செய்திகள்இந்தியா

‘கொள்கையில்லா மாநிலக் கட்சிகள்’ – ராகுலை விளாசும் கூட்டணிக் கட்சிகள்; சசி தரூர் விளக்கம்

மாநிலக் கட்சிகளுக்கு கொள்கை கிடையாது என்று பொருள்படும் வகையில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி பேசியது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், சசி தரூர் அது குறித்து விளக்கமளித்திருக்கிறார்.

ராஜஸ்தான் மாநிலம் உதய்ப்பூரில் காங்கிரஸ் கட்சியின் சிந்தனைக் கூட்டம் அண்மையில் நிறைவடைந்தது. சிந்தனைக் கூட்டத்தின் இறுதி நாளில் பங்கேற்ற காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, “பாஜக எப்போதும் காங்கிரஸ் பற்றி மட்டுமே விமர்சிக்கும், காங்கிரஸ் தலைவர்களை விமர்சிக்கும், ஏன் காங்கிரஸ் தொண்டர்களையும் கூட விமர்சிக்கும். ஆனால் ஒருபோதும் மாநிலக் கட்சிகள் பற்றி பேசவே பேசாது. ஏனெனில், மாநிலக் கட்சிகளின் நிலை என்னவென்று அவர்களுக்குத் (பாஜக) தெரியும். மாநிலக் கட்சிகளுக்கு கொள்கை இல்லை. அதனால் அவற்றால் பாஜகவை வீழ்த்தமுடியாது என்றும் அவர்களுக்குத் தெரியும் ” என்று பேசியிருந்தார்.

2024ல் நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்ளவுள்ள நிலையில் ராகுல் காந்தி மாநிலக் கட்சிகளை கொள்கையில்லாதவை என்று விமர்சித்துள்ளது மாநிலங்களில் அதன் கூட்டணிக் கட்சிகளை அதிருப்தியடையச் செய்துள்ளது. ஜார்க்கண்ட் மாநிலத்தில் காங்கிரஸுடன் கூட்டணியில் இருக்கும் ஜார்க்கண்ட் முக்தி மோர்சா மற்றும் பிஹாரில் கூட்டணியில் இருக்கும் ராஷ்ட்ரீய ஜனதா தலம் ஆகியன இந்த விமர்சனங்கள் குறித்து கேள்வி எழுப்பியுள்ளன. கர்நாடகாவின் மதச்சார்பற்ற ஜனதா தள கட்சித் தலைவர் ஹெச்.டி.குமாரசாமியும் ராகுலை விட்டுவைக்கவில்லை.

சசிதரூர் உதவிக்கரம்… ராகுல்காந்தியின் கருத்து விமர்சனங்களுக்கு உள்ளாகி வரும் சூழலில் காங்கிரஸ் எம்.பி. சசிதரூர் அதுகுறித்து விளக்கமளித்துள்ளார். தனியார் தொலைக்காட்சிக்கு இது தொடர்பாக அவர் அளித்தப் பேட்டியில், “ராகுல் காந்தியின் கருத்து தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டிருக்கிறது. காங்கிரஸ் ஒரு தேசிய கட்சி. அதனால் அதற்கு தேசம்தழுவிய பார்வை இருக்கும். நாங்கள் எப்போதுமே ஒட்டுமொத்த தேசத்திற்காகவே குரல் கொடுக்கிறோம். மாநிலக் கட்சிகள் அதன் இயல்பிற்கு ஏற்ப மாநிலப் பிரச்சினைகளில் அதிக கவனம் செலுத்தும். இந்த அர்த்தத்திலேயே அவர் பேசியிருக்கிறார். அப்படிப் பார்த்தால் திரிணமூல் காங்கிரஸ், ராஷ்ட்ரீய ஜனதா தளம், சமாஜ்வாடி கட்சி, திமுக ஆகிய மாநிலக் கட்சிகளின் கொள்கைகள் காங்கிரஸ் கட்சியின் கொள்கைகளுடன் ஒத்துப்போவதாகவே உள்ளது” என்றார்.

கட்சிகளின் விமர்சனம்..ராஷ்ட்ரீய ஜனதா தள கட்சியின் மனோஜ் ஜா, ” ராகுல்காந்தியின் பேச்சு விந்தையாக உள்ளது. 2024 நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி சகபயணியாக அமர்ந்து கொண்டு மாநில கட்சிகளுக்கு ஓட்டுநர் இருக்கையைத் தர வேண்டும். 543 நாடாளுமன்றத் தொகுதிகளில் 320 மாநிலக் கட்சிகளுடையது” என்று விமர்சித்துள்ளார்.

ஜார்க்கண்ட் முக்தி மோர்சா கட்சியும் ராகுல் கருத்தை கேள்விக்குள்ளாக்கி உள்ளது. ” மாநிலங்களில் பிழைத்திருக்க காங்கிரஸ் மாநிலக் கட்சிகளையே நம்பியிருக்கிறது என்பதை மறந்துவிட வேண்டாம்” என்று கூறியுள்ளது.

கர்நாடகாவின் மதச்சார்பற்ற ஜனதா தள கட்சித் தலைவர் ஹெச்.டி.குமாரசாமி, “காங்கிரஸ் கட்சிக்கு மாநிலக் கட்சிகளை வெறுக்கும் நோய் வந்துள்ளது. காங்கிரஸ் மத்தியில் 10 ஆண்டு காலம் ஆட்சியில் இருந்ததற்கு மாநிலக் கட்சிகளின் உதவியே காரணம் என்பதை மறந்துவிடக் கூடாது” என்று கூறியுள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button