அரசுக்கு சொந்தமான பொதுத்துறை நிறுவனங்கள், அரசுக்கழகங்கள், சட்டப்பூர்வமான வாரியங்கள், மாநில அரசின் கட்டுப்பாட்டின் கீழ் வரும் அதிகார அமைப்புகளின் பணியிடங்களுக்கான ஆட்சேர்க்கை தொடர்பான கூடுதல் பணிகளை அரசுப் பணியாளர் தேர்வு வாரியத்திடம் ஒப்படைப்பு குறித்த சட்ட முன்வடிவை நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிமுகம் செய்தார். இச்சட்ட மசோதா பேரவையில் ஒருமனதாக நிறைவேறியது.
கடந்த அக்டோபர் மாதம் முதல் நவம்பர் 14ஆம் தேதி வரை கனமழையால் ஏற்பட்ட சேதங்களை கருத்தில் கொண்டு நிவாரணம் மற்றும் தற்காலிக சீரமைப்பு நடவடிக்கைகளுக்காக மாநில பேரிடர் நிவாரண நிதியில் இருந்து 300 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
2021- 22ஆம் ஆண்டிற்கான முதல் துணை மதிப்பீடுகளை நிதி அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்தார். அதன்படி அரசின் பல்வேறு துறைகளின் கூடுதல் செலவினங்களுக்காக 3 ஆயிரத்து 19 கோடியே 65 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
போக்குவரத்து ஊழியர்களுக்கு மிகை ஊதியம் மற்றும் கருணைத் தொகை வழங்குவதற்காக முன்பணமாக 97 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
கரும்பு விவசாயிகளுக்கான நிலுவைத் தொகையை வழங்குவதற்காக 10 கூட்டுறவு மற்றும் 2 பொதுத்துறை சர்க்கரை ஆலைகளுக்கு முன்பணமாக 182 கோடியே 14 லட்சம் ரூபாய் நிதி வழங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
மேலும் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு பணியிடங்களும் தமிழர்களுக்கு மட்டுமே என்று நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் ராஜன் தெரிவித்துள்ளார்.