Site icon ழகரம்

கோவை வழக்கை NIA’யிடம் ஒப்படைப்பதா….?? சீமான் கண்டனம்!!

ஆதித்தமிழ்க்குடிகளை வஞ்சிப்பதுதான் திராவிட மாடல் ஆட்சியா? சமூக நீதியா? சீமான் கண்டனம்.

கோவை வழக்கை NIA’யிடம் ஒப்படைப்பதா….??

கோவை: உக்கடம் அருகே வாகனத்தில் எரிகாற்று உருளை வெடித்து சிதறியதில் ஒருவர் பலியானது தொடர்பான வழக்கு விசாரணையை தேசிய புலனாய்வு முகமையிடம் ஒப்படைத்த  தமிழக அரசின் நடவடிக்கை மிகத் தவறான நிர்வாக முடிவாகும். தேசிய புலனாய்வு முகமையானது பாஜகவின் கிளைப்பிரிவு போல செயல்பட்டு இஸ்லாமிய மக்களைக் குறிவைத்து வேட்டையாடுவதாக நாடெங்கிலும் குற்றச்சாட்டுகள் வைக்கப்படும் நிலையில், மாநில தன்னாட்சி முழங்குகின்ற திமுக அரசு  இவ்வழக்கை NIA’யிடம்  ஒப்படைப்பது ஏற்கத்தக்கதல்ல!

வன்முறைச் செயலில் ஈடுபட்டு சமூக அமைதியை குலைக்க முனைவோர் எவராயினும் அவர்களை சாதி, மதங்களுக்கு அப்பாற்பட்டு கடும் சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்த வேண்டும் என்பதில் எந்தவித மாற்றுக்கருத்துக்கும் இடமில்லை, அதேசமயம் இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ளவர்கள் இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதாலேயே அச்சமூகத்தினரை குற்றவாளிகளாக சித்தரிக்கும் போக்கென்பது மிக ஆபத்தானது. விபத்து குறித்த காவல்துறையின் விசாரணை நிறைவடைவதற்கு முன்பாகவே இக்கோர நிகழ்வுக்கு மதசாயம் பூசுவது அப்பட்டமான மத காழ்ப்புணர்ச்சியின் வெளிப்பாடே ஆகும்.

இவ்விபத்து நடந்தவுடன் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்து உரிய ஒத்துழைப்பு வழங்கிவரும் இஸ்லாமிய மக்களைக் குற்றப்படுத்தும் நோக்கோடு மதவாதிகளால் செய்யப்படும் கருத்துருவாக்கங்களும், கட்டமைப்புகளும் கடும் கண்டனத்துக்குரியது.  

 துப்பறிந்து விசாரணை செய்வதில் பெயர்பெற்ற தமிழகக் காவல்துறையிடம் உள்ள வழக்கை தேசிய புலனாய்வு முகமையிடம் ஒப்படைத்ததன் மூலம் தனது இயலாமையை ஏற்றுக்கொள்கிறாரா அல்லது காவல்துறையின் மீது நம்பிக்கை இழந்து விட்டாரா முதல்வர்? எதற்காக இந்த முடிவு?

முன்னர் சமூக செயற்பாட்டாளர்கள் கைது செய்யப்பட்டதை போலவே, தேசிய புலனாய்வுமுகமை இவ்வழக்கில் அப்பாவி இஸ்லாமியர்களும் கைது செய்யப்பட்டால் அதற்கு யார் பொறுப்பேற்பது? தனது பொறுப்பைத் தட்டிக்கழிக்க தேசிய புலனாய்வு முகமைக்கு வாசல் திறந்து விடுவதுதான் மாநில தன்னாட்சியைக் கட்டிக்காக்கிற லட்சணமா முதல்வரே! வெட்கக்கேடு!

ஆகவே இவ்விவகாரத்தில் முறையான விசாரணை நடத்தி அக்கோர நிகழ்வின் பின்புலத்தில் உள்ள உண்மையை வெளிக்கொணர்ந்து குற்றமிழைத்தவர்கள் எவராயினும் அவர்களை கடும் சட்ட நடவடிக்கைகளுக்கு உட்படுத்த வேண்டும் என கூறுகிற அதேவேளையில் தேசிய புலனாய்வு முகமையிடம் வழக்கை தாரைவார்த்திருப்பதற்கு எனது எதிர்ப்பினை பதிவு செய்கிறேன்.

இக்கொடுமை நிகழ்வை அடிப்படையாக வைத்து மத பூசலுக்கு வித்திட்டு, அரசியல் ஆதாயம் தேடமுயலும் மதவாத சக்திகளின் சூழ்ச்சியை முறியடிக்க சனநாயக சக்திகள் அணி திரள வேண்டும் என வலியுறுத்துகிறேன் இவ்வாறு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் அறிக்கை வெளியிட்டு தனது கண்டனத்தைத் தெரிவித்துள்ளார்.

0

User Rating: Be the first one !
Exit mobile version