Site icon ழகரம்

ராஜேந்திர பாலாஜி கர்நாடகாவில் கைது…..!

ஆவினில் வேலை வாங்கி தருவதாக பண மோசடி செய்த வழக்கில் தேடப்பட்டு வந்த முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி இன்று கர்நாடகாவில் கைது செய்யப்பட்டுள்ளார்.

அதிமுக ஆட்சியில் பால்வளத்துறை அமைச்சராக இருந்த ராஜேந்திர பாலாஜி, ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கித் தருவதாக ரூ.3 கோடி மோசடி செய்ததாகப் புகார் எழுந்தது. இந்த வழக்கில் போலீஸார் தன்னைக் கைதுசெய்யாமல் இருக்க முன்ஜாமீன் கேட்டு ராஜேந்திர பாலாஜி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். இந்த மனுவை உயர் நீதிமன்றம் டிசம்பர் 17-ம் தேதி தள்ளுபடி செய்தது.

இந்த வழக்கில் முன்ஜாமீன் கிடைக்காமல் போக, கடந்த மாதம் விருதுநகரில் நடைபெற்ற அதிமுக-வின் கண்டன ஆர்ப்பாட்டத்தை அவசர அவசரமாக முடித்துக்கொண்டு கிளம்பிய ராஜேந்திர பாலாஜி தலைமறைவானார்.

விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு ஆய்வாளர் கணேஷ்தாஸ் தலைமையில் ஆறு தனிப்படைகள் அமைக்கப்பட்டன. பின்னர், கூடுதலாக இரு தனிப்படைகள் அமைக்கப்பட்டன.

கேரளா, பெங்களூரு, சென்னை, கோவை, திருச்சி பாண்டிச்சேரி திருப்பதி திருப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் தனிப்படை முகாமிட்டு தேடி வந்தனர். சுமார் 20 நாட்கள் தேடுதலுக்கு பிறகு, கர்நாடகாவில் ராஜேந்திர பாலாஜியை தனிப்படை போலீஸார் கைது செய்துள்ளனர்.

 

Exit mobile version