தமிழகத்தில் பொங்கல் பண்டிகைக்கு பிறகு தொடர்ச்சியாக முழு ஊரடங்கு அமல்படுத்தப்படாது என சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கமளித்துள்ளார்.
தென் ஆப்பிரிக்க நாட்டில் கண்டறியப்பட்ட ஒமைக்ரான் வைரஸ் தொற்று, தமிழகத்தில் கோரத் தாண்டவமாடி வருகிறது. தமிழகம் மட்டுமல்லாமல் இந்தியா முழுவதும், கொரோனா வைரஸ் தொற்றின் மூன்றாவது அலைக்கு ஒமைக்ரான் தொற்று வழிவகுத்து விட்டது.
கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த, தமிழகத்தில் வரும் 31 ஆம் தேதி வரை இரவு நேர ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு உள்ள நிலையில், வரும் 16 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. மேலும் பொங்கல் பண்டிகையையொட்டி பொது மக்கள் வழிபாட்டுத் தலங்களுக்கு செல்லவும் தமிழக அரசு தடை விதித்துள்ளது. பொது போக்குவரத்தில் பேருந்துகளில் 75 சதவீத பயணிகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்க வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.
மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படக்கூடாது என்பதில் முதலமைச்சர் உறுதியாக உள்ளதாகவும், தற்போதைய நிலையில் கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கே போதுமானது எனவும், பொங்கல் பண்டிகைக்கு பிறகு தொடர் முழு ஊரடங்கிற்கு அவசியமில்லை எனவும் அமைச்சர் கூறினார்.