அரசுப் பேருந்துகள் இனி பயண வழியில் உள்ள அரசு லைசன்ஸ் பெற்ற சைவ உணவகங்களில் மட்டுமே நின்று செல்லலாம் என்று போக்குவரத்து கழகம் நிபந்தனை விதித்துள்ளதாக வெளியான தகவல் குறித்து அரசுப் போக்குவரத்துக் கழக முதன்மைச் செயலாளர் விளக்கம் அளித்துள்ளார்.
இது தொடர்பான விளக்கத்தில், “தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகப் பேருந்துகள் சாலையோர உணவகங்களில் பயணிகள் உணவு அருந்துவதற்கேற்ப பேருந்து நிறுத்துவது தொடர்பாக அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் மூலம் ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டது. அப்போது ஒப்பந்தப்புள்ளி நிபந்தனையில் ஒன்றாக ‘சைவ உணவு’ பயணிகளுக்கு பரிமாறப்பட வேண்டும் என குறிப்பிடப்பட்டு இருந்தது
இது குறித்து பேருந்து பயணிகளிடமிருந்து மாறுபட்ட கருத்தும் அசைவ உணவும் பரிமாறப்பட வேண்டும் என்ற கோரிக்கைகள் பெறப்பட்டதன் அடிப்படையில் ‘சைவ உணவு’ மட்டுமே சமைக்கப்பட வேண்டும் மற்றும் பரிமாறப்பட வேண்டும் என்ற ஒப்பந்தப்புள்ளி நிபந்தனை விலக்கிக் கொள்ளப்பட்டது என தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.
மேலும், ஏற்கெனவே இணையதளம் மூலம் பதிவேற்றம் செய்யப்பட்ட ஒப்பந்தப்புள்ளியும் விலக்கிக் கொள்ளப்பட்டது. சைவ உணவு மட்டும் பரிமாறப்பட வேண்டும் என்ற நிபந்தனை நீக்கப்பட்டு திருத்தம் செய்யப்பட்ட ஒப்பந்தப்புள்ளி அறிவிப்பு பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
4 நிபந்தனைகள்: புதிதாக விடுக்கப்பட்டுள்ள டெண்டரில் உணவக ஒப்பந்தம் கோர என்னென்ன அடிப்படை அம்சங்கள் தேவை என்பன பட்டியலிட்டப்பட்டுள்ளன. அவை:
> உணவகத்தில் பரிமாறப்படும் உணவு வகைகள் தரம் மற்றும் சுவை உள்ளதாக இருக்க வேண்டும். உணவகம் மற்றும் அதன் சுற்றுப்புறம் சுத்தமாக இருக்கும்படி பராமரிக்க வேண்டும்.
> பயணிகள் அருந்துவதற்கு சுத்திகரிக்கப்பட்ட குடி தண்ணீர் வழங்கப்பட வேண்டும். கழிப்பிட வசதி இலவசமாக இருக்க வேண்டும்.
> உணவகத்தில் உள்ள கழிவறை சுத்தமாகப் பராமரிக்கப்பட வேண்டும். மேலும் பயணிகளுக்கு கழிவறையில் தண்ணீர் வசதி எப்பொழுதும் இருக்க வேண்டும். கழிவறையை கம்ப்ரஷர் மூலம் தான் தண்ணீர் கொண்டு சுத்தம் செய்யப்பட வேண்டும். மேலும், பயோ கழிவறை இருக்க வேண்டும்.
> உணவகத்தின் அமைப்பு போக்குவரத்துக் கழகத்தின் பேருந்துகள் நின்று செல்வதற்கு போதுமான இடவசதியுடன் இருக்க வேண்டும். மேலும், பேருந்து நிறுத்தம் செய்யும் இடம் கான்க்ரீட் தளமாக அல்லது பேவர் பிளாக் போட்டிருக்க வேண்டும் ஆகிய 4 நிபந்தனைகள் குறிப்பிடப்பட்டுள்ளன.