ஒரு யூனிட் ஆற்று மணலின் விலை ரூ.1,000ஆக நிர்ணயித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அதிக கட்டணத்திற்கு மணல் விற்கப்படுவதாக புகார் எழுந்த நிலையில் தமிழக அரசு இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
பொதுமக்கள் மற்றும் ஏழை எளியோர் இணையதளம் மூலம் கட்டணமின்றி விண்ணப்பித்து மணலை வாங்கிக் கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், பொதுமக்கள், ஏழை, எளியோர் எளிதாக இணைய வழியாக மணலுக்கான விலையினை செலுத்தி எவ்வித சிரமமும் இன்றி எடுத்துச் செல்வதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் காலை 8 மணி முதல் மதியம் 2 மணி வரை இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என்றும், விண்ணப்பித்தவர்களுக்கு வழங்கியது போக மீதமுள்ள மணலை, பதிவு செய்த லாரி உரிமையாளர்களுக்கு பிற்பகல் 2 மணி முதல் மாலை 5 மணி வரை இருப்பை பொருத்து வழங்க உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
தற்பொழுது 16 லாரி குவாரிகள் மற்றும் 21 மாட்டு வண்டி குவாரிகள் இயக்குவதற்கு சுற்றுப்புறச் சூழல் தடையின்மை பெறப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
அரசு மணல் கிடங்குகளில், கூடுதலாக செயல்படவுள்ள வங்கி கவுன்டர்கள் மட்டுமின்றி Net Banking, Debit Card மற்றும் UPI போன் ஆன்லைன் வழியாகவும் பணம் செலுத்தி பொதுமக்கள் மணலை வாங்கலாம் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் ஒரு யூனிட் ஆற்று மணலின் விலை ரூ.1,000ஆக நிர்ணயித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.