புதிய தமிழகம் கட்சியின் 25ஆம் ஆண்டு நிறைவு – வெள்ளி விழா சிறப்பு மாநாடு விருதுநகர், ஸ்ரீவில்லிபுத்தூரில் நடைபெற்றது.
Editor Zhagaram
புதிய தமிழகம் கட்சியின் 25 ஆம் ஆண்டு நிறைவு – வெள்ளி விழா சிறப்பு மாநாடு விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் டிசம்பர் 15, 2022 நேற்று நடைபெற்றது.
வெள்ளிவிழா மாநாட்டிற்குஅழைப்பு விடுத்த, புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமியின் அறிக்கையில்,புதிய தமிழகம் கட்சி துவங்கப் பெற்று 25ஆம் ஆண்டு நிறைவு வெள்ளி விழா. 1997 ஆம் ஆண்டு டிசம்பர் 15 இல் துவங்கப்பட்ட நமது கட்சி 25 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. வெறும் நாட்களையும், வாரங்களையும், ஆண்டுகளையும் மட்டும் நாம் கடந்து வரவில்லை. ஒவ்வொரு நாளும் கண்ணீர் கடலையும், செந்நீர் கடலையும் கடந்தே பயணித்து வந்துள்ளோம்.
புதிய தமிழகம் கட்சியின் ஓராண்டு கால சாதனைகளை வேறு எந்த இயக்கமும் ஓர் நூற்றாண்டில் கூட செய்திருக்க இயலாது. சமூக தளத்தில் வேறு எவரும் எண்ணிப் பார்க்க இயலாத செயல்களை, அரிய சாதனைகளை நிகழ்த்தி இருக்கிறோம். 1947 இல் பெற்ற சுதந்திர காற்றை, புதிய தமிழகம் கட்சியின் உதயத்திற்கு பிறகே, லட்சோப லட்சம் பேர் சுவாசிக்க முடிந்தது.
ஒன்றல்ல, இரண்டல்ல ஆயிரமாயிரம் சாதனைகளுக்கும், அதற்குடைய வரலாறுகளுக்கும் சொந்தக்காரர்கள் நாம். கடந்த 25 வருடத்தில் நாம் கடந்து வந்த பாதைகள் வெறும் கல்லும், முள்ளும் மட்டுமல்ல.! ரத்தம் சிந்தியும், சொல்லொனா சித்திரவதைகளையும், ஆயிரமாயிரம் இன்னல்களையும் கடந்து வந்துள்ளோம்.! அதில் சிறைப்பட்டோர், சித்திரவதைப்பட்டோர், உயிரிழந்தோர், ஒன்றா.! இரண்டா.! அத்தனை அடக்குமுறைகளையும் தாண்டி தான், 25 ஆண்டுகளாக தமிழக சமூக அரங்கிலும், அரசியல் அரங்கிலும் பீடு நடை போடுகிறோம்.
அரசியல் – சமூக தளத்தில் அடுத்த கட்ட பாய்ச்சலுக்கு நம்மை ஆயத்தமாக்கிக் கொள்ளும் தளமே – மேடையே டிசம்பர்-15 ஆம் தேதி விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் நடைபெறவுள்ள ”வெள்ளிவிழா நிறைவு சிறப்பு மாநாடு” டெல்லி செங்கோட்டையை.! சென்னை கோட்டையை.! நோக்கிய, நமது பயணத்திற்கான இம்மாநாட்டை வெற்றிகரமாக்க அனைவரும் நம்பிக்கையோடும், உற்சாகத்தோடும், உறுதியோடும் பணியாற்ற அன்புடன் வேண்டுகிறேன் என புதிய தமிழகம் கட்சி நிறுவனர் & தலைவர், டாக்டர் க.கிருஷ்ணசாமி MD, Ex.MLA தெரிவித்திருந்தார்.
நேற்று நடைபெற்ற மாநாட்டில் டாக்டர் கிருஷ்ணசாமியின் தொடக்க கால போராட்டங்கள் முதல் தற்போதைய அரசியல் போராட்டங்கள் வரை மக்களுக்கு விளக்கும் அரசியல் வரலாற்று விளக்கப்படம் வெளியிடப்பட்டது.
பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்களும், இயக்கங்கள் அமைப்புகளின் ஒருங்கிணைப்பாளர்கள் பங்கேற்றனர். பல ஆயிரம் மக்கள் திரண்ட 25 ஆண்டு வெள்ளி விழா மாநாடு புதிய தமிழகம் கட்சியின் நிறுவனத் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி உரையுடன் நிறைவடைந்தது.