அம்பேத்கரின் உருவச் சிலை சேதம்! மர்ம நபர்களை தேடும் திருவள்ளூர் காவல்துறை!
Editor Zhagaram
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே நெடுவரம்பாக்கத்தில் அமைந்துள்ள டாக்டர் அம்பேத்கர் சிலையில், முகம், கை மற்றும் கண்ணாடியை மர்ம நபர்கள் சேதப்படுத்தியுள்ளனர். அம்பேத்கரின் சிலை உடைக்கப்பட்டு இருப்பதைக் கண்ட அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்து, சோழவரம் காவல் நிலையத்தில் இதுகுறித்து புகார் அளித்தனர்.
அதன்பேரில் அம்பேத்கரின் உருவச் சிலையை சேதப்படுத்திய மர்ம நபர்களை சோழவரம் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். மேலும் அம்பேத்கர் சிலையில் சேதமடைந்த பகுதிகளை துணியால் மூடியுள்ளனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவிவரும் நிலையில், பாதுகாப்பிற்காக போலீசார் நிறுத்தப்பட்டுள்ளனர்.
ஆங்கிலப் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது மது போதையில் மர்ம நபர்கள் சிலையை சேதப்படுத்தினரா என்ற கோணத்தில் சோழவரம் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.