கடைசிவரை “வாடகை வீட்டில்” வாழ்ந்த மாமனிதர் எளிமையின் சிகரம் “கக்கன்”…!!
- அரசியல் வாழ்வுக்கு வருபவர்கள் தன்னலமற்ற, தியாகியாக இருப்பதில்லை, அதன்படி இருப்பவர்கள் மனிதருள் மாணிக்கமாகத் திகழ்வதில்லை. மனிதருள் மாணிக்கமாக, தன்னலமற்ற தியாகியாகத் திகழந்தவர், நாம் போற்றிப் புகழும் கக்கன் அவர்கள்.
- கக்கனை பற்றி திரு. அ. பத்மநாபன் ஐ.ஏ.ஏஸ் கூறியது, நான் கோயம்புத்தூரில் துணை ஆட்சியராக, ஓர் ஆண்டு பயிற்சியை முடித்து, கோபிசெட்டிப் பாளையத்தில் கோட்டாட்சித் தலைவராக நியமனம் செய்யப்பட்டேன். அப்போது, சுற்றுப்பயணமாக அங்கு வந்த மாண்புமிகு அமைச்சர் கக்கன் அவர்களைச் சந்திக்கும் பேறு பெற்றேன். அப்போது அவர் பொதுப் பணித்துறையுடன் ஹரிஜன நலத்துறை அமைச்சராகவும் இருந்தார். அவருடன் பல கிராமங்களுக்குச் செல்லும் வாய்ப்பு கிட்டியது.
- சத்தியமங்கலம் வட்டத்தில் தாளவாடி என்னும் கிராமம் முன்னேற்றம் காணாத இடமாக இருந்தது. அங்குள்ள மக்களிடம் வேளாண்மை பற்றிய விவரங்களையும், அவர்கள் துன்பங்களையும் பரிவோடு கேட்டறிந்தார். அங்குள்ள தட்பவெப்ப நிலையை அதிகாரிகளிடம் கேட்டறிந்து, பட்டுப்பூச்சி வளர்க்கும் தொழிலை ஆரம்பித்து வைத்தார். பிறகு பவானி வட்டத்தில் உள்ள பர்கூர் என்னும் கிராமத்திற்குச் சென்று, அங்கு வாழும் மலைவாழ் மக்களின் வாழ்க்கை முறைகளையும் அவர்களின் தேவைகளையும், கேட்டறிந்து அதிகாரிகளிடம் பேசி, ஆவன செய்வதாகக் கூறினார். எல்லா மக்களிடமும் அவர் எளிய மனிதராகப் பழகி, அன்போடு அவர்களை அரவணைத்த விதம் என்னை மெய்சிலிர்க்க வைத்தது.
- அதன்பிறகு, 1963ஆம் ஆண்டில் கும்பகோணத்தில் கோட்டாட்சித் தலைவராகப் பணிசெய்தபோது, அங்கும் கக்கன் அவர்கள் வந்தார்கள். ஆடுதுறை என்ற இடத்தில் அமைக்கப்பட்ட நெல் பரிசோதனை நிலையத்தைப் பார்வையிட்டு, உழவுத்தொழில் தொடர்பான பல கேள்விகள் கேட்டு, அவருக்கு இருந்த வேளாண்மைப் புலமையை வெளிப்படுத்தினார். அங்குள்ள அலுவலகத்திற்கு வந்தவர், எதேச்சையாக ஒரு மேசை இழுவைப் பெட்டியைத் திறந்து பார்த்தார். சில அரசாங்கக் காகிதங்கள் எலிகளால் கடிக்கப்பட்டு, துண்டு துண்டாகக் கிடப்பதைப் பார்த்து, தொடர்புடைய எழுத்தரை மிகவும் கடிந்து கொண்டார். அரசாங்கப் பொருள்களை எப்படிப் பேணவேண்டும் என்ற கோட்பாட்டினை அவர் சொன்னபோது எல்லாரும் வாயடைத்துப் போனார்கள்.
