முதுகுளத்தூர் கலவரத்தைத் தொடர்ந்து, முத்துராமலிங்கதேவர் கைது செய்யப்பட்ட போது ஈவேரா.பெரியார் விடுத்த அறிக்கை:
- பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரை ஆட்சியாளர் கைது செய்தது பற்றி ஒரு சில கும்பல்கள் முதலைக் கண்ணீர் வடிக்கத் தொடங்கியிருக்கின்றன. பார்ப்பன ஏடுகளான ‘தினமணி’, ‘கல்கி’ போன்றவைகள் அவரை விடுதலை செய்ய வேண்டுமென்று கசிந்துருகிக் கண்ணீர் மல்கி எழுதுகின்றன. கலவரப் பிரச்சினையோடு சம்மந்தமில்லாத பல்வேறு சங்கதிகளைக் கலந்து, முதலமைச்சர் மீது தவறான எண்ணங்களைக் கற்பித்து விஷமத்தனமாக எழுதியிருக்கின்றன.
- சமாதானக் குழு என்ற பெயரினால் புறப்பட்டிருக்கிற எதிர்க்கட்சிக்காரர்களின் கலவரக் கும்பலும் கோவிந்தா! கோவிந்தா! என்று இம்மாதத்தில் சனிக்கிழமைக் காலையில் சிறுவர்கள் வீடு தோறும் சென்று கத்துவதுபோலக் கத்திக் கொண்டிருக்கிறது.
- திரு.தேவர் அவர்களுக்குக் கட்சியுமில்லை; கொள்கையுமில்லை. ‘சுபாஷ் போஸ் உயிரோடிருக்கிறார்’ என்பது மட்டும் ஒரு கட்சிக்குக் கொள்கையாகிவிடுமா? தேவர் தம் சிறந்த பேச்சுச் சக்தியைப் பயன்படுத்தி, தம் ஜாதிக்காரர்களின் தனிப் பெருந் தலைவராயிருந்துகொண்டு, அதன் மூலம் சட்டசபை அல்லது பார்லிமெண்டில் பதவி பெறுவது என்பதே அவரது பொதுத் தொண்டாயிருந்து வருகிறது.
- எதிர்க்கட்சிகள் தேர்தலில் வெற்றிப் பெற்று மந்திரிசபை அமைக்க முடிந்தால் அதில் தமக்கொரு மந்திரி கிடைக்குமா என்பதற்காக 2, 3 பேர்களைச் சேர்த்துக் கொண்டு தனிக் கட்சியமைப்பவராதலால் அந்த வாய்ப்பு இல்லையென்றவுடனேயே பார்லிமெண்ட் உறுப்பினர் பதவியை வைத்துக் கொண்டு (அதிக ஊதியம் அதில் இருப்பதால்) எம்.எல்.ஏ. பதவியை உதறிவிட்டார். தன்னந்தனியாய்ப் பார்லிமெண்டில் போய் இவர் என்ன சாதிக்கப் போகிறார் என்பதைப் பற்றி அவரைத்தான் கேட்க வேண்டும்.
- ஜாதி வெறியை வளர்த்து மற்ற ஜாதிகளை ஒடுக்கி வைத்துத் தான் ஒரு தனிக்காட்டு ராஜா மாதிரி இருந்து வந்தால் ஜாதி ஒழிப்புக்காரராகிய நாம் வருந்தாமலிருக்க முடியவில்லை. ஜாதி வெறி வேரூன்றிவிட்டால் ஜனநாயகத்துக்கோ, பகுத்தறிவுக்கோ, பொதுநலத் தொண்டுக்கோ, ஒழுக்கத்துக்கோ, நீதிக்கோ இடமில்லை.
- தேவர் சிறைவாசத்தை நாமும் விரும்ப வில்லை என்றாலும், இந்தச் சூழ்நிலையில் அவரைச் சிறைப் பிடிக்காதிருந்தால் சாதிச்சண்டை நின்றிருக்காதென்பது உறுதி. அவர் வெளியிலிருந்த வரை கலவரம் நடந்து கொண்டிருந்ததும், கைது செய்யப்பட்ட பின் கலவரம் அடியோடு ஓய்ந்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.
- இன்று அவருக்காக நீலிக் கண்ணீர் வடிக்கின்ற சி.ஆர். (இராஜகோபாலாச்சாரி), கும்பலைச் சேர்ந்தவர்களுக்கு ஒன்று நினைவூட்டுகிறோம். இதே சி.ஆர். அவர்கள் முதலமைச்சராயிருந்தபோதுதான் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் திரு.முத்துராமலிங்கனார் கைது செய்யப்பட்டுப் பல ஆண்டுகள் தொடர்ந்து காவலில் வைக்கப்பட்டிருந்தார்.
- 2-வது உலகப் போரின்போது இவர் ஜாதிச் சண்டைக்குக் காரணமாயிருப்பார், போர் எதிர்ப்புப் பிரச்சாரஞ்செய்வார் என்ற காரணத்திற்காகச் சிறைப்படுத்தப்பட்டிருந்தார்.
- இன்றைய நிலையிலுங்கூட முன்கூட்டியே தேவரைத் தனிப்படுத்தியிருந்தால் இத்தனை உயிர்கள் பலியாகியிருக்குமா? இவ்வளவு பொருட்சேதம் ஏற்பட்டிருக்குமா? இத்தகைய ஆதிதிராவிடக் குடும்பங்கள் ஊரைவிட்டு வெளியேறி தவிக்குமாறு நேர்ந்திருக்குமா?
- போலீஸ் நடவடிக்கை சிறிது தாமதமானதால்தான் இவ்வளவு சேதம் ஏற்பட்டது. இன்னும் பல மாதங்களுக்குப் போலீஸ்படை கலவரப் பகுதிகளில் காவல் புரிந்துதான் தீர வேண்டும். போலீஸ் துப்பாக்கிப் பிரயோகத்தினால் மாண்டவர்களுக்காக முதலைக் கண்ணீர் வடிக்கின்றவர்கள், மாதாகோயிலுக்குள் புகுந்து ஏழை மக்களைச் சாதிவெறியர்கள் பதைக்கப் பதைக்கச் சுட்டுக்கொன்றும், அடித்தும், பெண்களை அவமானப்படுத்தியும் மிருகத்தனமாக நடந்துக் கொண்டதைக் கண்டிக்காமலும் வருந்தாமலும் இருப்பது ஏன்?
- சமாதானக் குழு என்ற புதுக் கும்பல் இனிப் புதுக் கலகத்துக்கு விதை ஊன்றுவார்களோ என்று அஞ்ச வேண்டியதிருக்கிறது. இவர்கள் பேச்சும் நடத்தையும் அத்தகையதாயிருக்கிறது. ஆதலால் அவர்களைக் கலவரப்பகுதியில் நுழையவிடக் கூடாதென்று ஆட்சியாளருக்கு எச்சரிக்கின்றோம். குழம்பியுள்ள குட்டையில் மீன் பிடிக்கப்பார்க்கிறார்கள் இக்குழுவினர். இவர்களுக்கு பஸ்ஸூல்லா ரோடுப் பார்ப்பனர் தலைவர் தூபம் போடுகிறார்.
– ஈவேரா பெரியார்
‘விடுதலை நாளேடு’ 08-10-1957