Site icon ழகரம்

ஜன.17ஆம் தேதி அரசு விடுமுறை என தமிழக அரசு அறிவிப்பு….!

பொங்கல் விடுமுறைகளுக்கு மறுநாளான ஜனவரி 17ஆம் தேதியும் அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டு அதற்கான அரசாணையைத் தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து இன்று பொது (பல்வகை) துறை வெளியிட்டுள்ள அரசாணையில் கூறியுள்ளதாவது:

”14.1.2022 வெள்ளிக்கிழமை பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பணியாளர்கள் தங்கள் சொந்த ஊருக்குச் சென்று பண்டிகையை மகிழ்வுடன் கொண்டாட ஏதுவாகவும், 16.1.2022 (ஞாயிற்றுக்கிழமை) அன்று முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் நிலையிலும், 18.1.2022 தைப்பூசத் திருநாள் அன்று அரசு விடுமுறையானதாலும், இடைப்பட்ட 17.1.2022 திங்கட்கிழமை அன்று தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் உள்ளூர் விடுமுறை அறிவிக்குமாறு பணியாளர்கள் சங்கங்களிடமிருந்து அரசுக்குக் கோரிக்கைகள் வரப்பெற்றன.

அக்கோரிக்கைகளை, அரசு கவனமுடன் பரிசீலித்து, பொங்கல் மற்றும் தைப்பூசத் திருநாளுக்கு இடைப்பட்ட நாளான 16.1.2022 ஞாயிற்றுக்கிழமை அன்று முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் நிலையிலும், 18.1.2022 தைப்பூசத் திருநாள் அன்று அரசு விடுமுறையானதாலும், இடைப்பட்ட நாளான 17.1.2022 திங்கட்கிழமை அன்று தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் அனைத்துக் கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை அளித்தும் அவ்விடுமுறையை ஈடுசெய்யும் வகையில், அதற்கான பணி நாளாக 29.1.2022 (சனிக்கிழமை) அன்று பணி நாளாக அறிவித்தும் ஆணை வெளியிடப்படுகிறது”.

இவ்வாறு தமிழக அரசு தெரிவித்துள்ளது.

 

Exit mobile version