் திரு. தூ. சடகோபன், நாம் தமிழர் தொழிலாளர் நலச்சங்கச் செயலாளர் தோழர் த. இரமேசு, புதுச்சேரி தமிழ் எழத்தாளர் கழகத் தலைவர் திரு. புதுவைத் தமிழ்நெஞ்சன், நா.த.க. மகளிர் பாசறை செயலாளர் திரு. பா. கௌரி, த.தே.பே. காரைக்கால் செயலாளர் தோழர் செ. சூர்யா, தொரவி செயலாளர் தோழர் முருகன் மற்றும் மகளிர் ஆயம் செயல்பாட்டாளர்கள் பெற்றுக் கொண்டனர்.
- நிறைவில், த.தே.பே. புதுச்சேரி வடக்குக் கிளைச் செயலாளர் தோழர் தே. சத்தியமூர்த்தி நன்றி கூறினார்.
- நிகழ்வில்,தமிழ்த்தேசியர் பெருந்திரளானோர் உணர்வெழுச்சியுடன் பங்கேற்றனர்.
- “புதுச்சேரிக்குத் தனி மாநிலத் தகுதி வேண்டும்! ஏன்?” என்ற இப்பரப்புரை விளக்கக் கையேட்டு நூல், சலுகை விலையில் ரூபாய் 20க்கு விற்பனை செய்யப்படுகிறது. நூல்கள் பெற விரும்புவோர் 9345495214, 9841949462 எண்களுக்கு கைப்பேசியில் அழைத்து நூலைப் பெறலாம். பிறருக்கும் வழங்கி அவரவர் இருப்பிடத்திலிருந்தே பரப்புரையில் பங்கெடுக்கலாம் என தமிழ்த்தேசியப் பேரியக்கம் அறிக்கை வெளியிட்டுள்ளது.