அரசியல்செய்திகள்

“பொங்கல்” தொகுப்பினை நம்பி விளைவிக்கப்பட்ட “செங்கரும்பினை” தமிழ்நாடு அரசே கொள்முதல் செய்ய வேண்டும்! சீமான் வலியுறுத்தல்!

பொங்கல் தொகுப்பினை நம்பி விளைவிக்கப்பட்ட செங்கரும்பினை தமிழ்நாடு அரசே கொள்முதல் செய்ய வேண்டும்! சீமான்:

  • தமிழ்நாடு அரசு வழங்கும் பொங்கல் தொகுப்பில் இந்த ஆண்டு கரும்பு வழங்கப்படாது என்ற திமுக அரசின் அறிவிப்பால் செங்கரும்பினை விளைவித்த கரும்பு விவசாயிகள் மிகுந்த நட்டமடையும் நிலைக்கு ஆளாகியுள்ளது மிகுந்த மனவேதனை அளிக்கிறது. அரசு கொள்முதலை நம்பி கரும்பினை விளைவித்த விவசாயிகளை வீதியில் இறங்கி போராடும் நிலைக்கு திமுக அரசு தள்ளியுள்ளது வன்மையான கண்டனத்திற்குரியது.
  • தமிழ்ப் பேரினத்தின் ஒற்றைத் தேசியத் திருவிழாவான பொங்கல் விழாவினை சீரும் சிறப்புமாக கொண்டாட வேண்டிய அளவிற்கு மக்களின் பொருளாதாரத்தையும், வாழ்வாதாரத்தையும் உயர்த்தாமல் ஒவ்வொரு ஆண்டும் இலவச வேட்டி, சேலை முதல் பொங்கல் வைப்பதற்கு தேவைப்படும் பொருட்கள் வரை இலவசமாக கொடுத்தால்தான் கொண்டாட முடியும் என்ற வறுமை நிலையில் தமிழ் மக்களை வைத்திருப்பதுதான் அறுபது ஆண்டுகாலமாக தமிழ்நாட்டை ஆட்சி செய்து வரும் திராவிட கட்சிகள் ஏற்படுத்திய வளர்ச்சி, செய்த சாதனை, ஏற்படுத்திய வாழ்வியல் முன்னேற்றமாகும்.
  • ஐயா எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் தலைமையிலான கடந்த அதிமுக ஆட்சிகாலத்தில் பொங்கல் தொகுப்புடன் 2000 ரூபாய் கொடுப்பதாக அறிவித்தபோது, அதனை 5000 ரூபாயாக உயர்த்தி வழங்க வேண்டும் என்று அன்றைய எதிர்க்கட்சித் தலைவர் ஐயா ஸ்டாலின் அவர்கள் வலியுறுத்தினார்கள். தற்போது திமுக ஆட்சி காலத்தில் வழங்கப்படவிருக்கும் 1000 ரூபாயை 5000 மாக உயர்த்தி வழங்க எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் வலியுறுத்துகிறார். இந்த கொடுமைகளையெல்லாம் வேடிக்கை பார்ப்பதே தமிழக மக்களின் வாடிக்கையாகிவிட்டது.
  • இந்நிலையில் கடந்த ஆண்டு பொங்கல் தொகுப்பில் ஒழுகும் வெல்லம், காய்ந்த கரும்பு, புளியில் பல்லி, பூச்சியரித்த முந்திரி என்று தரமற்ற பொருட்களை கொடுத்து திமுக அரசு செய்த முறைகேடுகளால் பொதுமக்களிடத்தில் கடும் விமர்சனத்திற்கு ஆளானது.
  • தவறை திருத்திக்கொண்டு தரமான பொருட்களை மக்களுக்கு வழங்க நிர்வாகத் திறனற்ற திமுகவின் திராவிட மாடல் அரசு, இந்த ஆண்டு பொங்கல் தொகுப்பு பொருட்களுக்கு பதிலாக குடும்பத்திற்கு, 1000 ரூபாய் என மக்களின் வரிப்பணத்தையே மீண்டும் அவர்களுக்கு கொடுப்பதாக அறிவித்துள்ளது.
  • இதனால் கடந்த பல ஆண்டுகளாக பொங்கல் தொகுப்பிற்காக மேற்கொள்ளப்பட்ட அரசு கரும்பு கொள்முதலை நம்பி, இலட்சக்கணக்கான ஏக்கரில் கரும்பினை விளைவித்த விவசாய பெருமக்கள் மிகுந்த ஏமாற்றமும், வேதனையும் அடைந்துள்ளனர். கரும்பு விற்பனை இடைத்தரகர்கள் அடிமாட்டு விலைக்கு கரும்பினை வாங்க முன்வருவதால் வெட்டும் கூலி கூட கிடைக்காது நட்டமடையும் நிலைக்கும் விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர். இதனால் பல இடங்களில் வீதியில் இறங்கி அரசு கொள்முதலை வலியுறுத்தி விவசாயிகள் போராடியும் வருகின்றனர்.
  • பொங்கல் தொகுப்பு பொருட்கள் வழங்கப்படாது என்பதை திமுக அரசு முன்கூட்டியே அறிவித்திருந்தால் அதற்கேற்ப விவசாயிகள் சாகுபடி பரப்பளவை குறைத்து கரும்பினை பயிரிட்டுப்பார்கள். ஆனால் அரசு அதனை செய்யத் தவறியதால் தற்போது விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ள நட்டத்திற்கு முழுக்க முழுக்க தமிழ்நாடு அரசே பொறுப்பேற்க வேண்டும்.
  • ஆகவே, கரும்பு விவசாயிகளின் நியாயமான கோரிக்கையை ஏற்று விளைவிக்கப்பட்ட செங்கரும்பினை தமிழ்நாடு அரசே உடனடியாக கொள்முதல் செய்ய வேண்டுமென நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்.

User Rating: 4.43 ( 2 votes)

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button