Site icon ழகரம்

மீனாட்சி சுந்தரத்திற்கு “திருவள்ளுவர் விருது”; குமரி அனந்தனுக்கு “காமராசர் விருது” – அரசு அறிவிப்பு….!

2022ஆம் ஆண்டிற்கான அய்யன் திருவள்ளுவர் விருது பெங்களூருவில் திருவள்ளுவர் சிலை திறக்கக் காரணமாக இருந்த மீனாட்சி சுந்தரத்திற்கும், பழம்பெரும் காங்கிரஸ் தலைவர் குமரி அனந்தனுக்குப் பெருந்தலைவர் காமராசர் விருதும் வழங்கப்படுவதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்..

தமிழக அரசால் ஒவ்வொரு ஆண்டும், திருக்குறள் நெறி பரப்பியும் திருவள்ளுவர் சிலை நிறுவுதல் முதலான திருக்குறள் தொடர்பான தொண்டுபுரிந்து வருபவர்களுக்கு அய்யன் திருவள்ளுவர் விருது வழங்கப்பட்டு வருகிறது. அவ்வகையில், பெங்களுர் தமிழ்ச் சங்கத்தின் மேனாள் தலைவரும், அனைத்திந்திய தமிழ்ச் சங்கப் பேரவையின் தலைவரும், 2009ஆம் ஆண்டு மேனாள் தமிழக முதல்வர் கருணாநிதி தலைமையில் பெங்களுரில் திருவள்ளுவர் சிலையைத் திறப்பதற்குக் காரணமானவர்களில் முதன்மையானவர்களுள் ஒருவராகவும், கன்னியாகுமரி மாவட்டம் காப்பியக் காட்டில் தொல்காப்பியர் சிலை நிறுவி, திறக்கப்படுவதற்கு முதன்மையானவர்களுள் ஒருவராக இருந்து பணியாற்றியவரும், பெங்களுரு இந்தியன் தொலைபேசி தொழிலகத்தில் முதுநிலைப் பொறியாளராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவரும், பெங்களுரில் வசிக்கும் திருச்சிராப்பள்ளியைச் சார்ந்த மு. மீனாட்சி சுந்தரத்திற்கு (வயது 78) தமிழக அரசு, 2022ஆம் ஆண்டிற்கான அய்யன் திருவள்ளுவர் விருதினை வழங்குகிறது.

அதேபோன்று, பெருந்தலைவர் காமராசருடன் இணைந்து பணியாற்றிய தமிழகத்தின் மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவரும், நாடாளுமன்றத்தில் தமிழில் கேள்விகளைக் கேட்டு உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர், தமிழக சட்டப்பேரவை உறுப்பினர் ஆகிய பதவிகளை வகித்தவரும், தமிழ் இலக்கியங்களில் புலமையும் பேச்சாற்றலும் மிக்கவராகவும், தமிழ் இலக்கியவாதியாகவும் சிறந்த நூல்களைப் படைத்தவரும் பன்முகத் திறன் கொண்ட சொல்லின் செல்வர் முனைவர் குமரி அனந்தனுக்கு (வயது 88) தமிழக அரசு, 2021ஆம் ஆண்டிற்கான பெருந்தலைவர் காமராசர் விருதினை வழங்குகிறது.

விருது பெறும் விருதாளர்கள் ஒவ்வொருவருக்கும் விருதுத் தொகையாக ரூபாய் ஒரு லட்சம், ஒரு சவரன் தங்கப்பதக்கம், தகுதியுரை வழங்கியும் பொன்னாடை அணிவித்தும் சிறப்பிக்கப் பெறுவார்கள். இவ்விருதுகள் முதல்வர் மு.க.ஸ்டாலினால் வழங்கப்படவுள்ளன.

 

Exit mobile version