- 1964ஆம் ஆண்டில் முதல் ஐந்து மாதங்கள் கன்னியாகுமரி மாவட்டத்தில், மாவட்ட ஆதி திராவிட நல அலுவலராக நான் பணியாற்றினேன். அப்பொழுது அமைச்சர் கக்கன் அவர்கள் அம்மாவட்டத்திற்கு வருகை தந்தார். அப்பொழுது, சுற்றுப்பயணத்தை முடித்துவிட்டுச் சென்னை திரும்பும்போது என்னிடம் “செங்கல்பட்டு மாவட்டத்திற்கு இதே பணியைச் செய்வதற்கு வருகிறீர்களா?” என்று கேட்க, நானும் சம்மதித்தேன். ஆதலால், உடனே நான் செங்கல்பட்டு மாவட்டத்தில், மாவட்ட ஆதி திராவிட நல அலுவலராக மாற்றப்பட்டுப் பணியில் சேர்ந்தேன். அப்பொழுது, செங்கல்பட்டு மாவட்ட ஆட்சித் தலைவரின் அலுவலகம் சைதாப்பேட்டையில் தற்பொழுது உள்ள அரசு கலைக் கல்லூரி கட்டடத்தில் செயல்பட்டு வந்தது. மாவட்ட ஆதி திராவிட நல அலுவலர் அலுவலகமும் அங்குதான் இருந்தது. ஆகவே, நான் சென்னையில் வசித்து வந்தேன். இதனால் அமைச்சர் அவர்களைப் பணி தொடர்பாக அவ்வப்போது சந்திக்கும் நல்ல வாய்ப்புக் கிடைத்தது.
- மேலும், அவர் செங்கல்பட்டு மாவட்டத்தில் ஒரு சில சமயங்களில் சுற்றுப்பயணம் வந்தார். அவ்வாறு வரும்போது எல்லாம், முக்கியமாக தலித் மக்கள் வசிக்கும் இடங்களுக்குச் சென்று அவர்கள் குடியிருக்கும் சூழ்நிலைகள், அங்கு வேண்டிய அடிப்படை வசதிகளான வீட்டு வசதி, குடிநீர், தெருவிளக்கு, இணைப்புச் சாலை, மயான வசதி போன்றவைகளையும் கேட்டு, வேண்டிய இடங்களில் தக்க நடவடிக்கை எடுக்கச் சொல்வார். மாவட்டத்திலுள்ள மாணவர் விடுதிகள், துறை நடத்தும் பள்ளிகளுக்குச் சென்று பார்வையிடுவார். அக்காலத்தில் பல விடுதிகள் தனியார் கட்டடங்களில்தான் இயங்கி வந்தன.
- ஆதலால், மாணவர்களுக்கு வேண்டிய அடிப்படை வசதிகள் அங்கு இருக்கின்றனவா என்று கேட்டு அறிந்தும், அவர்களுக்கு அளிக்கப்படும் உணவின் தன்மையைக் கேட்டும், விடுதிக் காப்பாளர்களுக்குத் தக்க அறிவுரைகள் கொடுப்பார். மாணவர் விடுதியாக இருந்தாலும், பள்ளியாக இருந்தாலும், தொடர்புடையவர்களிடம் அங்குள்ள மாணவர்களின் கல்வியைப்பற்றி மிகவும் கவனமாகக் கேட்டு, அவர்களுக்கு மாணவர்களை நன்றாகக் கல்வியைக் கற்க வைக்கவேண்டும் என்று அறிவுரைகள் கொடுப்பார். மாணவர்களுக்கும் கல்வியின் முக்கியத்துவத்தை எடுத்துச் சொல்வார்.
