ஆசிரியர்களின் போராட்டத்தில் சீமான்! சம ஊதியம் வழங்காமல் ஏமாற்றி வருவது திமுக அரசின் பச்சை துரோகம் என கடும் விமர்சனம்.
Editor Zhagaram
ஊதிய முரண்பாடுகளைக் களைந்து அனைத்து இடைநிலை ஆசிரியர்களுக்கும் சம ஊதியம் வழங்க வேண்டும் என்ற நீண்டநாள் கோரிக்கையை முன்வைத்து சென்னை, பள்ளிக்கல்வித்துறை வளாகத்தில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் ஆசிரியப் பெருமக்களை நாம் தமிழர் கட்சி சார்பாக நேரில் சந்தித்து, ஆதரவு தெரிவித்தார் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்.
அரசுப்பள்ளிகளில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்களில் குறிப்பிட்ட பகுதியினருக்கு மட்டும் தமிழ்நாடு அரசு குறைவான ஊதியம் வழங்கி வருவது சிறிதும் அறமற்ற செயலாகும். ஆட்சிக்கு வந்தவுடன் சம ஊதியம் வழங்கப்படும் என்ற தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாமல் திமுக அரசு ஏமாற்றி வருவது வன்மையான கண்டனத்திற்குரியது.
ஆட்சிப் பொறுப்பேற்று 20 மாதங்களாகியும் தேர்தல் வாக்குறுதிப்படி, இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாட்டைக் களைந்து அவர்களுக்கு சம ஊதியம் வழங்காமல் திமுக அரசு ஏமாற்றிவருவது ஆசிரியர் பெருமக்களுக்குச் செய்கின்ற பச்சைத் துரோகமாகும்.
ஆகவே, நாட்டின் வருங்காலத் தலைமுறையைச் செதுக்கும் சிற்பிகளான ஆசிரியர்களிடையே நிலவும் ஊதியப் பாகுபாட்டைக் களைந்து உடனடியாக அனைத்து இடைநிலை ஆசிரியப் பெருமக்களுக்கும் சம ஊதியம் வழங்க அரசாணை வெளியிட வேண்டுமென்று தமிழ்நாடு அரசினை நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன் என சீமான் தெரிவித்துள்ளார்.