Site icon ழகரம்

ஜல்லிக்கட்டு : தமிழக அரசின் கட்டுப்பாடுகள்…..!

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஜல்லிக்கட்டுப் போட்டிகளை பார்வையிட 150 பார்வையாளர்களுக்கு மட்டும் அனுமதி வழங்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

‘ஜல்லிக்கட்டுப் போட்டிகளில் ஒரு காளையுடன் சுமார் 5 முதல் 6 நபர்கள் பங்கேற்பது வழக்கம். இதனைக் கட்டுப்படுத்தி ஒரு காளையுடன் ஓர் உரிமையாளர் மற்றும் காளையுடன் நன்கு பழக்கமுள்ள ஓர் உதவியாளர், இரண்டு டோஸ் கொரோனா தடுப்பூசி போட்டதற்கான சான்று மற்றும் நிகழ்ச்சி நடைபெறும் தேதியிலிருந்து இரண்டு நாள்களுக்குள் கொரோனா தொற்று இல்லை (RT-PCR Test) பரிசோதனை செய்த சான்றிதழ் ஆகியவற்றை வைத்திருந்தால் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.

> காளையின் உரிமையாளர் மற்றும் அவரது உதவியாளருக்கு மாவட்ட நிர்வாகத்தின் மூலம் அடையாள அட்டை வழங்கப்படும். மேலும், அடையாளம் அட்டை இல்லாத நபர்களுக்கு ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி நடைபெறும் வளாகத்துக்குள் நுழைய அனுமதி இல்லை.

> காளைகளை பதிவு செய்யும்போது அந்தக் காளையின் உரிமையாளர் மற்றும் உடன்வரும் உதவியாளர் ஆகியோரும் பதிவு செய்தல் வேண்டும். ஜல்லிக்கட்டில் பங்குபெறும் காளைகளின் பதிவு, நிகழ்ச்சி நடைபெறுவதற்கு மூன்று நாள்களுக்கு முன்பே முடிக்கப்பட வேண்டும்.

> ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு மற்றும் வடமாடு நிகழ்ச்சிகளில் மாடுபிடி வீரர்கள் 300 நபர்களுக்கு மிகாமல் கலந்துகொண்டு நிகழ்ச்சி நடத்த அனுமதிக்கப்படுகிறது.

> எருது விடும் நிகழ்ச்சியில் 150 வீர்களுக்கு மிகாமல் கலந்து கொண்டு நிகழ்ச்சி நடத்த அனுமதிக்கப்படுகிறது.

> ஜல்லிக்கட்டில் பங்குபெறும் வீரர்களுக்கு, நிகழ்ச்சி நடைபெறும் தேதியிலிருந்து மூன்று நாள்கள் முன்பாக பதிவு செய்து, மாவட்ட நிர்வாகத்தின் மூலம் அடையாள அட்டை வழங்கப்பட வேண்டும். மேலும், அடையாள அட்டை இல்லாத வீரர்கள் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி நடைபெறும் வளாகத்துக்குள் நுழைய அனுமதிக்கப்படமாட்டார்கள்.

> ஜல்லிக்கட்டில் பங்குபெறும் வீரர்களுக்கு, இரண்டு டோஸ் கொரோனா தடுப்பூசி போட்டதற்கான சான்றிதழ் மற்றும் நிகழ்ச்சி நடைபெறும் தேதியிலிருந்து 2 நாள்களுக்குள் கரோனா தொற்று இல்லை (RT-PCR Test) பரிசோதனை சான்றிதழ் பெறப்பட்டவர் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.

> தமிழ்நாடு அரசினால் வெளியிடப்படும் கரோனா தடுப்பு நடைமுறைகளை பின்பற்றி பார்வையாளர்கள், திறந்தவெளி அரங்கின் அளவிற்கேற்ப தனிமனித இடைவெளியை கடைபிடிக்கும் வகையில் அதிகபட்சமாக 150 பார்வையாளர்கள் அல்லது அனுமதிக்கப்பட்ட இருக்கை எண்ணிக்கையில் 50 சதவீதத்துக்கு மிகாமல், இவற்றில் எது குறைவோ அந்த எண்ணிக்கையில் பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுவார்கள். பார்வையாளர்கள் இரண்டு டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றிதழ் மற்றும் நிகழ்ச்சி நடைபெறும் இரண்டு நாள்களுக்குள் கொரோனா தொற்று இல்லை (RT-PCR Test) பரிசோதனை என்பதற்கான சான்று ஆகியவற்றை வைத்திருந்தால் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.

> ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியை மேற்பார்வை செய்யும் அனைத்து துறை அலுவலர்களும், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்களும் இரண்டு டோஸ் கொரோனா தடுப்பூசி போட்டதற்கான சான்று மற்றும் இரண்டு நாள்களுக்குள் கரோனா தொற்று இல்லை (RT-PCR Test) பரிசோதனை என்பதற்கான சான்று ஆகியவற்றைவ வைத்திருக்க வேண்டும்.

> அனைத்து துறை அலுவலர்களும், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்களும் பார்வையாளர்களும் மற்றும் ஊடகத்துறையைச் சார்ந்தவர்களும் அரசினால் அறிவுறுத்தபப்டட நடைமுறைகளை தவறாமல் பின்பற்ற வேண்டும்.

> வெளியூரில் வசிப்பவர்கள் ஜல்லிக்கட்டு நிகழ்வுகளை தொலைக்காட்சி மற்றும் இணையதளம் வழியாக காண அறிவுறுத்தப்படுகிறது.

> ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகள் நடத்த அரசின் முன் அனுமதி பெற்று பிராணிகள் வதை தடுப்பு (ஜல்லிக்கட்டு நெறிமுறைகள்) விதிகள் 2017, அரசினால் வெளியிடப்பட்டுள்ள ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் ஆகியவற்றுடன் அரசினால் விதிக்கப்படும் கரோனா தடுப்பு கட்டுப்பாடுகள் அனைத்தையும் பின்பற்றப்பட வேண்டும்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Exit mobile version