- இவ்வாறு அமைச்சர் அவர்களைத் தனியாகப் பார்க்கும்போது, அவர் கொடுத்த அறிவுரைகள் மற்றும் கற்றுப்பபணத்தின்போது சொல்லிய கருத்துக்கள் மற்றும் அறிவுரைகள் எனது மனத்தில் ஆழமாகப் பதிந்துவிட்டன. மக்களோடு மக்களாகச் சாமான்ய மனிதராக நின்று அவர்களின் துயர்நீக்கும் ஒரு மாபெரும் மனித நேயத்தை அவரிடமும் நான் கண்டேன்.
- எனக்கு அப்பொழுது வயது 31 ஆகும். பணியில் சேர்ந்து 5 ஆண்டுகள்தான் ஆகியிருந்தது. அவருடைய அறிவுரைகள் நான் பிற்காலத்தில் இந்தத் துறையின் இயக்குநராகவும் செயலாளராகவும் பணியாற்றும்போது நல்ல வழிகாட்டிகளாக அமைந்தன. ஏன்? எனது பணிக்காலம் முழுதும் பொதுமக்களிடம் எவ்வாறு பழகவேண்டும், அரசுப் பணிகள் செய்யும்போது எவ்வாறு மனிதாபிமானம் கொண்டு செயல்படவேண்டும் என்ற நல்ல கருத்துக்கள் எனது மனத்தில் புதிய வழிவகுத்தன.
- பிறகு, எனக்கு வேலூர் மாவட்ட ஆட்சித் தலைவருக்கு நேர்முக (பொது) உதவியாளராக மாற்றல் உத்தரவு வந்தது. அந்த உத்தரவைத் திரு. கக்கன் அவர்களிடம் சொல்லி, அதை ரத்துசெய்யக் கேட்டுக்கொண்டேன்.
- அவரோ, “உமக்குக் கிடைத்திருப்பது அருமையான பணி! அங்குதான் ஏழை எளிய மக்களுக்கு உதவமுடியும்” என்று சொல்லி, உத்தரவை ரத்து செய்ய மறுத்துவிட்டார். பரிந்துரைகளை ஏற்காமல் நேர்மையாகவும் மக்களுக்காகவும் வாழ்ந்த மேதைதான் திரு. கக்கன் அவர்கள். அதிகாரிகளிடம் அன்பாகவும் மரியாதையாகவும் பழகும் பண்பாடு நம்மை அடிமையாக்கிவிடும்.
“அன்புஅறிவு தேற்றம் அவாஇன்மை இந்நான்கும்
நன்கு உடையான் கட்டே தெளிவு”
என்னும் வள்ளுவர் குறளுக்கு எடுத்துக்காட்டாக வாழ்ந்தவர் கக்கன் என்கிறார் திரு. அ. பத்மநாபன் ஐ.ஏ.ஏஸ்.
நேர்மைமிக்க மாமனிதர் கக்கன்:
- கக்கன் அவர்கள் அப்போது தமிழக உள்துறை அமைச்சராக இருந்தார். விருதுநகரிலிருந்து காவல்துறை உயர் அதிகாரியிடமிருந்து உள்துறை அமைச்சருக்கு அவசர அழைப்பு தொலைபேசியில் வந்தது. ‘கனம் அமைச்சர் அவர்களுக்கு, வணக்கம். இங்கே பேருந்து நிலையத்தில் எதிர்பாராத விதமாக ஒரு கொலை நிகழ்ந்துவிட்டது. அதன் தொடர்பு உடையவர்கள் எனச் சிலர் பிடிபட்டிருக்கிறார்கள்.
- அவர்களுள் ஒருவர் நம் முதலமைச்சரின் நெருங்கிய உறவினர் எனத் தெரிய வந்திருக்கிறது. சந்தேகத்தின் அடிப்படையில் அவர்மீதும் முறையான விசாரணையைத் தொடர்வதா? அல்லது வழக்கில் இருந்து அவரை விடுவித்துவிடுவதா?’ என்கிற கேள்வியை உயர் காவல் துறை அதிகாரி கேட்கிறார்.
