Site icon ழகரம்

பொங்கல் பண்டிகைக்கு கேரளாவில் விடுமுறை….!

கேரளத்தில் தமிழ் பேசும் மக்கள் அதிகம் வாழும் 6 மாவட்டங்களுக்கு ஜனவரி 14-ம் தேதி பொங்கல் பண்டிகையை கொண்டாட உள்ளூர் விடுமுறை அறிவிக்கக்கோரி கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று எழுதியுள்ள கடிதத்தில், ”தமிழ் பேசும் மக்கள் பெருமளவில் வாழும் கேரளாவின் 6 மாவட்டங்களில் பொங்கல் பண்டிகைக்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பது குறித்த கோரிக்கை தொடர்பாக தங்கள் அன்பான, உடனடி கவனத்தை ஈர்க்க விழைகிறேன்.

கடந்த 12 ஆண்டுகளாக கேரள அரசு ஜனவரி 14 ஆம் நாளினை பொங்கல் பண்டிகைக்கான உள்ளூர் விடுமுறையாக அறிவித்து வருகிறது என்று அறிகிறேன். ஜனவரி 14ஆம் தேதி, புனிதமான தை தமிழ் மாதத்தின் முதல் நாளாகும்; ஆனால் இந்த 2022 ஆம் ஆண்டில் ஜனவரி 15ஆம் நாளினை இந்த 6 மாவட்டங்களில் விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆகவே, தமிழ்ச் சமூகங்களிடையே, உலகம் முழுவதும் கொண்டாடப்படும் பொங்கல் பண்டிகைக்கான உள்ளூர் விடுமுறை தினமாக ஜனவரி 14 ஆம் நாளை அறிவித்திட நடவடிக்கை மேற்கொள்ள நான் தங்களை அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்” என்று முதல்வர் கோரியிருந்தார்.

தமிழக முதல்வரின் இந்த கோரிக்கையை ஏற்று, தமிழர்கள் அதிகம் வாழும் பகுதிகளான கொல்லம், இடுக்கி, வயநாடு, பத்தனம்திட்டா, பாலக்காடு, திருவனந்தபுரம் ஆகிய 6 மாவட்டங்களுக்கு நாளை (ஜன.14) பொங்கல் விடுமுறை அறிவித்து கேரள அரசு உத்தரவிட்டுள்ளது.

 

Exit mobile version