குடிநீர் தொட்டியில் மலம்! கோயிலுக்குள் அனுமதி இல்லை! புதுக்கோட்டை மாவட்டம், வேங்கை வயல் கிராமத்தில் சாதிய கொடூரம்!
Editor Zhagaram
புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவாசல் அருகே இறையூர் வேங்கைவயல் என்ற கிராமம் உள்ளது.இந்த கிராமத்தில் பட்டியலின மக்கள் பயன்படுத்தும் வகையில், அவர்கள் வசிக்கும் பகுதிக்கு பக்கத்திலேயே, ஒரு மேல்நிலை நீர்தேக்கத் தொட்டி உள்ளது.இந்த தொட்டியின் குடிநீரைதான், அந்த பகுதி மக்கள் பயன்படுத்தி வருகிறார்கள். இந்நிலையில், கடந்த 3 நாட்களாகவே, அந்த பகுதி மக்களுக்கு திடீர் வாந்தி, மயக்கம், வயிற்றுப் போக்கு ஏற்பட்டது. பெரும்பாலான மக்கள், ஒவ்வாமை பிரச்சினையால் அவதிப்பட துவங்கினர்.
இதனால், பாதிக்கட்டவர்கள் அனைவரும், மருத்துவமனைக்கு சென்றுள்ளனர். அப்போது சாப்பாடு அல்லது குடிநீரில் ஏதேனும் பிரச்சினை இருந்திருக்கலாம் என்று சொல்லி டாக்டர்கள் அவர்களுக்கு சிகிச்சையும் தந்தனர். வெறும் 3 நாட்களுக்குள்ளேயே, பெரும்பாலான மக்கள் பாதிக்கப்பட்டதால், ஒருவேளை, அந்த குடிநீர் தண்ணீர் தொட்டியில் ஏதேனும் விலங்கு இறந்து கிடக்கலாம் என்று நினைத்து, தண்ணீர் தொட்டியில் ஏறி பார்த்துள்ளனர். அப்போதுதான் தண்ணீர் தொட்டியில் மலம் கலக்கப்பட்டதை பார்த்து, கிராம மக்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இதையடுத்து, தொட்டியில் உள்ள தண்ணீர் முழுமையாக வெளியேற்றப்பட்டது. தொட்டியை சுத்தப்படுத்தும் பணி நடந்து கொண்டிருக்கிறது. இது தொடர்பாக போலீசுக்கும் தகவல் தெரிவித்துள்ளதையடுத்து, இந்த காரியத்தை செய்த சமூக விரோதிகள் யார் என்ற விசாரணையையும் மேற்கொண்டு வருகின்றனர். மலம் கலந்த தண்ணீரை குடித்த மக்களுக்கு மருத்துவர்கள் மருந்து, மாத்திரைகளை வழங்கினர்.
சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்ட மாவட்ட ஆட்சியரிடம் மக்கள் தங்களை கோயிலுக்குள் அனுமதிப்பதில்லை என்ற குற்றச்சாட்டையும் வைத்த நிலையில் கோயிலுக்குள் பட்டியலின மக்களை அழைத்து சென்றார் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு மற்றும் மாவட்ட எஸ்.பி வந்திதா பாண்டே.
பட்டியலினத்தோர் கோயிலுக்குள் நுழைந்ததால் சாமியாடி அவதூறாக பேசிய பெண் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் வழக்குப்பதிவு செய்ய மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு உத்தரவிட்டுள்ளார்.