- உள்துறை அமைச்சரான கக்கனுக்கு இக்கட்டான நிலை. “சட்டப்படி வழக்கைத் தொடருங்கள். இன்னார் என்கிற தாட்சணியம் வேண்டாம் என்கிற உத்தரவைப் பிறப்பிப்பதா? அல்லது அதற்கு முன் முதல் மந்திரியிடம் இதுபற்றிக் கலந்துபேச வேண்டுமா? இக்குழப்பத்தில், அமைச்சர் கக்கன் அவர்கள் உடனே முதலமைச்சரைச் சந்திக்கிறார். “இதில் என்னிடம் வந்து முறையிட என்ன அவசியம்? சட்டப்படியான நடவடிக்கையை நீங்களே மேற்கொள்ள வேண்டியதுதானே?’ என முதலமைச்சர் பதில் கூறினால், சரி! அல்லது சற்று யோசித்துவிட்டு. சரி அந்த ஒரு நபரை நீக்கிவிட்டு நடவடிக்கையை மேற்கொள்ளுங்கள்’ என முதலமைச்சர் காமராஜர் கூறிவிட்டால் என்ன செய்வது?
- ‘முதலமைச்சர் காமராஜர் கூறப்போகும் பதிலைப் பொறுத்தே, இந்தப் பொறுப்பில் நாம் தொடர்வதா வேண்டாமா என்பது பற்றி நாம் முடிவுசெய்ய வேண்டியதாக இருக்கும்’. இந்தச் சிந்தனையில் கக்கன் அவர்கள், நடந்த விவரங்களை முதலமைச்சர் காமராஜரிடம் எடுத்துக் கூறுகிறார்.
- எல்லாவற்றையும் கேட்ட காமராஜரோ, “இதில் எனது அபிப்பிராயத்தைக் கேட்க என்ன இருக்கிறது? யாராக இருந்தாலும் சந்தேகத்திற்கு உரிய நபர்களிடம் தாட்சண்யம் காட்டாமல் உரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டியதுதான் தங்கள் கடமை’ என்கிறார்.
- இப்படி எத்தனையோ நிகழ்ச்சிகள்! மனச்சாட்சிக்கு விரோதமாக நடக்க விரும்பாத கக்கன் அவர்கள், காமராஜர் தலைமையில் தொடர்ந்து பொறுப்புகளை வகிக்கக் காரணமாக இருந்தது எந்த முடிவையும் நேர்மையான முறையில் வரவேற்கிற முதலமைச்சர் அவர்களின் சீரிய பண்புதான். கக்கன் அவர்கள் 1952ஆம் ஆண்டில் மதுரை நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு முறையாகத் தேர்தலில் நின்று வெற்றிபெற்றார்.
- பின்னர் 1957ஆம் ஆண்டு நடந்த பொதுத்தேர்தலில் கக்கன் அவர்கள் மேலூர் சட்டமன்றத் தொகுதியில் காங்கிரஸ் சார்பான வேட்பாளராகப் போட்டியிட்டு மகத்தான வெற்றிபெற்றார். அவருக்குக் காமராஜர் தமது அமைச்சரவையில் பொதுப்பணித்துறை அமைச்சராகப் பணியாற்றுகிற வாய்ப்பைத் தந்தார்.
- அடுத்து 1962ஆம் ஆண்டு நடந்த பொதுத்தேர்தலில் காங்கிரஸ் சார்பில் சமயநல்லூர் சட்டமன்றத் தொகுதியில் கக்கன் போட்டியிட்டு வெற்றி பெற்றார். ஏற்கனவே பொதுப்பணித்துறையில் சிறப்பாகப் பணியாற்றிய கக்கனுக்கு இந்தமுறை காமராஜர், வேளாண்மைத்துறை அமைச்சராகப் பணியாற்றுகிற வாய்ப்பைத் தந்தார். 1963ஆம் ஆண்டு கக்கன் உள்துறை அமைச்சராகவும் பொறுப்பு ஏற்றார்!
