தேர்தல் நேரத்து இலவச அறிவிப்புகள் ஆபத்தானவை என எச்சரித்துப் பேசிய பிரதமர் மோடிக்கு ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளரும் டெல்லி முதல்வருமான அரவிந்த் கேஜ்ரிவால் பதிலடி கொடுத்துள்ளார்.
உத்தரப்பிரதேச மாநிலத்தில் புதிதாக நான்கு வழி விரைவுச்சாலை அமைக்கப்பட்டுள்ளது. உத்தரபிரதேச விரைவுச்சாலை தொழில் வளர்ச்சி ஆணையம் சார்பில் இந்த விரைவுச்சாலை அமைக்கப்பட்டுள்ளது. கடந்த 2020-ம் ஆண்டு, பிப்ரவரி மாதம் இந்த சாலைக்கு பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார். அதன்பின் பணிகள் தொடங்கப்பட்டு 28 மாதங்கள் சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வந்தது. சுமார் 14 ஆயிரத்து 850 கோடி செலவில் 296 கிமீ நீளத்தில் இந்த நான்கு வழிச்சாலை அமைக்கப்பட்டுள்ளது. இந்தச் சாலையை இன்று பிரதமர் மோடி திறந்து வைத்தார்.
அப்போது பேசிய பிரதமர், நம் நாட்டில் இப்போது ஒரு புதிய கலாச்சாரம் தலையெடுத்துள்ளது. தேர்தல் நேரத்தில் இலவச அறிவிப்புகளை அள்ளிவீசும் கலாச்சாரம் அது. அந்தக் கலாச்சாரம் நாட்டின் வளர்ச்சிக்கு மிகவும் ஆபத்தானது. இளைஞர்கள் இத்தகைய அறிவிப்புகள் குறித்து எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று பேசியிருந்தார்.
கேஜ்ரிவால் பதிலடி: இதற்கு ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளரும் டெல்லி முதல்வருமான அரவிந்த் கேஜ்ரிவால் தனது எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளார். இது குறித்து அவர், நான் இலவசங்களை அள்ளி வீசுவதாக குற்றச்சாட்டுகள் வருகின்றன. நான் நாட்டு மக்களிடம் ஒரு கேள்வியை முன்வைக்க விரும்புகிறேன். டெல்லிவாழ் ஏழைக் குழந்தைகளுக்கு இலவச கல்வியை நான் உறுதி செய்துள்ளேன். நாங்கள் ஆட்சிக்கு வரும்முன் டெல்லி அரசுப் பள்ளிகளின் நிலைமை மோசமாக இருந்தது. 18 லட்சம் குழந்தைகளின் எதிர்காலம் மோசமான கட்டமைப்பால் கேள்விக்குறியாக இருந்தது. குழந்தைகளுக்கு இலவசக் கல்வி கொடுப்பது ஒன்றும் கிரிமினல் குற்றமில்லையே?
நாங்கள் டெல்லி அரசு மருத்துவமனைகளை அருமையான மொஹல்லா கிளினிக்குளாக மாற்றியுள்ளோம். உலகிலேயே டெல்லி நகரில் மட்டும் தான் அதிலுள்ள 2 கோடி மக்களும் இலவசமாக மருத்துவம் பெறும் வசதி உள்ளது. இங்கே ரூ.50 லட்சம் செலவாகும் அறுவை சிகிச்சைகள் கூட இலவசமாக மேற்கொள்ளப்படுகின்றன.
நான் டெல்லியில் 200 யூனிட் இலவச மின்சாரமும், பஞ்சாபில் 300 யூனிட் இலவச மின்சாரமும் வழங்குவதை விமர்சிப்பவர்களுக்கு என்னிடம் ஒரு கேள்வி உள்ளது. நீங்கள் உங்களின் அமைச்சர்களுக்கு 4000 முதல் 5000 யூனிட் வரை இலவச மின்சாரம் வழங்குவது ஏன்?
என் மீது குறை கூறுபவர்கள் தான் கோடிக் கணக்கில் செலவழித்து தனியாக ஜெட் விமானம் வாங்கியுள்ளனர். நான் ஜெட் விமானம் வாங்குவதில்லை. மாறாக பெண்களுக்கு இலவச போக்குவரத்தை உறுதி செய்துள்ளேன்.
நான் கல்வி கற்றுள்ளேன். பட்டங்கள் பெற்றுள்ளேன். பொறியியல், கணக்குப் பதிவியல், சட்டம் பயின்றுள்ளேன். எனது சான்றிதழ்கள் போலியானவை அல்ல. இலவசமாக கல்வி, மருத்துவ சேவைகள் வழங்கிய பின்னரும் கூட டெல்லி அரசு பட்ஜெட் பாதிக்கப்படவில்லை. மாநிலத்தின் வருவாய் லாபத்தில் உள்ளது.
இவ்வாறு கேஜ்ரிவால் பதிலடி கொடுத்துள்ளார்.
இமாச்சலப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலை ஒட்டி ஆம் ஆத்மி 300 யூனிட் இலவச மின்சாரம் என்ற வாக்குறுதியை வழங்கியுள்ளது. பிரதமர் மோடி இதனை சுட்டிக்காட்டியே இன்று இலவச கலாச்சாரம் பற்றி பேசியதாகத் தெரிகிறது.