ல்ட் நியூஸ் துணை நிறுவனரான முகமது ஜுபைரை, இடைக்கால ஜாமீனில் உடனடியாக விடுவிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மத உணர்வுகளை புண்படுத்தியதாகவும், இந்துக் கடவுள்களை அவமதித்ததாகவும் உத்தரப் பிரதேசத்தின் மாவட்டங்களில் 6 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு முகமது ஜூபைர் சிறையில் அடைக்கப்பட்டார்,
இந்த நிலையில் தனக்கு ஜாமீன் வழங்க கூறி உச்ச நீதிமன்றத்தில் ஜூபைர் மனு தாக்கல் செய்திருந்தார். அவரின் மனு மீதான விசாரணை இன்று உச்ச நீதிமன்ற நீதிபதி சந்திர சூட், சூரிய காந்த், போபண்ணா ஆகியோர் தலைமையின் கீழ் வந்தது.
மனுவை விசாரித்த நீதிபதிகள், “ஜுபைரை தொடர்ந்து காவலில் வைத்திருப்பதில் எந்த நியாயமும் இல்லை. எனவே, ஜுபைரை இடைக்கால ஜாமீனில் உடனடியாக விடுவிக்க உத்தரவிடுகிறோம்” என்று தெரிவித்தனர்.
மேலும் ஜுபைர் ட்வீட் செய்யக் கூடாது என்று தடை கேட்ட உத்தரப் பிரதேச அரசின் கோரிக்கையை நீதிபதிகள் நிராகரித்தனர்.
இதனைத் தொடர்ந்து இன்று மாலை 6 மணிக்கு ஜுபைர் விடுவிக்கப்படுகிறார்.
வழக்கு பின்னணி: முஸ்லிம்களின் இறைத்தூதர் முகம்மது நபியை பாஜக செய்தித் தொடர்பாளராக இருந்த நுபுர் சர்மா விமர்சித்திருந்தார். இதையடுத்து, நாடு முழுவதிலும் சமூக வலைதளங்களை டெல்லி போலீஸார் தீவிரமாகக் கண்காணித்தனர்.
இதில், பெங்களூரூவில் இருந்து செயல்படும் ஆல்ட் நியூஸ் செய்தி இணையதளத்தின் இணை நிறுவனர் முகம்மது ஜுபைர், ட்விட்டரில் செய்த பதிவும் சிக்கியதாக போலீஸ் தரப்பு கூறுகிறது. இதுகுறித்து ஜுபைரை டெல்லி போலீஸார் விசாரித்தனர். இதில் ஜுபைர் கூறிய பதில் திருப்தி அளிக்கவில்லை எனக் கூறி அவரை அவர்கள் கைது செய்தனர். விசாரணை என்ற பெயரில் அழைத்துவிட்டு ஜுபைரை கைது செய்ததற்கு நாடு முழுவதும் கடும் கண்டனங்கள் எழுந்தன.
தொடர்ந்து ஜுபைருக்கு ஜாமீன் மறுக்கப்பட்டு வந்த நிலையில், அவருக்கு உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உள்ளது.