இலங்கையில் 4 தமிழர்கள் உயிருக்கு ஆபத்து! தமிழ்நாட்டில் வாழ அனுமதிக்க வேண்டும்! தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ. மணியரசன் கோரிக்கை!
Editor Zhagaram
இலங்கையில் 4 தமிழர்கள் உயிருக்கு ஆபத்து! தமிழ்நாட்டில் வாழ அனுமதிக்க வேண்டும்! தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ. மணியரசன் கோரிக்கை!
முப்பத்திரெண்டு ஆண்டு சிறை வாழ்க்கைக்குப் பிறகு உச்ச நீதிமன்றம் விடுதலை செய்த முருகன், சாந்தன், இராபர்ட் பயஸ், செயக்குமார் ஆகிய நால்வரையும் தமிழ்நாடு அரசு திருச்சி நடுவண் சிறையிலுள்ள சிறப்புக் காவல் முகாமில் அடைத்துள்ளது. இந்நிலையில், இன்று (14.11.2022) ஊடகவியலாளர்களிடம் பேசிய திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார், இந்நால்வருடைய சொந்த நாடான இலங்கையிடம் ஒப்புதல் பெற்ற பிறகு, இந்நால்வரும் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்படுவர் எனத் தெரிவித்துள்ளது கடும் அதிர்ச்சியளிக்கிறது.
இலங்கையில் பெரும்பான்மை சிங்கள பௌத்த இனவாதிகள் ஆட்சியிலும், வெளியிலும் இருக்கிறார்கள். அவர்கள் இலட்சக்கணக்கான ஈழத்தமிழர்களை இனப்படுகொலை செய்து உள்ளார்கள். மேலும், தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பில் இருந்தவர்களை, அந்த அமைப்பு இன்று இல்லாத நிலையிலும் சிறையில் அடைத்து வைத்துள்ளார்கள்; அல்லது காணாமல் போனவர்கள் என்று காரணம் சொல்லி, சிங்கள ஆட்சியாளர்கள் பல்லாயிரக்கணக்கானோரைத் தீர்த்துக் கட்டியிருக்கிறார்கள்.
இந்திய உச்ச நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்ட இந்த நால்வரும் விடுதலைப்புலிகள் அமைப்பில் இருந்தவர்கள் என்பது இந்திய அரசின் குற்றச்சாட்டு. இப்பொழுது, 2009க்குப் பிறகு விடுதலைப்புலிகள் அமைப்பு இல்லை. அதன் செயல்பாடுகளும் இல்லை. ஆனாலும், அந்தப் பெயரை வைத்துக் கொண்டு, தமிழர்களை இலங்கை சிங்கள அரசு இன்றும் பழிவாங்கி வருகிறது.
தமிழ்நாடு அரசும் இந்திய அரசும் இந்நால்வரையும் இலங்கைக்கு அனுப்பினால், நேரடியாக அவர்களை சிறையில் தான் அடைப்பார்கள். அவர்களுடைய உயிருக்கும் ஆபத்து நேரலாம். இந்திய உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு நடைமுறையில் செயல்படுத்தப்படாத ஒன்றாகிவிடும்.
பல்லாயிரக்கணக்கான ஈழத்தமிழர்கள் அகதிகளாக இங்கே தமிழ்நாட்டில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இப்பொழுது வருபவர்களும் அகதி முகாம்களில் பாதுகாப்பாக வைக்கப் படுகிறார்கள். அவர்களது வாழ்க்கைக்கு வசதி ஏற்படுத்தித் தருகிறது தமிழ்நாடு அரசு. இந் நால்வரையும் அதுபோல், இலங்கையிலிருந்து வந்த ஏதிலியராக ஏற்று, மற்ற ஈழத்தமிழர்கள் பெற்றுள்ள வாழ்வுரிமையை இவர்களுக்கும் தமிழ்நாட்டில் வழங்க வேண்டும். இவர்களை இலங்கைக்கு அனுப்பக் கூடாது.
இதற்குரிய நடவடிக்கைகளை தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் எடுத்து, மேற்படி நான்கு தமிழர்களையும் பாதுகாக்குமாறு தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் கனிவுடன் கேட்டுக் கொள்கிறேன். ஒருவேளை இவர்களுடைய உறவினர்கள் மூலம் வெளிநாடுகளுக்குச் செல்ல விரும்பினால், தமிழ்நாடு அரசு அதற்கும் உரிய ஏற்பாடுகளை செய்துத் தர வேண்டும் என முதல்வருக்கு தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ. மணியரசன் கோரிக்கை!