Site icon ழகரம்

வீட்டிலிருந்து வேலை: புதிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது வர்த்தக அமைச்சகம்

வீட்டிலிருந்து வேலை செய்வோருக்கான புதிய வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய வர்த்தக அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

அதன்படி சிறப்பு பொருளாதார மண்டலங்களில் உள்ள நிறுவனங்கள் தங்களின் ஊழியர்களை அதிகபட்சமாக ஓராண்டு காலம் வீட்டிலிருந்து பணி செய்ய அனுமதிக்கலாம். அதுபோல் 50% ஊழியர்களுக்கு இந்த வசதியை அனுமதிக்கலாம் என்று வர்த்தக அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதற்காக சிறப்பு பொருளாதார மண்டல சட்டத்திட்டங்கள் 2006ல் புதிதாக விதி எண் 43A சேர்க்கப்பட்டுள்ளது. இந்தச் சட்டத்தின்படி புதிய விதிகள் அமலுக்கு வருகின்றன. இதன் மூலம் நாடு முழுவதும் ஒரே மாதிரியான வீட்டிலிருந்து வேலை செய்யும் விதிகள் அமலாகும் எனக் கூறப்படுகிறது.

வீட்டிலிருந்து வேலை என்பது 50 சதவீதம் ஊழியர்களுக்கும் நீட்டிக்கப்படலாம். ஒப்பந்த தொழிலாளர்களுக்கும் இது நீட்டிக்கப்படும். மேலும் அதிகபட்சமாக ஓராண்டுக்கு வீட்டிலிருந்து வேலை காலத்தை நீட்டிக்கலாம். அதுவே மேலும் நீட்டிக்கப்பட வேண்டும் என்றால் ஆணையர் அனுமதியுடன் மேலும் ஓராண்டுக்கு நீட்டிக்கலாம். அல்லது 90 நாட்களுக்கு நீட்டிக்கப்படலாம்.

அதேபோல் வீட்டிலிருந்து பணி புரிவோருக்கு தேவையான இணைய வசதி, உபகரணஙகள் என அனைத்தையும் அந்தந்த நிறுவனங்கள் தான் செய்து தர வேண்டும். மேலும் அலுவலகம் சார்ந்த உபகரணம் ஏதாவது வீட்டிறகு எடுத்துச் செல்ல வேண்டும் என்றால் நிர்வாகத்தின் அனுமதி தேவை.

ஒருவேளை 50%க்கும் மேற்பட்ட ஊழியர்களை வீட்டிலிருந்து பணி புரிய அனுமதிக்க நிறுவனம் விரும்பினால் அதற்கான காரணங்களை எழுத்துப்பூர்வமாக பட்டியலிட வேண்டும்.

இவ்வாறு புதிய வழிகாட்டுதலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version