- இந்தத் துறையிலும் சிறப்பாகப் பணியாற்றி வந்த காலத்தில், எதிர்க்கட்சியினர் அவர்மீது ஊழல் புகார்களைச் சுமத்த முடியாத நிலையில் என்ன கூறுவார்கள் தெரியுமா? “கக்கன் அமைச்சராகச் சுற்றுப்பபணம் மேற்கொள்ளும் போது, 600 ரூபாய் படி கிடைக்கும் விதத்தில் பயணங்களைத் தொடர்வார்” என்பதே அவர்மீது பலமான குற்றச்சாட்டாக எதிர்க்கட்சியினர் சுமத்துவார்கள்.
கக்கன் அவர்கள் அமைச்சராக இருந்து கொண்டு மேடையில் அவர் பேசுகிற பாணியையும் குற்றம் சொல்வார்கள். எப்படி?
- கக்கன் மேடை ஏறிப் பேசும்போது, மேடையில் அமர்ந்திருக்கும் முக்கியமானவர்களை மட்டுமல்லாது, “கூட்டத்தில் அமைதி காக்க வந்திருக்கும் காவல் துறை அதிகாரி அவர்களே…மின்சாரம் தவறாகப் பயன்படுத்தாமல் இருப்பதைக் கண்காணிக்கும் மின்துறை அதிகாரி அவர்களே…’ என வந்திருக்கும் அதிகாரிகளுக்கும் நன்றிகூறிப் பேசுவார் எனக் குறை கூறுவார்கள்.
- காங்கிரஸ் இரண்டாகப் பிரிந்த காலத்தில், காமராஜர் தலைமையில் உள்ள காங்கிரஸ் கட்சி “ஸ்தாபன காங்கிரஸ்’ எனவும், இந்திரா காந்தி தலைமையில் உள்ள காங்கிரஸ் “இந்திரா காங்கிரஸ்’ எனவும் அழைக்கப்பட்டு வந்தன.
- அந்தக் காலகட்டத்தில், ராஜ்ய சபா எனக் கூறப்படும் நாடாளுமன்ற மேலவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட சி. சுப்பிரமணியம் தேர்தலில் நின்றார். அவரை எதிர்த்து ஸ்தாபன காங்கிரஸ் போட்டியிட்டதால் போட்டி கடுமையானது, ஸ்தாபன காங்கிரஸ் வேட்பாளர் தோல்வி அடையக்கூடாது எனக் காமராஜர் உறுதிபட வேலை செய்தார். அந்த நேரத்தில், சி. சுப்பிரமணியம் வெற்றிபெற பணம், பதவி போன்ற ஆசைகள் பெரிய அளவில் பேரமாகப் ஆட்பட்டுவிடக்கூடாது எனக் காமராஜர் பேசிவந்தார். தேர்தல் முடிவில் சி.சுப்பிரமணியம் தோற்றார்.
- இந்த வெற்றியைத் தேடித்தந்த ஸ்தபான காங்கிரஸார் மன உறுதியைக் காமராஜர் வெகுவாகப் பாராட்டினார். தொடர்ந்து அமைச்சர் பதவியில் அமர்ந்து வந்த கக்கன் பதவியை இழந்த காலத்தில் மிகச் சாதாரண மனிதர்களுக்குரிய வசதிகூட இல்லாமல் வாழ்ந்து வந்தார். அந்த நேர்மை எதிர்க்கட்சியினரையும் வியக்க வைத்தது. எந்த நிலையிலும் தமது சுயமரியாதையை விட்டுத்தராமல் நேர்மையை இலட்சியமாகக் கொண்டு வாழ்ந்தவர் கக்கன் அவர்கள்.
இறுதிவரை வாடகை வீடு!
