Site icon ழகரம்

முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு ஜாமீன் வழங்கியது உச்சநீதிமன்றம்…..!

ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கித் தருவதாகக் ரூ.3 கோடி வரை மோசடி செய்ததாக கொடுக்கப்பட்ட புகாரின் பேரில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மற்றும் அவரது உதவியாளர்கள் 4 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்படிருந்தது.

இதில் முன்ஜாமீன் வழங்கக் கோரி ராஜேந்திர பாலாஜி தாக்கல் செய்த மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதனைத் தொடர்ந்து அவர் உச்ச நீதிமன்றத்தில் கடந்த மாதம் 18ஆம் தேதி மேல்முறையீட்டு மனுத்தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது. பின்னர் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், ராஜேந்திர பாலாஜிக்கு 4 வார கால இடைக்கால ஜாமீன் வழங்கி உத்தரவிட்டனர்.

இந்தக் காலகட்டத்தில் அவர் விசாரணை அமைப்புகளின் விசாரணைகளுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் எனவும், அவருடைய பாஸ்போர்ட்டை சம்பந்தப்பட்ட குற்றவியல் நடுவர் மன்ற நீதிபதியிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் அவர் வசிக்கக்கூடிய விருதுநகர் தவிர்த்த வேறு பகுதிகளுக்குச் செல்லக்கூடாது என்று நிபந்தனைகள் விதித்தும் உத்தரவிட்டனர்.

 

Exit mobile version