4 பேர் உங்களிடம் தகராறு செய்தால் இந்தியில் கெட்டவார்த்தையில் கத்தி பேசி, தப்ப முடியும்! பாஜக அலிஷா அப்துல்லா சர்ச்சை பேச்சு!
Editor Zhagaram
பெண்கள் வட இந்தியாவுக்கு செல்லும்போது இந்தி தெரிந்து இருந்தால் இந்தியில் கெட்ட வார்த்தை பேசி தங்களை தற்காத்துக்கொள்ள முடியும் என பாஜக மாநில விளையாட்டுப்பிரிவு செயலாளர் அலிஷா அப்துல்லா தெரிவித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.
பாஜகவை தமிழ்நாட்டில் வளர்க்க பல்வேறு உத்திகளை கையில் எடுத்து வருகின்றனர். அதன் படி பல்வேறு துறைகளில் பிரபலமானவர்கள் கட்சியில் இணைக்கப்பட்டு வருகின்றனர்.குறிப்பாக சினிமா, சின்னத்திரை நடிகர்கள், விளையாட்டுத் துறையினர், சமூக வலைதளங்கள் பிரபலமாக இருப்பவர்கள் என பலரை பாஜக தங்கள் கட்சியில் இணைத்து வருகிறது.
சினிமா துறையை சேர்ந்த நடிகர் ராதாரவி, நடிகை கவுதமி, நடிகையும் நடன இயக்குனருமான காயத்ரி ரகுராம், நடிகர் எஸ்.வி.சேகர், தயாரிப்பாளர் ஆர்.கே.சுரேஷ், நடிகர் பொன்னம்பலம், நடிகைகள் மதுவந்தி, நமிதா என பலர் பாரதிய ஜனதா கட்சியில் இருக்கின்றனர்.
இந்த நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் பிரபல கார் மற்றும் பைக் பந்தைய வீராங்கனையான அலிஷா அப்துல்லா பாஜகவில் இணைந்தார். ‘தமிழ்நாடு பாஜக குடும்பத்தில் இணைவதில் மகிழ்ச்சியடைகிறேன். எனக்கு அண்ணாமலையும் அமர்பிரசாத் ரெட்டியும் அளித்த மரியாதை மற்றும் அங்கீகாரம் காரணமாகவே நான் பாஜகவில் இணைந்து இருக்கிறேன்.
பெண்களின் முன்னேற்றத்துக்காக என்னால் இயன்றதை செய்வேன்.’ என்று அவர் உறுதியளித்துள்ளார். இதனை தொடர்ந்து அலிசா அப்துல்லாவுக்கு பாஜக மாநில விளையாட்டுப்பிரிவு செயலாளர் பதவி கிடைத்தது. இதனை தொடர்ந்து பாஜகவுக்கு பல்வேறு நேர்காணல்களில் அவர் பேசி வருகிறார்.
அந்த வகையில் கடந்த மாதம் அவர் அளித்த பேட்டி தற்போது அதிக விமர்சனத்துக்கு உள்ளாகி வருகிறது. இந்தி மொழி தொடர்பாக தனியார் யூடியூப் சேனலுக்கு அவர் அளித்த பேட்டியில், “இந்தி 3 வது மொழியாக இருக்க வேண்டும். ஏனென்றால் பாதுகாப்பு முக்கியம். நான் பெண்களுக்காக பேசுகிறேன். தமிழ்நாட்டில் பாதுகாப்பு உள்ளது. ஆனால், வட மாநிலங்களில் பாதுகாப்பு இருக்கிறதா இல்லையா என்பது தெரியாது.
இதுவே இந்தி தெரிந்திருந்தால் தைரியமாக இந்தி பேசிவிட்டு தப்பிக்க முடியும். ஆனால், தமிழை வைத்துக்கொண்டு அங்கு எதுவும் செய்ய முடியாது. இந்திகாரர்கள் தமிழ்நாடு வந்தார்கள் என்றால், அவர்களால் இந்தியை தாக்குப்பிடிக்க முடியாது. நமக்கு தேசிய மொழி வேண்டும். அதே நேரம் தமிழில் அதிக கவனம் செலுத்தக்கூடாது.
இந்தி படிக்க வேண்டுமா? வேண்டாமா? என்பது அவர்கள் விருப்பம். நீங்கள் இரவு 9 மணிக்கு ஐதராபாத்திலோ, டெல்லியிலோ நடந்து செல்கிறீர்கள். அப்போது 4 பேர் உங்களிடம் தகராறு செய்தால் அவர்களிடம் நீங்கள் இந்தியில் கெட்ட வார்த்தையில் பேசினாலோ, இந்தியில் கத்தினாலோ தப்பி முடியும்.” என்றார். இதனை பகிர்ந்து பலர் அலிசாவை விமர்சித்து வருகின்றனர்.