- ஐந்து ஆண்டுகள் நாடாளுமன்ற உறுப்பினராகவும், பத்து ஆண்டுகள் சென்னை மாகாணத்தின் அமைச்சராகவும் பொறுப்புகளை வகித்த ஒருவர், பதவி போனபின் குடி இருக்க வீடு இல்லாமல், வாடகை வீடு தேடி அலைவது என்பது எவருக்கும் துன்பம் தரக்கூடிய நிலைதான். இந்த நிலைக்கு ஆளானார் கக்கன். பதவி போனதால் அரசு அளித்த வீட்டைக் காலி செய்தாக வேண்டிய கட்டாயம். அப்படிக் காலி செய்தபின் எங்கே சென்று தங்குவது? என்பது அவர்முன் நின்ற கேள்வி. ஏழு உறுப்பினர் கொண்ட ஒரு குடும்பத்திற்குச் சென்னை போன்ற நகரத்தில் உடனே வாடகை வீடு கிடைக்குமா என்பது ஐயம்தான்.
- அமைச்சராக இருந்த ஒருவர் வாடகைக்கு வீடு தேடுகிறார் என்றால் யார் நம்புவார்கள். கக்கன் பதவியில் இருந்தபோது அவரால் சுகம் அனுபவித்தவர்கள் எவரும் திரும்பிக் கூடப் பார்க்கவில்லை. அவரைப் போலவே எனிமையான வாழ்வு வாழ்ந்த தொண்டர்கள் ஒரு சிலரே வந்து சென்றனர். அவர்களால் எதுவும் செய்ய முடியவில்லை. செய்ய விரும்பினாலும் அவர் ஏற்றுக் கொள்வாரா என்பது வினாவாகவே இருந்தது.
- இச்சூழலில் கக்கனின் மூத்த மகன் பத்மநாதன், தம் தந்தைக்கு உதவ முன்வந்து, ஓர் அதிகாரியை அணுகினார். அந்த அதிகாரி எதிரணிக் குழுவில் பணியாற்றுகிற அரசு ஊழியராக இருந்தார்.
- கக்கனின் உண்மையான உள்ளத்தை உணர்ந்த அந்த அதிகாரி, காங்கிரஸ் கட்சியைச் சார்ந்த தலைவரான கக்கனுக்கு உதவிட மனமுவந்து முன்வந்தார். அந்த அதிகாரி கக்கனின் குடும்பத்தை நன்றாக அறிந்தவர். கக்கனின் பொருளாதார நிலையை, உன்னத வாழ்வைத் தெளிவாக உணர்ந்தவர். ஆகவே, அவருக்கு உதவுவதற்குக் கிடைத்த நல்ல வாய்ப்பாக எண்ணிக்கொண்டு,பத்மநாதனுக்கு நன்றி கூறியவாறு முயற்சி மேற்கொண்டார்.
- சென்னை, இராயப்பேட்டை கிருஷ்ணாபுரம், வீட்டு எண். பி என்னும் நீதிமன்ற வழக்கிற்கு உட்பட்ட வீட்டை ரூ.192/- வாடகை முடிவு செய்து ஒதுக்கீடாகப் பெற்றுத்தந்தார். ஒரு வகையில் பொறுப்புள்ள மகனால் தங்குவதற்குச் சற்று வசதியான வீட்டைக் கக்கன் பெற்றதில் மகிழ்ந்தார். பதவி சுகத்தை அனுபவித்தவர்கள் விலகி ஓடிய காலத்தில் இப்படி ஒருவர் வந்து உதவியதைக் கக்கனின் மக்கள் எக்காலத்திலும் மறுக்கவில்லை. இதற்குப் பின்னர் வீட்டு வசதி வாரியச் செயலாளராக இருந்தவரும் கக்கனின் சம்பந்தியுமான வி.எஸ்.சுப்பையா, ஐ.ஏ.எஸ். தியாகராய நகர் பகுதியில் உள்ள சி.ஐ.டி. நகர் முதல் பிரதான சாலையில் அமைந்திருந்த 11 ஆம் எண் வீட்டை “வாடகைக்கு ஒதுக்கீடு’ செய்து உதவினார். கக்கன் தமது இறுதிக் காலம்வரை அந்த வீட்டில்தான் குடியிருந்தார்.